full screen background image

‘அனேகன்’ படத்துக்கும் வந்தது சிக்கல்..!

‘அனேகன்’ படத்துக்கும் வந்தது சிக்கல்..!

தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்துக்கு தடை கோரி மதுரை போலீஸ் கமிஷனரிடம் சலவைத் தொழிலாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் படம் ‘அனேகன்’. இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தில் ‘டோபி’ என்றழைக்கப்படும் சலவைத் தொழிலாளியாக நடித்திருக்கிறார் தனுஷ். 

அந்த கேரக்டர் பேசும் சில வசனங்களும், டங்காமாரி என்கிற பாடலில் எழுதப்பட்டிருக்கும் சில பாடல் வரிகளும் தங்களது சமூகத்தை கேவலமாக சித்தரிப்பதாக சலவைத் தொழிலாளர்கள் சிலர் வருத்தப்பட்டிருக்கிறார்கள்.

இதனால் மதுரை வண்டியூரைச் சேர்ந்த வக்கீல் சாலின்மணி, கே.கே.நகர் வக்கீல் ரமேஷ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரை இன்று சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், “இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த படத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

எனவே அந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட தடை விதிக்க வேண்டும். படத்தில் இழிவு வசனங்கள் இடம் பெறச் செய்த இயக்குனர் கே.வி.ஆனந்த், அதை பேசி நடித்த நடிகர்கள் ஜெகன், தனுஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று கேட்டுள்ளார்களாம்.

மனுவை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் சஞ்சய் மாத்தூர் அவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

ஆளாளுக்கு கூட்டத்தைக் கூட்டி மனு கொடுப்பதை பார்த்தால், இனிமேல் மெளனப் படமாகத்தான் எடுக்க வேண்டும் போலிருக்கிறது..!

கருத்து சுதந்திரத்திற்கு இந்தியாவில் இடமே இல்லையா..?

Our Score