full screen background image

ராஜு ஜெயமோகன் ஹீரோவாக நடித்து இயக்கும் படம் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’!

ராஜு ஜெயமோகன் ஹீரோவாக நடித்து இயக்கும் படம் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’!

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளரான ராஜு ஜெயமோகன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும், படத்தின் கதாநாயகனாகவும் அவர் நடிக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியுள்ளது.

தென்காசியின் இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகளில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மொட்டை, இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம் டார்க் ஹியூமர் பாணியில் உருவாகிறது.

படத்தின் கதைக் களத்திற்கு இயல்பான தன்மையை வழங்கும் வகையில் பிரம்மாண்ட செட்கள் அமைப்பதைத் தவிர்த்து, மலை, காடு உள்ளிட்ட உண்மையான இடங்களிலேயே படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு.

மேலும், எந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுகிறதோ, அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களையும் திரைப்படத்தில் நடிக்க வைத்து வருகின்றனர்.

இதன் மூலம் கதாபாத்திரங்களுக்கும் காட்சிகளுக்கும் கூடுதல் இயல்புத் தன்மையை கொண்டு வர படக் குழு முயற்சி செய்து வருகிறது.

இப்படத்தின் இயக்குநரும் நாயகனுமான ராஜு ஜெயமோகன் கூறுகையில்,

“படத்தில் இயற்கையும் ஒரு முக்கிய கதாபாத்திரம் போல இருக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம். செட்களில் படமாக்குவதற்குப் பதிலாக உண்மையான இடங்களில் காட்சிகளை படமாக்கி வருவதால் மழை, காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவையும் கதையின் ஓர் அங்கமாக மாறியுள்ளது.

படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் வசிக்கும் மக்களையும் காட்சிகளுக்கு ஏற்ப நடிக்க வைத்திருக்கிறோம். தற்போது தென்காசியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் டார்க் ஹியூமர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஹெச். வினோத் ஆகியோரின் ஆதரவுடன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது” என்றார். 

இந்த ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ படத்தில் ராஜு ஜெயமோகனுடன் துஷாரா விஜயன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

துஷாரா விஜயன் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் சவாலான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

அதேபோல், சத்யராஜும் இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான தோற்றம் மற்றும் கதாபாத்திரத்தில் இப்படத்தில் தோன்றுகிறார்.

250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள சத்யராஜுக்கு, இந்தப் படத்தில் தோற்றமும், கதாபாத்திரமும் புதிய அனுபவமாக இருக்கும் என படக் குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜு ஜெயமோகன், தற்போது ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

இயக்குநர் பொறுப்புடன் கதாநாயகனாகவும் அவர் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் சார்பில் ஹெச். வினோத் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் வெளியீடு தொடர்பான தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக் குழு தெரிவித்துள்ளது.

Our Score