அக்னி தேவி – சினிமா விமர்சனம்

அக்னி தேவி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தினை சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஸ்டாலின் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். 

படத்தில் நடிகர் பாபி சிம்ஹா, நடிகை மதுபாலா, நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் சதிஷ், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், ராஜா, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ஜான் பால்ராஜ், ஷாம் சூர்யா, தயாரிப்பு – ஜான் பால்ராஜ், ஸ்டாலின், இணை தயாரிப்பு – வேல்முருகன். ஒளிப்பதிவு – ஜனா, இசை – ஜேக்ஸ் பிஜாய், படத் தொகுப்பு – தீபக், கலை இயக்கம் – ஆர்.சரவண அபிராமன், வசனம் – கருந்தேள் ராஜேஷ், கலர் – சாரங் ஸ்டூடியோ, கிராபிக்ஸ் – கே.கணேஷ், & Vconnect media, ஒலி வடிவமைப்பு – சின்க் சினிமா, நடன இயக்கம் – விக்னா ஜான், சூர்யா, ஒலிக் கலவை – ராஜகிருஷ்ணன், உடைகள் – வசந்த், இயக்குநர் குழு – ரஞ்சித், விவேக், விக்கி, கிருஷ்ணன், தகில், சார்லி, டானி, சந்தோஷ், தயாரிப்பு நிர்வாகம் – வினோத், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமத், புகைப்படங்கள் – சிவா, விளம்பர வடிவமைப்பு – ரெட் டாட் பவன், போஸ்டர்கள் – கே.கணேஷ்.

இப்படத்தை ‘சென்னையில் ஒரு நாள்-2’ பட இயக்குநரான ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குநர் சாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

இந்தப் படத்தில் வெறும் 5 நாட்கள் மட்டும்தான் நடித்தேன். மீதிக் காட்சிகளில் என்னைப் போலவே டூப் போட்டும், டப்பிங் குரல் கொடுத்தும் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். எனவே படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி இந்தப் படத்தின் நாயகனான பாபி சிம்ஹா கோவை நீதிமன்றத்தில் வழக்கு போட்டு படத்திற்கு தடையும் வாங்கினார்.

ஆனாலும் படத்தின் தயாரிப்பாளரின் பெரும் முயற்சியால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் படம் திட்டமிட்டபடி நேற்று காலை வெளியாகிவிட்டது.

அரசியல் பேசும் படம் என்பதால்தான் பொதுத் தேர்தலுக்காக பரபரப்பாக இருக்கும் இன்றைய சூழலில் படத்தைக் கொணர்ந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

ராஜீவ்காந்தி படுகொலை நடந்ததையொட்டி தமிழ்நாட்டில் நடந்த கலவரத்தின்போது 6 வயதான பாபி சிம்ஹா தனது அப்பாவையும், அம்மாவையும் தொலைத்துவிட்டார். அனாதையாக ரோட்டில் நின்று கொண்டிருந்தவரை லிவிங்ஸ்டன் தூக்கி வந்து வளர்த்து படிக்க வைத்து இப்போது போலீஸ் அதிகாரியாக்கியிருக்கிறார்.

பாபி சிம்ஹா இப்போது கோவை போலீஸில் தீவிரவாத தடுப்புப் பிரிவில் ஒரு அதிகாரி. அன்றைக்கு அவரை பேட்டியெடுக்க வர இருந்த ஒரு தொலைக்காட்சியின் பெண் நிருபர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுகிறார். இதைத் துப்புத் துலக்க துவங்குகிறார் பாபி. அந்தப் பெண்ணின் அண்ணனாகச் சொல்லப்படுபவரும் வீட்டில் தூக்கில் தொங்குகிறார். இதைத் தொடர்ந்து இந்தப் பெண் நிருபரின், பெண் நண்பியும் கொல்லப்படுகிறார்.

