full screen background image

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு அறிமுகமாகும் ‘அல்டி’ படத்திற்கு விஜய் சேதுபதியின் பாராட்டு..!

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு அறிமுகமாகும் ‘அல்டி’ படத்திற்கு விஜய் சேதுபதியின் பாராட்டு..!

NSR FILM FACTORY நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷேக் முகம்மது, ரஹ்மத்துல்லா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘அல்டி’.

இந்தப் படத்தில் பிரபல நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி நாயகனாக அறிமுகமாகிறார். மணிஷா ஜித் நாயகியாக நடிக்கிறார். மேலும், சென்றாயன், யாஸி, ராபர்ட், மாரிமுத்து, ஏ.வெங்கடேஷ், ‘பசங்க’ சிவக்குமார், செந்திகுமாரி, ‘மிப்பு’ சாமி, சேதுபதி ஜெயச்சந்திரன், நெல்லை சிவா, டி.எஸ்.ஆர். மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஆறுமுகம், இசை – காந்த் தேவா, படத் தொகுப்பு – வில்சி, நடன இயக்கம் – ராபர்ட், சண்டை இயக்கம் – ஜாக்கி ஜான்ஸன், கலை இயக்கம் – சிவா, விளம்பர வடிவமைப்பு – ஜே.ஏ.அப்துல், மக்கள் தொடர்பு – பிரியா, தயாரிப்பு நிர்வாகி – ஜெகன், தயாரிப்பாளர்கள்  – ஷேக் முகமது, ரஹ்மத்துல்லா, இணை தயாரிப்பு – ஜோதி பாசு, சதக்கத்துல்லா, சாய் சசி குமரன், எழுத்து, இயக்கம் – எம்.ஜே.ஹூசைன்.

இந்த ‘அல்டி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

alti-audio-function-stills-6

இந்த விழாவில் படத்தில் பங்கு கொண்ட நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகர் ராதாரவி, நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம்தான். அப்படி பரபரப்பாக இருக்கக் கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்றுவரை தொடர்ந்து மற்றைய படங்களுக்கும், சக கலைஞர்களுக்கும் பெரும் ஆதரவு அளித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இன்று நேரிலேயே வந்து வாழ்த்தியிருக்கிறார். அப்பேர்ப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்ட நடிகர் விஜய் சேதுபதியை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

alti-audio-function-stills-5

சினிமா இப்போது ரொம்பவும் சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். உடனேயே பார்த்திபனை கை பேசியில் அழைத்து வாழ்த்தினேன். திரையரங்கில் கூட்டம் வந்தாலும் மறுநாளே எடுக்கச் சொல்லிவிட்டார்கள் என்று சொல்லி பார்த்திபன் மிகுந்த வேதனைப்பட்டார். ஒரு திரைப்படத்தைப் பார்க்க பார்க்கத்தான் மக்களுக்கு பிடிக்கும். உடனேயே, தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒத்த செருப்பு படத்தை தியேட்டர்களில் இன்னும் சிறிது நாட்கள் ஓட்ட வைக்குமாறு கூறிவிட்டு வந்தேன்.

சிறு படங்கள் குறைந்தது 5 நாட்களாவது திரையரங்குகளில் ஓட வேண்டும். அப்போதுதான் அத்திரைப்படங்களை மக்களால் பார்க்க முடியும்.

இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் உருவான ’வாஸ்கோடகாமா’ பாடல் எல்லோரையும் ஆட்டம் போட வைக்கும். இயக்குநர் உசேனுக்கு எனது அடுத்த படத்தில் நிச்சயமாக நான் வாய்ப்பு கொடுப்பேன். அன்பு மயில்சாமி அவருடைய தந்தை மயில்சாமி போல் நட்பை பாதுகாத்து நல்ல பண்புகளோடு இருக்க வேண்டும்…” என்றார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, நான் இயக்கிய ‘தாவணி கனவுகள்’ படத்தில்தான் மயில்சாமி அறிமுகமானார். முதல் படத்திலேயே 7 டேக் வாங்கிதான் நடித்தார். அப்படிப்பட்ட மயில்சாமியா இவர் என்று இன்று வியந்து பார்க்கிறேன்.

alti-audio-function-stills-3

அவருடைய மகன்களுக்கு ஒன்று கூற விழைகிறேன். நீங்கள் நன்றாக நடிக்கிறீர்களோ.. இல்லையோ..? உங்கள் அப்பா மயில்சாமி மாதிரி நல்ல குணங்களோடு இருக்க வேண்டும்.

