மிகச் சிறந்த குடும்ப திரைப்படங்கள் மற்றும் தரமான கதைகளை வெற்றி திரைப்படங்களாக தொடர்ந்து தந்து, தமிழ் சினிமாவில் பல தலைமுறைகளாக மிகப் பெரும் நடிகர்களுடன், எம்.ஜி.ஆர்., துவங்கி சூப்பர் ஸ்டார் ரஜினி, ‘தல’ அஜித்குமார், தனுஷ் வரையில் பயணித்து, மிகப் பெரிய ஹிட் படங்களைத் தந்து தனக்கென ஒரு தனித்தப் பெயரை தமிழ்த் திரையுலகில் பெற்றுள்ளது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்.
தற்போது இந்நிறுவனம் வளர்ந்து வரும் இளம்தலைமுறை நடிகரான நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் ‘அன்பறிவு’ படத்தை தயாரிக்கிறது.
காஷ்மீரா, விதார்த், நெப்போலியன், சாய்குமார், ஊர்வசி, விஜய் டீவி தீனா, சங்கீதா மற்றும் பல முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E.ராகவ் படத் தொகுப்பு செய்கிறார். பொன் பார்த்திபன் எழுத்து பணியை செய்துள்ளார். சண்டை இயக்கத்தை தினேஷ் சுப்பராயன் செய்ய, S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். பூர்ணிமா ராமசாமி உடை வடிவமைப்பு செய்துள்ளார். G.சரவணன், சாய் சித்தார்த் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
புதுமுக இயக்குநர் அஷ்வின் ராம் இப்படத்தினை இயக்குகிறார்.
தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் பேசும்போது, “சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் எப்போதும் குடும்பங்கள் கொண்டாடும் படைப்புகளை, தருவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறது.
அப்படைப்புகள் எப்போதும் எங்களுக்கு மிகப் பெரும் பாராட்டையும், வரவேற்பையும் ரசிகரகளிடம் இருந்து பெற்று தந்துள்ளது. எங்களுக்கு குவியும் பாராட்டுக்கள், மேலும் அழகான படைப்புகளை தர எங்களது நிறுவனத்திற்குப் பெரும் ஊக்கமாக தந்துள்ளது.
இந்த ஊக்கத்தின் விளைவாக எங்களது அடுத்த படைப்பாக ‘அன்பறிவு’ என்னும் படத்தை அறிவிப்பதில் இன்றைக்கு பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.
மிகக் குறுகிய கால திரைப் பயணத்தில் குடும்பங்களுக்கு பிடித்த நடிகராக ‘ஹிப் ஹாப்’ ஆதி மாறியிருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் மாற்றியிருக்கிறது. விநியோக களத்திலும் அவர் மிக நல்ல பெயரைப் பெற்றிருக்கிறார்.
இந்த “அன்பறிவு” படம் அவரை தமிழகத்தின் அனைத்து குடும்பங்களிலும் கொண்டு சேர்க்கும், இப்படம் அவரது திரை வாழ்விலும் ஒரு பெரிய திருப்பு முனையாக இருக்கும்.
இயக்குநர் அஷ்வின் ராம் இந்தப் படத்தின் திரைக்கதையை என்னிடம் கூறியபோது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. இந்தக் கதையில் குடும்பங்கள் ரசிக்கும் அனைத்து அம்சங்களும் சரி விகிதத்தில் கலந்துள்ளது. தரமான கதையும் அதனோடு கமர்ஷியல் அமசங்களும் நிறைந்திருந்தது.
நடிகர் நெப்போலியன் இப்படத்தில் மிக முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவர் அமெரிக்கவில் செட்டிலாகிவிட்டார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விசயம், இப்படத்திற்காக அவர் இங்கு வருவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவர் அந்தக் கதாப்பாத்திரத்தை கேட்டவுடன் எங்களை ஆச்சர்யப்படுத்தும்வகையில் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு பறந்து வந்து, முழுக் கதையையும் கேட்டுவிட்டு நடிப்பதற்கு சம்மதம் சொன்னார். இப்படம் மிகப் பெரும் வெற்றியை பெறுமென நம்புகிறோம்…” என்றார்.
இயக்குநர் அஷ்வின் ராம் பேசும்போது, “இப்படம் நகைச்சுவை அம்சங்களும், உறவுகளிடையேயான உணர்வுகளையும் கமர்ஷியல் அம்சத்துடன் கலந்து சொல்லும்.
நடிகர் ‘ஹிப் ஹாப்’ ஆதி ஏற்கும் கதாப்பத்திரம் அனைத்து வயதினரையும் கவரும் இப்படம் அவர் வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும்.
நடிகர் விதார்த் திருப்பு முனை ஏற்படுத்தும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். வித்தியாசமான கதைக் களங்களைத் தேடி நடிக்கும் நடிகர் விதார்த்தின் திரைப் பயணத்தில் இத்திரைப்படம் மற்றுமொரு மகுடமாக இருக்கும்…” என்றார்.