‘லிங்கா’ பட விவகாரம் வரும்காலங்களில் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் என்று மூன்று முக்கிய அமைப்புகளில் பேசப்பட்டு வருகிறது.
விநியோக முறைகளில் மாற்றம் செய்தாலே இது போன்ற பிரச்சினைகளை எதிர்காலத்தில் முற்றிலும் தவிர்த்துவிடலாம் என்று திரையுலகில் பலரும் பேசி வருகிறார்கள்.
இது போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க.. இனி வரும் காலங்களில் முழுக்க, முழுக்க விகிதாச்சார முறையிலேயே படங்களை திரையரங்குகளில் திரையிடலாம் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் இது குறித்து கூறுகையில், “சென்னை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி நகரம் ஆகிய திரைப்பட விநியோகப் பகுதிகளில் தற்போது விகிதாச்சார அடிப்டையிலேயே படங்கள் திரையிடப்படுகின்றன.
இதே போன்று தமிழ்நாடு முழுமையும் விகிதாச்சார அடிப்படையிலேயே இனி வரும் காலங்களிலும் புதிய படங்களைத் திரையிட தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம், விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க உள்ளது.
இதன் மூலம் நடிகர்களுடைய சம்பளத்தையும், தயாரிப்புச் செலவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். தொடர்ச்சியாக நஷ்டப்பட்டு வரும், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் கஷ்டம் போக்கப்படும்..” என்று தெரிவித்துள்ளார்.
சிறப்பான முடிவுதான்.. சீக்கிரம் அமல்படுத்தினால் தமிழ்த் திரையுலகத்திற்கு நல்லது..!