இந்தக் கொலைகளுக்குப் பின்னால் யாரோ ஒரு பெரிய கை இருப்பதை அறிகிறார் பாபி. ஆனால் நகர போலீஸ் கமிஷனரான போஸ் வெங்கட்டோ.. அந்தப் பெண் நிருபரின் காதலரே கொலை செய்ததாக ஒத்துக் கொண்டுவிட்டதாகச் சொல்லி “கேஸ் குளோஸ்…” என்கிறார்.

பாபி இதை ஏற்காமல் வேறு கோணத்தில் வழக்கை விசாரித்துக் கொண்டே போகிறார். முன்னாள் சட்டமன்ற கொறடாவான எம்.எஸ்.பாஸ்கர் “இந்தக் கொலைகளுக்கெல்லாம் காரணம் தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சரான சகுந்தலா தேவி என்னும் மதுபாலாதான்” என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.

இதை நம்புவதைபோல மதுபாலாவின் தலையீடும் இந்தக் கேஸில் ஊடுறுவ.. பாபியின் கண் பார்வை மதுபாலாவின் மீது விழுகிறது. மதுபாலாவும் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு பாபியை கொலை செய்ய முயல்கிறார். போஸ் வெங்கட்டோ, மதுபாலாவின் உத்தரவுப்படி கேஸை முடிக்க உத்தரவிடுகிறார்.

இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்த ‘அக்னி தேவி’ படத்தின் திரைக்கதை.

பாபி சிம்ஹா வெறும் 5 நாட்கள் மட்டும்தான் இந்தப் படத்தில் நடித்தேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அது பொய் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. படத்தின் துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் அவர்தான் இருக்கிறார். நிச்சயமாக 20 நாட்களாகவது அவர் நடித்திருக்க வேண்டும். இல்லாமல் இந்தப் படம் முடிந்திருக்காது.

போலீஸ் ஆபீஸருக்கான கெத்தோடு பாபி சிம்ஹாவை பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கேற்ப நடிக்க வைக்கப்படவில்லை. ஏதோ ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அவரை சாகச மனிதராக நடிக்க வைத்திருக்கிறார்கள். இதுவே அவரை ரசிக்க முடியாமல் செய்திருக்கிறது. குரல் வேறு ஒருவருடையது என்பது சொல்லாமலேயே தெரிகிறது.

ரம்யா நம்பீசன் என்றொரு நடிகையும் இதில் இருக்கிறார். எண்ணி 5 காட்சிகளில் மட்டுமே தலையைக் காண்பித்திருக்கிறார். அவ்வளவுதான்.

அமைச்சர் சகுந்தலா தேவியாக நடித்திருக்கும் மதுபாலாதான் படத்தின் மையப் புள்ளி. போலியோ அட்டாக்கினால் பாதிக்கப்பட்டு வீல் சேரிலேயே அமர்ந்திருக்கும் நிலைமையிலும் பணம் சம்பாதிப்பது மட்டுமே தனது குறிக்கோள் என்பதைச் சொல்லியே கல்லா கட்டும் மந்திரி.

‘டயர் நக்கிகள்’ என்று தனது கட்சிக்காரர்களையே அவர் அழைப்பதில் இருந்தே அவர் யாரை இமிடேட் செய்கிறார் என்பதை உணர முடிகிறது. சில இடங்களில் ஜெயலலிதாவையும், சில இடங்களில் கருணாநிதியையும், சில இடங்களில் சசிகலாவையும் ஊர்ஜிதப்படுத்துகிறார் மதுபாலா. சில இடங்களில் அவருடைய கோபக் கனலை ரசிக்க முடிந்தாலும் பல இடங்களில் முடியவில்லை. இவரது நடிப்பு, ஓவர் ஆக்ட்டிங்காகிவிட்டது.

