full screen background image

நவம்பர் 24-ல் அஜித்திற்கு அறுவை சிகிச்சை..!

நவம்பர் 24-ல் அஜித்திற்கு அறுவை சிகிச்சை..!

உடலில் பல முறை அடிமேல் அடிபட்டும் சினிமா மீதிருக்கும் வெறியில் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ‘தல’ அஜித்திற்கு இந்த முறை செக் வைத்துவிட்டனர் மருத்துவர்கள்.

இந்த முறை அறுவை சிகிச்சை செய்தே தீர வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டதால் வரும் 24-ம் தேதி சென்னையில் ஆபரேஷன் செய்து கொள்ள சம்மதித்துவிட்டாராம் அஜித்.

அஜித் ஏற்கெனவே கார் ரேஸ் பிரியராகவே இருந்ததால் பல கார் ரேஸ்களில் கலந்து கொண்டு அடிபட்டு விழுப்புண் பெற்றவர். சினிமா நடிகராக ஆன பின்பும் அதைவிடாமல் தொடர்ந்து வந்தவர், ஒரு கட்டத்தில் அதிகப்படியான சினிமா வேலைகளால் ரேஸில் பயணிப்பதை கைவிட்டார்.

ஆனாலும் அன்றைக்கு வாங்கிய விழுப்புண்களால் அவருடைய முழங்காலில் பலத்த உள் காயம் ஏற்பட்டிருந்தது. அது அவ்வப்போது வந்து போகும் விருந்தினர் மாதிரியே இருக்க.. அதனைச் சமாளித்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

2013-ம் ஆண்டில், ‘ஆரம்பம்’ படத்தின் படப்பிடிப்பில் கார் சேஸிங் காட்சியில் மீண்டும் அடிபட்டார் அஜித். இம்முறை அதே முழங்காலிலும், வலது தோள் பட்டையிலும் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றாலும் முழங்கால் அவதி முடிவுக்கு வரவில்லை.

அறுவை சிகிச்சை செய்தால்தான் முழு குணமாகும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். ஆனால் தொடர்ச்சியாக படங்கள் இருந்ததால் அப்போது அஜீத் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

இப்போது ‘வேதாளம்’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் நடித்தபோது ஏற்கனவே அடிபட்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டது. இதனால் வீட்டிலேயே ரெஸ்ட்டில் இருந்து வந்தார் அஜித்.

சமீபத்தில் நடிகர் விவேக்கின் மகன் மறைவுக்குக்கூட வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றியபடியே நடந்து வந்தார்.

இப்போது உடனடியாக அறுவை சிகிச்சை செய்தே தீர வேண்டும் என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் கூறிவிட்டதால் வேறு வழியின்றி அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டிருக்கிறார் அஜித்.

இதன்படி வருகிற 24-ம் தேதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், அஜித்திற்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது. அவருடைய வலது முழங்காலிலும், தோள் பட்டையிலும் அறுவை சிகிச்சை நடைபெறுமாம்.

ஆபரேஷனுக்குப் பின், கண்டிப்பாக 9 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியிருப்பதால், ஓய்வு எடுத்த பிறகே அஜித் கோடம்பாக்கம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score