full screen background image

‘ஈஸ்வரன்’ படத்தின் போஸ்டர், டீசருக்கு விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது

‘ஈஸ்வரன்’ படத்தின் போஸ்டர், டீசருக்கு விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது

தமிழ்ச் சினிமாவில் விலங்குகளை வைத்து படம் எடுப்பதே தற்போது குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் கதை பஞ்சமல்ல. டெல்லியில் இருக்கும் ‘விலங்குகள் நல வாரியம்’ செய்யும் அட்டூழியம்தான்.

மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ஒரு உத்தரவின்படி திரைப்படங்களில் வன விலங்குகளைப் பயன்படுத்தினால் அதற்கு விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து ‘ஆட்சேபணையில்லை’ என்னும் ஒப்புதல் கடிதத்தைப் பெற வேண்டும் என்பதுதான்.

இதற்காக எந்த விலங்கைப் பயன்படுத்துகிறோம்.. எத்தனை நாட்கள் பயன்படுத்துகிறோம்.. எப்படி நடிக்க வைக்கிறோம்.. படப்பிடிப்பு நடைபெறும் நாட்களில் கால்நடை மருத்துவர் உடன் இருக்கிறாரா போன்ற விவரங்களையெல்லாம் அளித்தால்தான் அந்த அனுமதி கடிதமே கிடைக்கும்.

தற்போது நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் திண்டுக்கல்லில் உருவானது ‘ஈஸ்வரன்’ திரைப்படம்.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில் மரக் கிளை ஒன்றில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வது போலவும், அந்தப் பாம்பை சிம்பு தன் கையால் பிடித்து சாக்குப் பையில் போடுவது போலவும் காட்சி படமானது. இந்தக் காட்சியை படத்தின் விளம்பரத்திற்காக வீடியோவில் வெளியிட்டார்கள். அதுவே இப்போது வினையாகிவிட்டது.

“விலங்குகளை கிராபிக்ஸ் காட்சியில் காட்டினாலும் தடையில்லா சான்று பெற்ற பின்னரே பயன்படுத்த முடியும்…” என்ற விதி இருப்பதை மத்திய விலங்குகள் நல வாரியம் சுட்டிக் காட்டி, இது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க படக் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

“அதுவரையிலும் ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை வெளியிடக்கூடாது” என்றும் உத்தரவிட்டுள்ளது மத்திய விலங்குகள் நல வாரியம்.

Our Score