தமிழ்ச் சினிமாவின் தற்போதைய சூப்பர் ஸ்டாரினியான நயன்தாராவின் நடிப்பிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
அவர் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான ‘ஐரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர், டிரெயிலர் மூலம் தமிழ்த் திரையுலகில் அந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது. குறிப்பாக இத்திரைப்படம் அவரது முதல் இரட்டை வேட படம் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.
‘அறம்’ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே.ராஜேஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.
ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக் தொகுப்பு செய்ய, ‘அவள்’ படத்தின் கலை இயக்குநர் சிவசங்கர் அரங்கு அமைக்க, சண்டை இயக்கத்தை மிராக்கிள் மைக்கேல் ராஜ் மேற்கொள்ள.. ப்ரீத்தி நெடுமாறன் ஆடை வடிவமைப்பை செய்கிறார். நடன இயக்கத்தை விஜி சதீஷ் மேற்கொள்கிறார். தாமரை, மதன் கார்க்கி, கு.கார்த்திக் மூவரும் பாடல்களை எழுதியுள்ளனர். ஒலிப்பதிவை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி கையாண்டிருக்கிறார். டி.ஏழுமலை நிர்வாக தயாரிப்புப் பணியினை மேற்கொண்டுள்ளார்.
‘லட்சுமி’, ‘மா’, ஆகிய குறும் படங்களையும், ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடும்’ என்ற திரைப்படத்தையும் இயக்கிய இயக்குநர் சர்ஜூன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.ரவீந்திரன் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.
வரும் மார்ச் 28-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நடிகர் கலையரசன் பேசும்போது, “இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். இது என் கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும்.
சமீப காலங்களில் நான் கடந்து வரும் மிக முக்கியமான கேள்வி ‘மெட்ராஸ்’ மாதிரி ஏன் படங்கள் பண்றதில்லை என்பதுதான். நானும் நிறைய கதைகள் கேட்கிறேன். மனசுக்குப் பிடிக்கவில்லை. அதுதான் காரணம்.
இந்த படம் கண்டிப்பாக எனக்குப் பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கும். இயக்குநர் சர்ஜூன் இயக்கிய முந்தைய படமான ‘எச்சரிக்கை’ படத்திலேயே நான் நடித்திருக்க வேண்டியது. ஆனால் சூழ்நிலை காரணமாக நடிக்க முடியவில்லை. அதனால்தான் இந்தப் படத்தில் நடிக்க சர்ஜூன் கேட்டபோது மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படத்தில் ஹாரர் என்ற விஷயத்தையும் தாண்டி மிகச் சிறப்பான கதையும் இருக்கிறது. சர்ஜூன் என்னிடம் மொத்தக் கதையையும் சொல்லி முடித்த பிறகுதான், ‘அந்த பவானி கதாபாத்திரத்திலும் நயன்தாராதான் நடிக்கிறாங்க’ என்று சொன்னார். அது எனக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. அந்த கதாபாத்திரத்துக்காகவே நயன்தாரா ரொம்பவே மெனக்கெட்டார். இத்திரைப்படம் சிறந்த பொழுது போக்கு படமாக வந்திருக்கிறது…” என்றார்.
படத்தின் இயக்குநரான கே.எம்.சர்ஜூன் பேசும்போது, “நான் மிகவும் ரசித்து எடுத்த படம் இது, அதுவும் கருப்பு வெள்ளையில் படம் பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் ராஜேஷ் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்தார்.
கதையைக் கேட்ட பிறகு எந்த விஷயத்திலும் எந்த ஒரு குறுக்கீடும் இல்லை. ‘ஏன் இந்த செலவு, எப்படி படத்தை எடுக்கிறீங்க?’ என எதையும் அவர் கேட்கவில்லை. படம் முடிந்த பிறகு படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தார். ‘மிகவும் மகிழ்ச்சி’ என சொன்னார்.
இப்போது படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பிரமோஷனில் பட்டையை கிளப்புகிறார். மிகச் சிறப்பாக விளம்பரப்படுத்தியும் வருகிறார்.
நயன்தாரா இந்த படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். நயன்தாரா இரண்டு கதாபாத்திரங்களையும் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற படங்களில் இரட்டை வேடம் என்றால் அதில் இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். இங்கு இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
நிறைய பேருக்கு இத்திரைப்படம் பற்றி நிறைய கேள்விகள் இருந்தன. ‘மேக தூதம்’ பாடல் அதற்கு பதிலாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.
இது வெறும் ஹாரர் படம் மட்டும் கிடையாது. இன்னொரு சீரியஸான, எமோஷனல் கோணமும் இருக்கிறது. அதையும் தாண்டி ஒரு பொழுது போக்கு படமாகவும் இருக்கும்…” என்றார் இயக்குநர் சர்ஜூன்.