‘ஸ்ரீகிருஷ் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் கே.சாம்பசிவம் தயாரித்துள்ள திரைப்படம் ‘அடவி’.
இந்தப் படத்தில் வினோத் கிஷன் நாயகனாகவும், அம்மு அபிராமி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும், ராஜபாண்டியன், விஷ்ணு பிரியா, ஆர்.என்.ஆர்.மனோகர், முத்துராமன், மூணாறு ரமேஷ், கே.சாம்பசிவம், பரிவு சக்திவேல், ஜெயச்சந்திரன், சந்துரு, குணசீலன், தம்பிதுரை, ஆண்ட்ரு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இசை – சரத் ஜடா, பாடல்கள் – கலை குமார், படத் தொகுப்பு – சதீஷ் குரோசோவ், சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், தயாரிப்பு வடிவமைப்பு – குமார், ஒப்பனை – பி.வி.ராமு, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், தயாரிப்பு மேற்பார்வை – சிவச்சந்திரன், தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீகிரிஷ் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் – K.சாம்பசிவம், ஒளிப்பதிவு, இயக்கம் – ஜி.ரமேஷ்.
இயக்குநர் ஜி.ரமேஷ், ‘ஆழ்வார்’, ‘திருடா திருடி’, ‘கண்ணோடு காண்பதெல்லாம்’, ‘கிங்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவிட்டு, இந்தப் படத்தின் மூலமாக திரைப்பட இயக்குநராக உயர்ந்திருக்கிறார்.
“ஒரே ஒருவரின் பேராசைக்கு உலகத்தில் இருக்கும் அனைத்து வளங்களும் பத்தாது” என்னும் முதுமொழி இருக்கிறது. இப்படம் இயற்கை, மற்றும் இயற்கையோடு இயைந்து வாழும் மக்களின் வாழ்க்கை, ஒருவரது பேராசை என்ன கதிக்கு உள்ளாக்குகிறது என்பதை உணர்வுபூர்வமாக சொல்கிறது.
இந்தப் படத்தில் வியப்பூட்டும் திருப்புமுனைகளும், பசுமையான காட்சி அமைப்புகளும், சுவராஸ்யமான அதிரடி காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் விதத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கமலா தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, ‘அடவி’ திரைப்படம் மிகவும் சிறப்பாக வந்திருப்பதை வெகுவாகப் பாராட்டினார். படம் பட்ஜெட் குறைவாக இருந்தாலும், தரத்தில் நிறைவாகவும் இருப்பதாகச் சொல்லி படக் குழுவினரைப் பாராட்டினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “பெரிய நடிகர்களின் திரைப்படங்களை பண்டிகைக் காலங்களில் வெளியிடக் கூடாது. ஏனென்றால் அவர்களது படம் எப்போது வந்தாலும் வெற்றி பெறும். எனவே சிறிய படங்களை ஊக்குவிக்கும்விதமாக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டார்.