தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பெரிய திரைக்கு வரும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் நடனம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் பெரும் பெயர் பெற்ற நடிகை ஜாக்குலின் பிரகாஷ்தான் இப்போதைக்கு கோடம்பாக்கத்திற்கு கிடைத்துள்ள புதிய வரவு.
இணையத்தளங்களில் வெளியான டீசர் மூலம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் ஜாக்குலின்.
‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தில் ஜாக்குலினின் பங்களிப்பு பற்றி பேசிய இயக்குநர் ஸ்ரீநாத் ராமிலிங்கம், “இந்தப் படத்தின் கதாநாயகி தேர்வு சற்று கடினமாகத்தான் இருந்தது. வெவ்வேறு பருவங்களில் மூன்று வித்தியாசமான பரிமாணங்களில் தோன்றும் பெண்தான் கதையின் நாயகி.
எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு இளம் பெண், பிரசவ வேதனை இடையே சமுதாயத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இடையே சிக்கி தவிக்கும் இளம் மனைவி, உயிரோடு இருக்கும் நோயுற்ற மகன் மற்றும் ஆவியாய் பழி வாங்க சுற்றும் மகள் ஆகியோர் இடையே பரிதவிக்கும் இளம் தாய் என்ற ஒரு தேர்ந்த நடிகைக்கே சவால் விடும் பாத்திர படைப்பு இது. இதை சிறப்பாக செய்த ஜாக்குலினுக்கு நல்ல திறமையான நடிகை என்ற பெயர் இந்தப் படத்தின் மூலமாக நிச்சயம் கிடைக்கும்…” என்றார்.
கதாநாயகி ஜாக்குலின் கூறும்போது, “என்னால் இப்பவும் நம்ப முடியவில்லை. நல்ல கதை, நல்ல திட்டமிடுதல் என்றாலும் இந்தக் காலக்கட்டத்தில் படம் எடுப்பதைவிட படம் வெளி ஆவதுதான் கடினம் என்று எல்ல்லோரும் அச்சமுறுத்திய வேளையில் படம் பார்த்த உடனே அதை வாங்கி வெளியிடும் தேதியை குறித்த Auraa cinemaas மகேஷுக்கு எனது நன்றி.
இந்தத் தருணத்தில் இரண்டு முக்கியமான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில்கூட இரவில் எங்கோ தொலைதூரத்தில் குழந்தை ஒன்று அழுவதுபோல் என் காதில் கேட்கும். இதனை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு அச்சம். பத்திரிகைகளில் மற்ற நடிகைகள் பேய் படங்களில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளும்போது , அதை கிண்டலடித்தவள் நான். இப்போது எனக்கே இப்படியொரு அனுபவமா என்று சிந்திக்க தொடங்கியபோது எனக்கு தோன்றியது என்னெவென்றால், முதல் படம் என்பதால் இரவும் பகலும் முழுக்க முழுக்க இந்த படத்தைப் பற்றிய சிந்தனையில் இருப்பதால்தான் இப்படி நடக்கிறது என்று புரிந்தது.
இதுகூட பரவாயில்லை.. இந்தப் படத்தில் நடித்ததற்கு பிறகு எனக்கு குழந்தைகளின் மீது அலாதி பிரியம் வர ஆரம்பித்தது. தாய்மை உணர்வும் மேலோங்க துவங்கியது.
என் சகோதரியின் குழந்தையை முன்பைவிட இப்போது அதிகமாக கண்ணும் கருத்துமாக கவனிக்க ஆரம்பித்தேன். படத்தில் இரண்டு வெவ்வேறுக் கால கட்டத்தில் தாயாக நடித்த அந்த உணர்வு என்னுள் மிஞ்சி கிடப்பதை இதன் மூலம் நான் உணர்ந்தேன்.
நடனக் கலைகளில் ஆர்வம் கொண்டுள்ள எனக்கு நடிக்கும்போது அந்த உணர்வை புரிந்து கொள்ளவும், நடிக்கவும் பெரிதும் உதவியது. சவாலான பாத்திரங்களில் சோபிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது
அதற்கு ஏற்றார் போலவே சமீபத்திய வரவுகளான புதிய இயக்குநர்கள் கதாநாயகிகளை வெறும் காட்சிப் பொருளாக பயன்படுத்துவது இல்லை. இது என்னை போன்ற நடிகைகளுக்கு பெரும் ஆசிர்வாதமாகும்.
‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தின் டீசர் வெளிவந்த நாளில் இருந்து எனக்கும், என் சக நடிகர் நடிகையருக்கும், எங்கள் இயக்குநர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் கிடைத்து வரும் வரவேற்பு பிரமாதம். படம் வெளி வந்த பின்னரும் இது கூடும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
எனது நடிகையாக வேண்டும் என்கிற கனவை, இந்தப் படத்தின் மூலம் நிறைவேற்றிய இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் அவர்களுக்கும் தயாரிப்பாளர் சானுக்கும் எனது மனமார்ந்த நன்றி..” என்று தெள்ள தெளிவான தமிழில் கூறினார் ஜாக்குலின்.











