2 நாட்களுக்கு முன்பாகத்தான் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் தான் முதன்முதலாக இயக்கும் ‘பரோஸ்’ என்ற திரைப்படத்தின் துவக்க விழாவை நடத்தினார்.
அதற்குள்ளாக அந்தப் படத்தின் அப்டேட்டாக அந்தப் படத்தில் தல அஜீத்தும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோகன்லாலின் மிக நெருங்கிய நண்பரான அந்தோணி பெரும்பாவூர் தனது ‘ஆசீர்வாத் சினிமாஸ்’ நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
மோகன்லால் படத்தை இயக்குவதுடன் படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். இவருடன் பிருத்விராஜும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பினை மேற்கொள்கிறார். 13 வயது சிறுவனான லிதியன் நாதாஸ்வரன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மிக இளம் வயதில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் முதல் நபர் இவராகத்தான் இருப்பார். சந்தோஷ் ராமன் கலை இயக்கம் செய்கிறார். இந்தப் படத்திற்கான கதையை ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஜிஜோ புன்னோஸ் எழுதியிருக்கிறார்.
இத்திரைப்படம் கேரளாவின் மலபார் கடற்கரையில் முதன்முதலாக போர்ச்சுக்கல் வீரர்கள் வந்து இறங்கியதையும், போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் கேரளா கடற்கரையோர பகுதிகள் மீது நடத்திய படையெடுப்புகளையும் பற்றிப் பேசுகிறதாம்.
இந்தப் படம் 3-டி முப்பரிமாணத்தில் உருவாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கூடுதல் தகவலாக ‘தல’ அஜீத்தும் இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம். இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இந்தப் படத்தின் கேஸ்டிங் இயக்குநரை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும்.
ஏனெனில் ‘தல’ அஜீத்தின் தற்போதைய தோற்றத்தில் ஸ்பானிஷ், மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் தோற்றத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துவார். அந்த அளவுக்கு சிவப்பாக, அழகான தோற்றத்தில் இருக்கிறார் அஜீத்.
அதனாலும் மிகப் பெரிய பொருட் செலவில் இந்தப் படம் தயாராவதால் தமிழிலும் இந்தப் படம் மார்க்கெட் ஆவதற்காகவும் ‘தல’ அஜீத்தை மோகன்லால் தேர்வு செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
எப்படியிருந்தாலும் அஜீத் இந்தப் படத்தில் இருந்தால் இந்தப் படம், தமிழ்ப் படம் போலவே வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை.
அஜீத் ஏற்கெனவே நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற ஹிந்திப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.









