ஆறாம் திணை ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.வி.சாந்தி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஏஞ்சலினா’.
க்ரிஷா குரூப், சரண் சஞ்சய், சூரி, தேவதர்ஷினி மற்றும் பிரபல நடிகர்கள் பலர் நடித்திருக்கும் இந்த ‘ஏஞ்சலினா’ திரைப்படம், காதல் அம்சங்களை கொண்ட ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் வகை படம்.
ஒளிப்பதிவு – ஏ.ஆர்.சூர்யா, படத் தொகுப்பு – தியாகு, கலை இயக்கம் – ஜி.சி.ஆனந்தன், இசை – டி.இமான், பாடல்கள் – விவேகா, கபிலன், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் – ஷோபி, எழுத்து, இயக்கம் – சுசீந்திரன்.
இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் இந்த ‘ஏஞ்சலினா’ திரைப்படம் தமிழ்த் திரையுலகத்தில் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ஏனெனில், அவரது முந்தைய திரைப்படங்களில் ஒன்றான ‘ஆதலால் காதல் செய்வீர்’ இதே மாதிரி வண்ணமயமான, இளமைத் தன்மையை கொண்ட அதே நேரத்தில், ஒரு அழுத்தமான கருத்தை கொண்டிருந்தது.
சமீபத்தில் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தில் நடித்ததற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்தைப் பற்றிக் கூறும்போது, “ஏஞ்சலினா அடிப்படையில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். படமே ஒரு விசாரணையில்தான் துவங்குகிறது. அதே சமயத்தில் இளைஞர்களின் கதாபாத்திரங்களை உள்ளடக்கிய கதையையும் இதில் நான் கலந்து சொல்லியிருக்கிறேன்.
இருப்பினும், படத்தின் மையக் கரு ஒரு பெண் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற சமூக விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டது.
இந்த படம் விசாரணை மூலம் நகரும் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் என்பதால் படத்தின் நீளம் என்ன என்பதை அறிய அனைவருக்கும் ஆவல் இருக்கும். ஆம், இது 1 மணி நேரம் 50 நிமிடங்கள் மட்டுமே ஓடும் படம். மிகவும் வேகமாக, ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும்…” என்றார்.
இந்த ‘ஏஞ்சலினா’ படத்தை, ‘பிக்சர் பாக்ஸ்’ கம்பெனியின் சார்பில் பிரபல விநியோகஸ்தரான அலெக்ஸாண்டர் வெளியிட இருக்கிறார்.











