full screen background image

‘அஞ்சானு’க்கு சென்சார் சான்றிதழ் பெற லஞ்சமா..?

‘அஞ்சானு’க்கு சென்சார் சான்றிதழ் பெற லஞ்சமா..?

மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைமை செயல் அலுவலர் ராகேஷ்குமார் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கடந்த 18-ம் தேதி கைது செய்யப்பட்டிருப்பதை முன்பேயே சொல்லியிருந்தோம்.

முதலில் மத்திய சினிமா தணிக்கை வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் சர்வேஷ் ஜெய்ஸ்வால் மற்றும் ஏஜெண்டு ஸ்ரீபதி மிஸ்ரா ஆகியோரை லஞ்ச ஊழல் வழக்கில் கடந்த 14–ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களை விசாரித்தபோதுதான் ராகேஷ் சர்மாவின் தொடர்பு பற்றி சி.பி.ஐ.-க்கு தெரிய வர அவரையும் கைது செய்தது சி.பி.ஐ.

இவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரித்தது சி.பி.ஐ. பின்பு விசாரணை முடிந்து நேற்று இவர்களை மும்பையில் இருக்கும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது சி.பி.ஐ. போலீஸ்.

அப்போது தற்போது தமிழ், தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்துக்கு சான்றிதழ் வழங்க மடிக்கணினி மற்றும் ஐ–பேடு ஆகியவற்றை மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ் குமார் பரிசாக வாங்கி இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் அந்த சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தெரிவித்தனர்.

மேலும், “அஞ்சான்’ படம் தணிக்கைக்காக கடந்த ஜூலை மாதம் 24–ந் தேதி அவரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் 6 நாட்கள் இருப்பில் வைத்து அதன் பின்னர்தான் அந்த படத்தை சோதனைக்கு உட்படுத்தி இருக்கிறார்.

இவ்வாறு நடைமுறைகளை முடித்த பின்னர் கடந்த 5–ந் தேதி அஞ்சான் படத்துக்கு சான்றிதழ் வழங்கி இருக்கிறார். இது தவிர கடந்த 9–ந் தேதி அஞ்சானின் தெலுங்கு பதிப்பான ‘சிக்கந்தர்’ படத்துக்கு சான்றிதழ் வழங்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமும் பெற்றிருக்கிறார்…” என்றும் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சி.பி.ஐ.யின் இந்தக் குற்றச்சாட்டு பாலிவுட் மட்டுமில்லாமல் கோடம்பாக்கத்திலும் கொஞ்சம் அதிர்ச்சியாகப் பேசப்படுகிறது. சினிமா சான்றிதழ்கள் பெறுவதற்கு லஞ்சம் விளையாடுகிறது என்கிற பேச்சு சமீப ஆண்டுகளாகவே கோடம்பாக்கத்தில் உலவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை சென்சார் போர்டு அதிகாரி லஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்..

2 மாதங்களுக்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் ‘யு டிவி’ நிறுவனம் இப்படியொரு செயலை செய்திருக்குமா என்று பாலிவுட்டில் பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பல திரைப்படங்கள் கியூவில் நிற்பதால் சென்னையில் சென்சாருக்கு விண்ணப்பித்தால், ஆகஸ்ட் 15-க்குள் அது கிடைக்காது என்று நினைத்தே மும்பை சென்சார் போர்டுக்கு விண்ணப்பித்தது யு டிவி. இப்போது இப்படியொரு பிரச்சினை..?

‘அஞ்சான்’ படத்துக்கு ஏற்கெனவே நெகட்டிவ் கமெண்ட்டுகளை போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கும் வேளையில்… இந்தப் பிரச்சினையும் வந்திருப்பதால் ‘அஞ்சான்’ டீம் இதனை கவலையுடன் எதிர்நோக்கியுள்ளது..!

Our Score