full screen background image

நடிகர் கார்த்திக்கின் ‘அமரன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது..!

நடிகர் கார்த்திக்கின் ‘அமரன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது..!

மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு ‘அனேகன்’ படத்தில் வில்லன் வேடத்திற்காக அரிதாரம் பூசிய ‘நவரச நாயகன்’ கார்த்திக் இப்போது திரும்பவும் ஹீரோவாக நடிக்கப் போகிறார்.

1992-ம் ஆண்டு வெளியான ‘அமரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கப் போகிறாராம். இயக்குநர் ராஜேஷ்வர் இயக்கிய இந்தப் படத்தில் கார்த்திக்குடன் பானுபிரியா, ராதாரவி, விஜயகுமார், ஷம்மி கபூர், பிரதாப் போத்தன், மஞ்சுளா விஜயகுமார்,  இவர்களுடன் ஒரு அசத்தலான ரோலில் சில்க் ஸ்மிதாவும் நடித்திருந்தார்.

ஆதித்யன், விஷ்வகுரு இரட்டையர்களின் இசையமைப்பில் படத்தின் பாடல்களும் ஹிட்டானவைதான். ‘வெத்தல போட்ட ஷோக்குல’ பாடலை கார்த்திக்கே பாடியிருந்தார். இது கார்த்திக் பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘சந்திரனே சூரியனே’, ‘முஸ்தபா முஸ்தபா’, ‘ வசந்தமே அருகில் வா’ ஆகிய பாடல்களும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன.

வில்லன் ஆண்டவபெருமாளாக நடித்திருந்த நடிகர் ராதாரவியின் மேக்கப்பும், நடிப்பும் இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. ராதாரவியின் கேரியரில் இதுவும் ஒரு முக்கியமான படம். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். படம் 1992 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வெளியாகி 100 நாட்களுக்கும் மேல் ஓடியது.

சிறப்பான திரைக்கதையாலும், பாடல்களாலும், இயக்கத்தினாலும் கார்த்திக்கின் வெற்றிப் படங்களில் ஒன்றானது இந்தப் படம். 

இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் ராஜேஷ்வர் முடிவு செய்திருக்கிறாராம். இதற்கு கார்த்திக்கும் ஒத்துக் கொள்ள.. தற்போது கதை டிஸ்கஷன் நடந்து வருகிறதாம். “மிக விரைவில் துவக்க விழா செய்திகளை வெளியிடுகிறேன்…” என்று தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் நடிகர் கார்த்திக்.

Our Score