பொதுவாக ஒரு தமிழ்ச் சினிமா ரிலீஸாகி வெற்றி பெற்றுவிட்டால் இத்தனை கோடி அல்லது லட்சம் லாபம் என்பதை வெளிப்படையாகச் சொல்வார்கள்.. ஆனால் நஷ்டமடைந்தால் எத்தனை கோடி, லட்சங்கள் நஷ்டம் என்பதை மட்டும் சொல்லாமல் விட்டுவிடுவார்கள்..! அது அவமானமாம்..! வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்று நினைப்பார்கள்..!
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ திரைப்படம் வெளிவந்த வேகத்தில் சுருண்டது.. ‘அட்டர்பிளாப்’ என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகிவிட்டது அந்தப் படம்.. அந்தப் படத்தின் தோல்வி பற்றி இதுவரையில் வெளியில் பகிரங்கமாக எதுவும் பேசாத பாரதிராஜா, சேரனின் C2H நெட்வொர்க் அறிமுக நிகழ்ச்சி மேடையில் இந்தப் படம் பற்றிய சோகத்தை பகிர்ந்து கொண்டார்..
“பொம்மலாட்டம்’ன்னு ஒரு படத்தை எடுத்தேன்.. கொஞ்ச செலவுதான்.. ரொம்பக் கஷ்டப்பட்டு நிறைய சண்டையெல்லாம் வந்து.. அப்படி இப்படின்னு ஒரு வழியா முடிச்சிட்டேன்.
படத்தை ரிலீஸ் செய்யும்போது ஆள் யாருன்னு தெரியாம ஒரு ஆள்கிட்ட கொடுத்திட்டேன்.. அந்தாள் திடீர்ன்னு அந்தப் படத்தை எக்குத்தப்பா தப்பான நேரத்துல ரிலீஸ் பண்ணிட்டாரு.. எந்த ஏற்பாடும் இல்லாம படம் ரிலீஸாகி.. 2 நாள்.. 3 நாள்ன்னு ஓடி முடிஞ்சிருச்சு..
இன்னொன்னு.. இதை வெளில சொன்னா வெட்கக்கேடுதான். இருந்தாலும் உண்மையைச் சொல்றதுக்கு தைரியம் வேணும்ல. சொல்றேன்..
‘அன்னக்கொடி’ படத்தை ஒன்றரை கோடி செலவுல எடுத்தேன்.. தியேட்டர்ல வந்த வருமானமே 35 லட்சம்தான். அதிலேயே 15 லட்சத்தை ஒருத்தர்கிட்ட ஏமாந்துட்டேன். ‘என்கிட்ட கொடுத்திட்டேன் கொடுத்திடடேன்’னு இன்னிவரைக்கும் அந்தாளு சொல்லிக்கிட்டிருக்காரு. ‘இல்லடா.. வரவே இல்லடா.. கொடுக்கவே இல்லடா’ன்னு நானும் முடிஞ்ச அளவுக்கு கத்திப் பார்த்திட்டேன்.. இப்போவரைக்கும் அது என் கைக்கு வரவேயில்லை.
‘என்ன பாரதிராஜாவா ஏமாந்தான்’னு கேட்பீங்க..? ஆமாம்.. நான்தான் ஏமாந்துட்டேன்.. நானும் மனுஷன்தானய்யா…? தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரிடம் அந்த பணத்தைத் திருப்பி வாங்கித தரச் சொல்லி இப்பவும் கேட்டுட்டு இருக்கேன். அவரும் முயற்சி செஞ்சுக்கிட்டேயிருக்காரு. இன்னும் பணம் கைக்கு வந்தபாடில்லை..
இதுல சிலர் பேச்சைக் கேட்டு, அந்தப் படத்தோட பப்ளிசிட்டிக்காக கூடுதலா ஒன்றரை கோடி செலவு பண்ணேன். அதையாவது பண்ணாம இருந்திருந்தா, அந்தப் பணமாவது மிச்சமாயிருக்கும்.. இ்பபோ அதுவும் போச்சு..” என்றார் வருத்தத்துடன்.
கிட்டத்தட்ட 3 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட அன்னக்கொடியின் தியேட்டர் வசூல் 35 லட்சம். அதில் 20 பாரதிராஜாகிட்ட இருக்கு.. இன்னொரு 15 யாருகிட்ட இருக்கு..?