full screen background image

“எம்.ஜி.ஆர்., சிவாஜி பட்ட கஷ்டத்துக்கு முன்னாடி இதெல்லாம் ச்சும்மா..” – அறிவுரை சொன்ன சிங்கம்புலி..!

“எம்.ஜி.ஆர்., சிவாஜி பட்ட கஷ்டத்துக்கு முன்னாடி இதெல்லாம் ச்சும்மா..” – அறிவுரை சொன்ன சிங்கம்புலி..!

பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அஞ்சுக்கு ஒண்ணு.’ இத்திரைபடத்தை ஆர்வியார் இயக்கியுள்ளார். கட்டிட ‘வேலை செய்யும் கூலி தொழிலாளர்களின் வாழ்கையை மிக யதார்த்தமாக கூறியுள்ள படம் இது. கட்டிட வேலை செய்யும் ஐந்து இளைஞர்களின் வாழ்கையில் ஒரு பெண் வருகிறாள். அதன் பின் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது..’ என்பதுதான் கதை.

anjukku onnu movie stills

இதில் ஜெரால்டு, ராஜசேகர், அமர், நசீர், சித்தார்த், உமாஸ்ரீ, மேக்னா மற்றும் சிங்கம் புலி, முத்துக்காளை, உமா, கசாலி, ஷர்மிளா, காளையப்பன், சிவநாரயணமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு  – நந்து, படத்தொகுப்பு  – வி . பழனிவேல், இசை – சாகித்யா.ஆர்,  பாடல்கள்  – கானா பாலா, தொல்காப்பியன், கவிக்குமார். நடனம் – தீனா, காதர், அருண்குமார்., ஸ்டில்ஸ்  – அருண், டிசைன்ஸ்   – சிவா, தயாரிப்பு மேற்பார்வை – ரஞ்சித், கே. ஆர். பழனியப்பன், மக்கள் தொடர்பு  – எம்.பி. ஆனந்த், இணை  தயாரிப்பு  – எஸ்.எஸ். ராஜ், தயாரிப்பு  –  எவர்கிரின் எஸ். சண்முகம், இயக்கம்  – ஆர்வியார்.

இந்த ‘அஞ்சுக்கு ஒண்ணு’  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் எவர்கிரீன்.எஸ்.சண்முகம், இயக்குநர் ஆர்வியார், இசையமைப்பாளர் சாகித்யா உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர்.

IMG_2206

முதலில் படத்தின் டிரெயிலரும், பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன. பின்பு வரவேற்புரையாற்றிய தயாரிப்பாளர் சண்முகம், “இயக்குநர் சொன்ன பட்ஜெட்டில் சொன்னபடியே இந்தப் படத்தை முடித்து கொடுத்துள்ளார். இந்த படம் நன்றாக வந்துள்ளது, பாடல்கள் அனைத்தும் சிறப்பாகவுள்ளது. அதேபோல் படமும் சிறப்பாக வந்துள்ளது. என் போன்ற புதுமுக தயாரிப்பளருக்கு ஊடக நண்பர்களின் ஆதரவு வேண்டும்…” என்றார்.

அதனை தொடர்ந்து  பேசிய அனைத்து கதையின் நாயகர்களான 5 நடிகர்களுமே சொல்லி வைத்தாற்போல், “இயக்குநர் எங்களை 45 நாள் குளிக்கவிடாமலும், முக அலங்காரம்  செய்யவிடாமலும் செய்து எங்களை கட்டிட தொழிலாளர்களாகவே மாற்றிவிட்டார்..” என்றனர். “நாங்கள் ஒரு இராணுவத்தில் பணியாற்றியதைபோல் பணிபுரிந்தோம். இந்த படத்தின் அனுபவம் எப்போதும் எங்களால் மறக்க முடியாது..” என்றனர்.

IMG_2201

இவர்களுக்கு பதிலளிப்பது போல பின்னால் பேச வந்தார் நடிகர் சிங்கம்புலி. தனக்கு முன்பு பேசியவர்கள் பேசியதையெல்லாம் குறித்து வைத்துக் கொண்டு அவை அனைத்திற்கும் பதில்  சொல்லி கூட்டத்தை கலகலப்பாக்கினார்.

”எனக்கு முன்னாடி பேசிய ஹீரோக்களெல்லாம் குளிக்கல.. பல் வெளக்கலன்றதையெல்லாம் பெரிய தியாகம் செய்த மாதிரி சொன்னார்கள். இதெல்லாம் ஒரு பெரிய தியாகமா..? ‘நான் கடவுள்’ படத்துக்காக நான் ரெண்டரை வருஷம் ஒரே சட்டையை துவைக்காமல் போட்டுக்கிட்டு,. தாடி வளர்த்து நிஜமான  பிச்சைக்காரன் மாதியிருந்தேன்..