பார் வசூலில் கொஞ்சம் கட்டிங்கை வெட்டிவிட்டு ஒப்படைத்த கட்சி ஆளை வசவுகிறார் மதுபாலா. அவரைச் சந்திக்க வரும் அனைத்து ஆண்களும் கையைக் கட்டிக் கொண்டு காலில் விழுந்து கதறுகிறார்கள். அத்தனை பேரையும் ‘அவனே’, ‘இவனே’ என்று ஒருமையிலேயே பேசி விரட்டுகிறார் மதுபாலா.

பொதுப்பணித்துறையின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் தனக்கு மாதாமாதாம் கட்டிங் கரெக்ட்டா வந்திரணும் என்கிறார். டிரக் ஒன்றில் கருப்புப் பணம் கோடிகளில் கொண்டு செல்லப்படுகிறது. ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த நேரத்தில் பழைய நோட்டுக்களை புதிதாக மாற்ற அனைத்துவித முறைகேடுகளையும் செய்யச் சொல்கிறார் மதுபாலா. இந்தக் காட்சிகளெல்லாம் தமிழ்நாட்டில் யாரையெல்லாம் குறிப்பிடுகிறது என்று பார்வையாளர்களே ஊகித்துக் கொள்ளலாமாம்.

சதீஷ் பாபிக்கு இணையாக, கூடவே படம் முழுவதும் வந்து போகிறார். இன்ஸ்டண்ட் காபி போல அடிக்கடி ‘விட்’ மட்டுமே அடிக்கிறார். ஆனால் சிரிப்புதான் வரவில்லை.

எம்.எஸ்.பாஸ்கர் ஒரு நேர்மையான அரசியல்வாதியாக.. இப்போது ஓய்வு பெற்றவிட்ட நிலையிலும் நாட்டை பற்றி நினைத்து வருத்தப்படும் ஒரு நேர்மையானவராக நடித்திருக்கிறார். மிக பண்பானவராக காட்டப்பட்டிருக்கும் இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்றாற்போலவே நடித்திருக்கிறார். குணச்சித்திர நடிப்பில் பாஸ்கரை மிஞ்ச முடியுமா என்ன..?

பாபிக்கும், இவருக்குமான சொற்போரில் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் அத்தனையும் இப்போதைய தமிழகத்தின் அரசியலுக்கு மிகவும் பொருத்தமானது. வசனங்களை எழுதிய கருந்தேள் ராஜேஸூக்கு இதற்காகவே ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

கமிஷனராக போஸ் வெங்கட்டும், நல்ல போலீஸ் ஏட்டுவாக டெல்லி கணேஷும் தங்களது நடிப்பை குறைவில்லாமல் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

ஜனாவின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். சண்டை காட்சிகளை மட்டும் சிரத்தையெடுத்து இயக்கியிருக்கிறார்கள். அதிலும் அந்த இரண்டு டீன் ஏஜ் பையன்களுடன் பாபி சிம்ஹா போடும் சண்டை காட்சி அழகு. பாடல் காட்சிகளே இல்லாமல் பின்னணி இசையிலேயே படத்தை நகர்த்தியிருக்கிறார்கள்.

படத்தில் ஏதோ அவசரத்தனமாக எழுதி, அவசரமாக கொடுத்ததை போன்ற பீலிங்குதான் படத்தில் ஏற்படுகிறது. அத்தனை லாஜிக் எல்லை மீறல்கள்.

படத்தின் துவக்கத்தில் ஒரு ரேடியோவை காண்பித்து ராஜீவ் காந்தி படுகொலை விஷயத்தை செய்தியறிக்கையில் வாசிக்கிறார்கள்.

அதில் கடைசியாக “தமிழ்நாட்டில் தற்போது கலவரம் நடந்து கொண்டிருப்பதால் 144 தடை உத்தரவை பிறப்பிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் யோசித்து வருகிறார்..” என்று சொல்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இதைக்கூட சரி பார்க்காமல் இப்படியொரு காட்சியை வைத்திருக்கிறார்கள். என்னத்த சொல்ல..?

