நடிகரும், இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் சமீபத்தில் இயக்கி வெளியிட்ட ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் திருட்டு விசிடிகள் பர்மா பஜாரில் விற்பனை செய்வதைத் தெரிந்து கொண்டு தனது உதவியாளர்கள் உதவியுடன் அங்கே சென்று அந்த வியாபாரிகளை கையும், களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். இது குறித்து அவர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அந்தச் சந்திப்பில் அவர் பேசியபோது, “சென்னை பர்மா பஜார் கடை வீதிகளில் எனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தின் திருட்டு விசிடி அதிகமாக விற்பனையாகிறது என்று தகவல் கிடைத்தது. இதற்கு என்று உருவாக்கப்பட்ட ரகசிய அறைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருட்டு விசிடிகள் குவிக்கப்பட்டிருந்தன.
காவல்துறை உதவியுடன் நேரடியாகச் சென்று அவற்றை கைப்பற்றி வந்தேன். இது மாதிரி சமயங்களில் கைது செய்யப்படுவது தொழிலாளியாகத்தான் இருக்கிறார். எந்த முதலாளியும் கைது ஆவதில்லை..
பிடிபட்டவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, கோவை பகுதியில் உள்ள அன்னூரில் ‘அஷ்டலட்சுமி’ என்னும் தியேட்டரில்தான் இந்த திருட்டு விசிடி எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக முறைப்படி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் திரையரங்கத்திற்கு சீல் வைக்கப்பட இருக்கிறது. மேலும் அந்தத் திரையரங்க உரிமையாளர் கைது செய்யப்படலாம். இது மனதுக்கு வருத்தமாக இருந்தாலும் வேறு வழியில்லை.
இதகேபோல் சென்னை அண்ணா நகர் பர்மா பஜாரில் கடைவீதிக்குச் சென்றபோது அங்கிருந்த வியாபாரிகள் கடையை அடைத்துவிட்டு ஓட்டம் பிடித்தனர். நான் அவர்களிடம் ஏன் இந்த ஈனப் பிழைப்பு என்று கோபத்தில் கத்தினேன். உடனே மறைந்திருந்த வியாபாரிகள் கோபத்துடன் என்னை சூழ்ந்து கொண்டனர். பிறகு காவல்துறை உதவியுடன் நான் மீண்டு வந்தேன். என்னுடைய வேட்டை இன்னும் தொடரும்.
இது நான் மட்டும் சினிமாவிலிருந்து போராடினால் போதாது. திரையுலகமே ஒற்றுமையுடன் ஒன்று சேர வேண்டும். ஆனால் அப்படி நடக்காததுதான் திருட்டு விசிடி வியாபாரிகளுக்கு வசதியாகிவிட்டது. அவர்களை எதிர்கொள்ள ஒரே வழி.. என்னுடைய இந்தப் படத்தின் ஒரிஜினல் சிடியை நானே இன்னும் சில தினங்கள் வெளியிடப் போகிறேன்..” என்றார் பார்த்திபன்.
இதுதான் நல்ல முடிவு. ஒரு படத்தின் ஒரிஜினல் டிவிடியை படம் ரிலீஸான அன்றைக்கே வெளியிட்டாலே… ஆடியோ வெளியீட்டில் கிடைக்கின்ற பணம் போல இதிலும் கொஞ்சம் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. இயக்குநர் சேரனின் C2H திட்டம்போல் அதனை முறைப்படுத்தினால் இந்த ஒரிஜினல் டிவிடி வெளியிட்டீலேயே சில லட்சங்களை லாபமாக பார்க்கலாம்..
தியேட்டருக்கு வரும் கூட்டம் குறையுமே என்று யோசிக்க வேண்டாம்.. மாற்று வழியில்லாதபோது குறைந்தபட்ச நஷ்டத்தை சம்பாதிப்பதுதான் புத்திசாலித்தனம்..!
அண்ணன் பார்த்திபனின் ரெய்டு 2-வது வீடியோ காட்சி..!