நாட்டில் தற்போது நிலவி வரும் சகிப்பின்மையை கண்டித்து, எழுத்தாளர் அருந்ததி ராய், டைரக்டர்கள் குந்தன் ஷா, சயீது மிர்சா உள்பட மேலும் 24 சினிமா பிரபலங்கள், தாங்கள் பெற்ற தேசிய விருதை திருப்பிக் கொடுத்தனர்.
மாட்டிறைச்சி சாப்பிட்டவர் அடித்துக் கொலை, எழுத்தாளர் கல்புர்கி கொலை போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து, தற்போதைய மத்திய அரசு அமைந்த பிறகு நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாகவும், மத மோதல்களைத் தூண்டிவிடும் சக்திகள் வலு பெற்றுவிட்டதாகவும் கூறி சில பிரபல எழுத்தாளர்கள், தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுத்தனர். நாட்டில், சகிப்பின்மை நிலவுவதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகள், திரையுலக பிரபலங்கள் ஆகியோரும் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பிக் கொடுக்க தொடங்கினர்.
அந்த வரிசையில், நேற்றைக்கு மேலும் 24 சினிமா பிரபலங்கள் நேற்று தேசிய விருதுகளை திருப்பிக் கொடுத்தனர். அவர்களில் பிரபல பெண் எழுத்தாளர் அருந்ததி ராய், பிரபல டைரக்டர்கள் குந்தன் ஷா, சயீது மிர்சா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
சகிப்பின்மையைக் கண்டித்தும், போராட்டம் நடத்தி வரும் திரைப்பட மற்றும் டெலிவிஷன் பயிற்சி நிலைய (எப்.டி.ஐ.ஐ.) மாணவர்களுக்கு ஆதரவாகவும் அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எழுத்தாளர் அருந்ததி ராய், ‘இன் விச் ஆனி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ்’ என்ற படத்துக்காக, சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை 1989–ம் ஆண்டு பெற்றவர். அதை திருப்பிக் கொடுப்பதாக அவர் அறிவித்துள்ளார். ‘நாம் சுதந்திரமாக பேச முடியாவிட்டால், இந்த சமூகம் முட்டாள்களின் தேசமாகி விடும்’ என்று அவர் கூறியுள்ளார்.
டைரக்டர் குந்தன் ஷா, 1983–ம் ஆண்டு, ‘ஜானே பி தோ யாரோ’ என்ற இந்திப் படத்துக்காக தேசிய விருது பெற்றவர். அவர் பெற்ற ஒரே தேசிய விருதான, அதையும் வருத்தத்துடன் திருப்பிக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
அவர், திரைப்படம் மற்றும் டெலிவிஷன் பயிற்சி நிலையத்தில் படித்தவர். அதன் தலைவராக கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
டைரக்டர் சயீது மிர்சா, திரைப்படம் மற்றும் டெலிவிஷன் பயிற்சி நிலையத்தின் தலைவராக இருந்தவர். அவர் ‘ஆல்ப்ர்ட் பின்டோ கோ குஸ்சா க்யூன் ஆதா ஹை’ உள்ளிட்ட படங்களால் புகழ் பெற்றவர். தனது விருதை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கும், விருதுக்குரிய பணத்தை தொண்டு நிறுவனத்துக்கும் வழங்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.
‘எங்களது போராட்டம், பா.ஜனதாவுக்கு மட்டும் எதிரானது அல்ல. எங்கள் படைப்புகள் மூலம், அப்போதைய காங்கிரஸ் அரசையும் நாங்கள் எதிர்த்துள்ளோம்’ என்று சயீது மிர்சா கூறினார்.
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த டைரக்டர் தருண் பார்தியா, கடந்த 2009–ம் ஆண்டு, ஒரு ஆவணப் படத்தின் படத் தொகுப்புக்காக தேசிய விருது பெற்றவர். அந்த விருதை திருப்பிக் கொடுப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
ஆவணப் பட இயக்குனர் அன்வர் ஜமால், டைரக்டர்கள் வீரேந்திர சைனி, பிரதீப் கிருஷ்ணன், மனோஜ் லோபோ, சுதாகர் ரெட்டி யக்கன்டி, அமிதாப் சக்கரவர்த்தி, தபன்போஸ், மதுஸ்ரீ தத்தா, ஒளிப்பதிவாளர் சத்ய ராய் நாக்பால், ஒலி வடிவமைப்பாளர்கள் விவேக் சச்சிதானந்த், பி.எம்.சதீஷ், அஜய் ரைனா, படத் தொகுப்பாளர் ஐரின் தார் மாலிக் உள்ளிட்டோர் தேசிய விருதுகளை திருப்பிக் கொடுத்துள்ளனர்.









