ஆர்.பி. பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.பாலா, ‘மோஷன் பிலிம் பிக்சர் நிறுவனத்தின் தயாரி்பபாளரான சுரேஷ் கே.மேனனுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அகோரி’.
இந்தப் படத்தில் நடிகர் சாயாஜி ஷிண்டே மிக, மிக வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார், இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர். இவர் ‘144’ என்ற தமிழ்ப் படத்திலும் நாயகியாக நடித்தவர்.
தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு, இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். இவரது உயரம் ஆறரை அடி.
மேலும், ‘மைம்’ கோபி, சித்து, ‘டார்லிங்’ மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, ‘கலக்கப் போவது யாரு’ சரத், டிசைனர் பவன், இவர்களுடன் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்ற பல கலைஞர்களும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு வசந்த். இவர் ‘ஈகோ’, ‘கள்ளத் துப்பாக்கி’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர். இசை – ஃபோர் மியூசிக். நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இது. கலை இயக்கம் – ஜெயச்சந்திரன், வசனத்தை தயாரிப்பாளர் ஆர்.பி.பாலாவே எழுதியுள்ளார். படத்தினை அறிமுக இயக்குநரான D.S.ராஜ்குமார் இயக்கியிருக்கிறார்.
சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும், தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே இந்தப் படத்தின் கதை, சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகரான சாயாஜி ஷிண்டே, இந்தப் படத்தில் அகோரியாக நடிக்கிறார்.
இப்படத்திற்காக ஹரித்துவாரில் செட் அமைத்து அகோரிகளுடன் சாயாஜி ஷிண்டே நடித்த காட்சி படமாக்கப்பட்டது. மேலும், கேரளாவின் காட்டுப் பகுதியிலும் பெரிய செட்டுகள் போடப்பட்டு அகோரிகள் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன.
படத்தில் இடம் பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரள வைக்கும்படி இருக்குமாம்.
இது ஒரு முழுமையான எண்டர்டெய்ன்ட் திரைப்படம். ஆறிலிருந்து அறுபதுவரையிலான அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் இந்தப் படத்தில் இருக்கிறதாம்.
சென்சாரின்போது ‘அகோரி’ படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் “நல்ல பொழுதுபோக்குடன் அமைந்த திகில் கதையாக உருவாக்கியிருக்கிறீர்கள்..” என்று படக் குழுவினரைப் பாராட்டி உள்ளனர்.
குழந்தைகள், பெரியவர்களுடன் பார்க்கும்படியாக இருப்பதால் படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.
‘அகோரி’ படத்தின் டிரெயிலர் தற்போது ‘தர்பார்’ படம் வெளியாகிய அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக அந்தப் படக் குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












