‘‘என்னை புரிந்து கொண்ட ஒரே கதாநாயகன் விமல்தான்..” – நடிகை அஞ்சலியின் பேட்டி

‘‘என்னை புரிந்து கொண்ட ஒரே கதாநாயகன் விமல்தான்..” – நடிகை அஞ்சலியின் பேட்டி

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘மாப்ள சிங்கம்’ படம் வரும் மார்ச் 11-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.

விமல் – அஞ்சலி இருவரும் ஏற்கனவே ‘தூங்கா நகரம்’, ‘கலகலப்பு’ ஆகிய இரண்டு படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இப்போது 3-வது முறையாக ‘மாப்ள சிங்கம்’ படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். 

இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி, அஞ்சலி – விமல் இருவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்கள்.

அப்போது அஞ்சலி பேசும்போது, “விமல் என்னுடைய நீண்ட கால நண்பர் அவரை எனக்கு ரொம்ப நாட்களாக தெரியும். பழகுவதற்கு இனியவர். என்னை புரிந்து கொண்ட கதாநாயகன் விமல். அதனால்தான், அவருடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறேன். படப்பிடிப்பின்போது உடன் நடிப்பவர்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பார். அவருடன் நடிப்பதற்கு சவுகரியமாக இருக்கும்.

என்னை நயன்தாராவுக்கு போட்டியாக தயாரிப்பாளர்கள் உருவாக்குகிறார்கள் என்று பேசப்படுவதில் எனக்கு வருத்தம் எதுவும் இல்லை, சந்தோஷம்தான். போட்டி இருந்தால்தான், ஆரோக்கியமாக இருக்கும். எனக்கு நிறைய படங்கள் ஒப்பந்தமாவது உண்மைதான். அவற்றில் சிறந்த கதையம்சமும், நல்ல கதாபாத்திரங்களும் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.

நான் நடித்த சில படங்களில் குண்டாக தெரிவதாக நண்பர்கள் சொன்னார்கள். எனவே உடல் எடையை குறைக்க முயற்சி செய்து வருகிறேன். இதுவரை 6 கிலோ எடையை குறைத்து இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் மெலியவேண்டும் என்று நினைத்துள்ளேன்.

‘கீதாஞ்சலி’ என்ற தெலுங்கு படத்தில் நான் பேய் வேடத்தில் நடித்தேன். அது ஒரு புது அனுபவமாக இருந்தது. நிஜ வாழ்க்கையில், நான் பேய்க்கு பயப்பட மாட்டேன். தமிழில் இப்போது ‘இறைவி’, ‘பேரன்பு’, ‘தரமணி’, ‘காண்பது பொய்’ ஆகிய படங்களில் நடிக்கிறேன். இதில் ‘காண்பது பொய்’ திகில் படம். ஆனால் பேய் படம் அல்ல. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்..” என்றார் அஞ்சலி. 

நிகழ்ச்சியில் விமல் பேசும்போது, “இந்த ‘மாப்ள சிங்கம்’ படம் ஜனரஞ்சகமான, கதையம்சம் கொண்ட படம். காதலும், நகைச்சுவையும் கலந்த கதை. கொஞ்சம் அரசியலும் இருக்கிறது. இதில் நான் பஞ்சாயத்து தலைவரின் மகனாக நடிக்கிறேன். படத்தின் கதைப்படி நானும், அஞ்சலியும் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறோம். அதிலிருந்து எப்படி இருவரும் வெளியே வருகிறோம் என்பதுதான் கதை. அது என்ன பிரச்சினைறதை படத்துல பார்த்து தெரிஞ்சுக்குங்க.

அஞ்சலி ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் சரளமாக பேசுவார். எனக்கு தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அதனால் அஞ்சலியுடன் பேசி பழகுவதற்கு வசதியாக இருக்கிறது..” என்றார் விமல்.

இந்தப் பேட்டியின்போது ‘மாப்ள சிங்கம்’ படத்தின் டைரக்டர் ராஜசேகர், தயாரிப்பாளர் பி.மதன், இசையமைப்பாளர் ரகுநந்தன், பாடலாசிரியர் யுகபாரதி, நடிகர்கள் விஷ்ணு, காளி வெங்கட், சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தார்கள். 

Our Score