முதலில் பாபி சிம்ஹாவின் போலீஸ் பணி என்ன என்பதையே உறுதியாகச் சொல்லவில்லை. தீவிரவாத தடுப்புப் பிரிவில் அவர் ஒரு அதிகாரி என்றுதான் சொல்கிறார்கள். அதில் அவர் இன்ஸ்பெக்டராக, சப்-இன்ஸ்பெக்டரா.. டி.எஸ்.பி.யா என்பதும் தெரியவில்லை.

நகரில் நடக்கும் கொலைகளில் இவர் எப்படி தலையீட முடியும் என்பதும் புரியவில்லை. லோக்கல் ஸ்டேஷனுக்குள் புகுந்து லாக்கப்பில் இருக்கும் கைதியிடம் பேசுகிறார். எதற்கு என்றுதான் தெரியவில்லை.

இந்தப் படுகொலைகளுக்கும் தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கும் என்னதான் சம்பந்தம் என்றும் தெரியவில்லை. “இந்தக் கேஸை நீங்க இனிமேல் ஹேண்டில் பண்ண வேண்டாம்…” என்கிறார் கமிஷனர். இதென்ன லாஜிக் என்றே தெரியவில்லை.

இடையில் கமிஷனரிடம் சவாலே விடுகிறார் பாபி. கமிஷனரோ “உயரதிகாரிகளுக்கு கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள்…” என்கிறார். பாபியோ “அடுத்த ஆதாரத்தோடு வருகிறேன்” என்றார். என்னய்யா நடக்குது கோவை போலீஸில்..?

இதேபோல் முன்னாள் சட்டமன்ற கொறடா.. சட்டமன்ற உறுப்பினரான எம்.எஸ்.பாஸ்கரின் வீட்டுக்குள் நுழையும் பாபி சிம்ஹா ஏதோ சி.ஐ.ஏ. அதிகாரியைப் போல கால் மேல் கால் போட்டுக் கொண்டு கெத்தாக அவரை மிரட்டுவதைப் போல விசாரிப்பதெல்லாம் என்ன வகையான உண்மைத்தனம்.. இதெல்லாம் நிஜத்தில் முடியுற காரியமா இயக்குநரே..?

பெண் ரிப்போர்ட்டரின் காதலர் கேரக்டருக்கு ஸ்வாதி கொலை வழக்கில் சிக்கி சென்னை புழல் ஜெயிலில் பரிதாபமாக உயிரிழந்த ராம்குமாரின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் ஒருவரை நடிக்க வைத்திருக்கிறார்கள். 

சகுந்தலா தேவியின் உத்தரவின் பேரில் இந்தக் காதலனும் கோர்ட்டுக்குக் கொண்டு போகும் வழியில் ‘என்கவுண்ட்டர்’ என்கிற பெயரில் கொல்லப்படுகிறான். அந்தக் கொலையைக்கூட சரியாக செய்யவில்லை. கையில் விலங்கு போடப்பட்டிருக்கும் நிலையிலேயே சுட்டுக் கொல்கிறார்கள். ஏதோ அப்ரண்டீஸ்களெல்லாம் சேர்ந்து திரைக்கதை எழுதியதுபோல இருக்கிறது.

இடையில் திடீரென்று மதுபாலாதான் தன்னுடைய தொலைந்து போன தாயார் என்பதை பாபி சிம்ஹா திடீரென்று அறிகிறார். அதனை எப்படி அவர் தெரிந்து கொண்டார் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. ஆனாலும் கடைசியாக போனில் பேசும்போது “அம்மா” என்கிறார் பாபி. நமக்கு ‘சும்மா’வாகத் தெரிகிறது..!

எப்படியோ ஒரு நல்ல அரசியல் கதையை எடுக்கத் தெரியாதவிதத்தில் எடுத்து வீணடித்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

Our Score