இதுவரைக்கும் நாம் தமிழ் சினிமாவில் ஏராளமான கிராமத்துக் கதைகளைப் பார்த்திருக்கிறோம். ரசித்திருக்கிறோம்.. வியந்திருக்கிறோம். ஆனால் அறிவியல் பின்னணியில் கிராமத்துக் கதையைப் பார்த்திருக்கிறோமா? இதுவரையில்லையே..? இப்போது EYE CATCH MULTIMEDIA நிறுவனத்தின் தயாரிப்பில் அறிவியல் பின்னணியில் ஒரு கிராமத்துக் கதையாக உருவாகியிருக்கும் படம்தான் இந்த ‘அப்புச்சி கிராமம்’.
இப்படத்தில் பிரவீன் குமார், அனுஷா என்ற புதுமுகங்கள் ஹீரோ ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்கள். சுவாசிகா, சுஜா, கஞ்சா கருப்பு, சிங்கம் புலி, கும்கி ஜோசப், G.M.குமார், மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பம்பாய்’ படத்தில் இணைந்து நடித்த நாசர், கிட்டி இருவரும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் இணைந்து நடித்துள்ளனர். பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான BEN HUDSON-டம் பணிபுரிந்த பிரசாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷால்.C இசையமத்துள்ளார். இவர் ஏற்கெனவே ‘இனம்’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிஷ்கினின் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் கலை இயக்குனராக அறிமுகமான சதீஸ்குமார் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்துள்ளார். அறிவியல் பின்னணியைக் கொண்ட கதையாக இருந்தாலும் மிகவும் எளிய வார்த்தைகளால் வசனத்தை எழுதியுள்ளார் ஜினேஷ். படத்தொகுப்பை சசிகுமார் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் திறமையை பாலிவுட்டில் அதிர வைக்கும் வெற்றியின் மூலம் நிரூபித்த இயக்குனர் திரு.A.R.முருகதாஸிடம் துணை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் VI. ஆனந்த் கூறும்போது, “பிறந்த தேதியைத் தெரிந்து கொண்ட நமக்கு, நம்முடைய இறக்கும் தேதி தெரிந்தால் நம் வாழ்க்கையிலும் நமக்குள்ளும் எப்படியெல்லாம் மாற்றங்கள் ஏற்படும் என்பதே இந்த அப்புச்சி கிராமம் படத்தின் மையக் கரு…” என்கிறார்.
மேலும், “அறிவியல் புனைக் கதை என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் இப்படம் கவரும். திருப்பூர் அருகே பல்லடத்தின் பக்கத்தில் இருக்கும் வெங்கடாபுரம் என்ற கிராமத்தில்தான் பெரும்பாலானா காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன..” என்றார்.
படத்தின் டிரெயிலர் என்ன சொல்கிறதென்றால், “எங்கோ விண்வெளியில் வெடித்துச் சிதறிய விண் கல் ஒன்று அந்த ஊரில் வயல்காட்டில் வந்து விழுந்து நட்ட மல்லாக்க நின்றுவிடுகிறது.. சாமி, மந்திரம், ஆத்தா என்று சகல ஆன்மீகத்திலும் திளைத்திருக்கும் அந்தக் கிராமத்தினர் அதனை ‘சாமி வடிவில் வந்த நடுக்கல்’ என்கிறார்கள்.. விசாரணைக்கு வரும் அரசு அதிகாரிகள் ‘அது கொஞ்ச நாளில் வெடிக்கப் போகும் ஒரு அபாயகரமான கல்’ என்கிறார்கள்.. இதனை கிராமத்து மக்கள் ஏற்கவில்லை. இப்படி இரண்டுவிதமான நம்பிக்கைகளுக்கிடையில் நடக்கின்ற போராட்டம்தான் படமே. அப்படியே தியேட்டருக்கு கூட்டத்தைக் கூட்ட வழக்கமான காதல் கதையும் உண்டு…” என்கிறார்கள்..
எப்படியோ படம் வெற்றி பெற்றால் நமக்கு சந்தோஷம்தான்..