சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புக்கு செயல்படாத அரசாங்கமே என்று கூறிய நடிகர் கமல்ஹாசனை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கை மூலம் மறைமுகமாக மிரட்டியுள்ளார் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் ஏற்பட்டுள்ள பேரழிவு நிலைக்கு செயல்படாத காரணம் என்கிற உண்மையை வெளிப்படையாக சொன்னார் நடிகர் கமல்ஹாசன். அதற்காக அவர்மீது பாய்ந்துள்ளார் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
‘மழை வெள்ளத்தால் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை, இயற்கை பேரிடர் என்பது குறைத்து மதிப்பிடும் வார்த்தை. சென்னைக்கே இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளையும் கற்பனை செய்து பாருங்கள்? ஒட்டுமொத்த நிர்வாகமும் குலைந்து போய்க் கிடக்கிறது, மழை நின்றாலும் சென்னை இதிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகலாம். மக்களின் வரிப் பணம் எங்குச் செல்கிறது எனத் தெரியவில்லை’ – என்று தனது நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் நடிகர் கமல்ஹாசன்.
இதற்காக அவரை மிரட்டுவது போன்று ‘‘கருத்து கந்தசாமி கமல்ஹாசன் குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி பிதற்றுகிறார்’’ என்று அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி அறிக்கை வெளியிட்டுள்ளார். கமலின் விஸ்வரூபம் படப் பிரச்னையை தீர்த்துவைத்த முதலமைச்சருக்கு கமல்ஹாசன் நன்றி கூறியதை மறந்துவிட்டு இப்போது அறிக்கை விடுவதாக கூறியிருப்பதன் மூலம், நடிகர் கமல்ஹாசனை மறைமுகமாக மிரட்டியுள்ளார் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
தமிழ்நாட்டின் குடிமகன் என்கிற அடிப்படையில், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அதிக வரிக்கட்டும் நபர்களில் ஒருவரான நடிகர் கமல்ஹாசன், தனது வரிப் பணம் என்ன ஆனது என்று கேட்பது நியாயமானதும்கூட. நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு பதில் அளிப்பதாக இருந்தால், இந்த மழை வெள்ளத்தை தடுப்பதற்காக தமிழக அரசு என்னவெல்லாம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது என்று பட்டியலிட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து, கேள்வி கேட்கும் குடிமக்களையே பதில் கேள்வி கேட்பது ஒரு நல்ல ஜனநாயக அரசாங்கமாக இருக்க முடியாது.
வாக்களித்த மக்கள் கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கிறார்கள். அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் இடத்தில் இருக்கிறார்கள். ஆனால், இந்த ஜனநாயக பண்பாட்டை நாம் அதிமுக – திமுக ஆகிய கட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது. மக்களின் கருத்தை பிரதிபலித்த நடிகர் கமல்ஹாசன் கருத்தை நான் ஆதரிக்கிறேன்…” என்று தெரிவித்துள்ளார்.