இந்தப் படத்தின் டிரெயிலரைப் படத்தின் இயக்குநர் புதுமுக இயக்குநர் மாதிரி தெரியவில்லை. யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றாமல் தனது முதல் படத்தை இயக்கியிருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள்..  ‘அல்டி’ என்றால் அல்டிமேட்டின் சுருக்கம் என்று கேட்டுத் தெரிந்துக் கொண்டேன்…” என்றார்.

vijay sethupathy

மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி பேசும்போது, “அண்ணன் மயில்சாமியின் நடிப்பும், பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு காட்சியில் வந்தாலும் சரி, பல காட்சிகளில் வந்தாலும் சரி அவருக்கென்று ஒரு பாணி இருக்கும். அதேபோல் பேச்சிலும், நடிப்பிலும் தேவையில்லாமல் எதையும் செய்ய மாட்டார். மிகப் பெரிய ஜாம்பாவான்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிவார்கள். மயில்சாமியிடம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவருடைய அப்பாவித்தனத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அன்பு மயில்சாமியும், அவருடைய அப்பாவிடமிருந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. அதைக் கற்றுக் கொண்டு அன்பு மயில்சாமி வாழ்க்கையிலும், திரையுலகத்திலும் வெற்றியடைய வேண்டும்…” என்றார்.

நடிகர் மயில்சாமி பேசும்போது, “இந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. என் மகன் அழைப்பை ஏற்று நேரில் வந்து பிறந்த நாள் மற்றும் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறிய விஜய் சேதுபதிக்கு நன்றி.

எனது இரு மகன்களும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். என் மகனின் பொறுமையை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன். பத்து படத்தில் நடித்திருந்தாலும் இந்த படம்தான் அவனுக்கு முதல் இசை வெளியீட்டு விழா. ஜாகுவார் தங்கம் கூறியதுபோல், விஜய் சேதுபதி எம்.ஜி.ஆர். மாதிரி யதார்த்தவாதி. பலர் கூறுவார்கள் எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்று. ஆனால், நான் கூறுவேன் அவர் இறக்கவில்லை. யாரெல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்களோ… அவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர்.தான்.” என்றார்.

manisha jith

நடிகை மனிஷா ஜீத் பேசும்போது “முதல் பார்வை முதல் இன்றுவரை அவருடைய ஆதரவை எங்களுக்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி…” என்றார்.

நடிகர் அன்பு மயில்சாமி பேசும்போது, “இப்படத்தில் பாடல்களை முதன்முறை கேட்கும்போதே எல்லோருக்கும் பிடிக்கும். ஸ்ரீகாந்த் தேவாவின் இசைக்கு நடன இயக்குநர் ராபர்ட் ஸார் நன்றாகவே நடனம் அமைத்திருக்கிறார்…” என்றார்.

alti-audio-function-stills-7

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது, “இப்படத்தின் இயக்குநருக்கு இது முதல் படம். நன்றாகவே இயக்கியிருக்கிறார். ராபர்ட் மூலம்தான் இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்படத்தின் கதாநாயகி எனது குடும்பத்தில் ஒருவர்.

கார்த்திக் மற்றும் கவிதா இருவரும் புதுமுக பாடலாசிரியர்கள். இப்படத்திற்காக பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். பாடல்கள் நன்றாக வந்திருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்தியதற்கு நன்றி…” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில், ‘அல்டி’ படத்தின் இசை மற்றும் டிரைலர் தகட்டை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டார்கள்.

 

Our Score