அந்தப் படத்துல ஒரு சீன்ல பிச்சையெடுக்குற மாதிரி நடிக்கணும். இதுக்காக  உண்மையான பிச்சைக்காரர்களை தேடிப் பிடிச்சு கூட்டிட்டு வந்தாங்க. நானும் அதே கோலத்துல அவங்களோட நடுவுல போய் உட்கார்ந்ததும் அங்கேயிருந்த ஒரு பொம்பள ‘நீ எந்த ஊர் கோவில்ன்னு’ கேட்டுச்சு. பதில் சொல்லாம நான் இருந்தும் விடலை.. கேள்வியை மாத்தி மாத்திக் கேக்குது.. ‘எந்த ஊர்ல இருந்து வர்ற..?’, ‘கடைசியா எந்த ஊர்க் கோவில்ல பிச்சையெடுத்த?’ன்னு.. இதையெல்லாம் சகிச்சுக்கிட்டுத்தான் நாங்களும் நடிச்சுக்கிட்டிருக்கோம்.

சினிமால சாதாரணமா எல்லாருக்கும் வெற்றி கிடைக்காது. எம்.ஜி.ஆரு.க்கு அவரோட நாடில சின்னதா ஒரு பள்ளம் இருக்கும். அதை இரட்டை நாடின்னு சொல்வாங்க. அது அழகாயில்லைன்னு நினைச்சு ஆரம்பத்துல எம்.ஜி.ஆருக்கு எல்லா படங்கள்லேயும் குளோஸப் ஷாட்டே வைக்க மாட்டாங்க. பின்னாடி அவர் ஹீரோவா நடிச்சப்போகூட சில படங்கள்ல அந்த இடத்துல  சின்ன ஒட்டு தாடியை வைச்சு மறைச்சாங்க. ஆனால் கடைசியில் அந்த இரட்டை நாடிப் பள்ளத்தை தெளிவா காட்டணுமேன்னு தனியா லைட்டிங் பண்ணி ஷூட் செஞ்சு கொண்டாடிய  உலகம்தான் இந்த சினிமா உலகம்.

சிவாஜி சார் எல்லாம் இன்னும் முப்பது, நாற்பது வருஷம் வாழ்ந்திருக்க வேண்டியவர். ஒழுங்கான மைக்கூட இல்லாத காலத்தில் ரொம்ப தூரத்தில் உட்கார்ந்திருக்கும் கடைசி வரிசை ரசிகனுக்கும் பேசுவது கேட்கவேண்டும் என்பதற்காக கத்திக் கத்திப் பேசி அவரோட ஆவி போனதால்தான் சீக்கிரம் மறைந்தார். ஆனா நாம இப்போ இப்படி டிஜிட்டல் மைக் உலகத்துல இருக்கோம்.

அவங்களெல்லாம் பட்ட கஷ்டத்துக்கு முன்னால இந்த மாதிரி பல்லு விளக்காதது, குளிக்காதது, பழைய துணியைப் போட்டது, எட்டு வருஷம் சினிமா சான்ஸ் தேடியதுன்றதெல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லை .

உங்களைவிட அதிக கஷ்டங்களை அதிக நாட்கள்பட்ட  பலரும் இன்னமும்கூட வாய்ப்பு கிடைக்காமல் இங்கே அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே உங்களுக்கு வாய்ப்புக் கொடுத்த இந்தப் படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் என்றென்றும் நன்றியோடு இருங்கள். அதுவே போதும்.. ” என்றார் .

IMG_2183

இயக்குநர் ஆர்வியார் பேசும்போது, “நான் தயாரிப்பளருக்கு சொன்ன பட்ஜெட்டில் சொன்னபடி படம் முடித்துக் கொடுத்துள்ளேன். அதனால்தான் அவர் எனக்கு அவருடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் எனக்கே அளித்துள்ளார். அந்த படத்திற்கு ‘அழுக்கு’ என்று பெயர் வைத்துள்ளேன்..” என்றார். 

கேள்வி பதில் சீஸனில், “அஞ்சுக்கு ஒண்ணு’ன்னு படத்துக்கு பேர் வச்சிருக்கீங்க. ஆனா படத்துல ஐந்து ஹீரோக்களும், இரண்டு ஹீரோயின்களும் இருக்கிறார்களே..?” என்று கேட்டதற்கு, ”அஞ்சு என்பது எண்ணிக்கை அல்ல. ‘அஞ்சம்மா’ என்பது ஹீரோயினின் பெயர். அதன் சுருக்கம்தான் அஞ்சு. அந்த அஞ்சம்மாவுக்கு , அதாவது அஞ்சுவுக்கு, இந்த ஐந்து பேரில் யார் கணவன் என்பதுதான் கதை..” என்றார் இயக்குநர்.

நல்ல கதைதான்..!

Our Score