அடூர் கோபாலகிருஷ்ணனின் புதிய படத்தில் திலீப்-காவ்யா மாதவன் ஜோடியாம்..!

அடூர் கோபாலகிருஷ்ணனின் புதிய படத்தில் திலீப்-காவ்யா மாதவன் ஜோடியாம்..!

8 வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் திரைப்படம் இயக்கப் போகிறார் சாதனை இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன்.

மலையாள சினிமாவை இந்திய அளவில் பெருமைப்படுத்திய இயக்குநர்களில் ஒருவர் அடூர் கோபாலகிருஷ்ணன். தனது 50 வருடத்திய திரைப்பட வாழ்க்கையில் 11 திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், அவைகளின் வழியாக பல விருதுகளை வாங்கியிருக்கிறார்.

30-க்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் மற்றும் குறும் படங்களை இயக்கியிருக்கிறார். 5 முறைகள் தேசிய மற்றும் மாநில அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்றிருக்கிறார். இவரது பல படங்களுக்காக தயாரிப்பாளர், கதை, திரைக்கதை, வசனகர்த்தா என்ற முறையிலும் தேசிய, மாநில அரசின் விருதுகளை பெற்றிருக்கிறார்.

அடூர்ஜி கடைசியாக 2008-ம் ஆண்டு ‘ஒரு பெண்ணும், ரெண்டனாவும்’ என்கிற மலையாளப் படத்தை இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு இப்போது இந்த வருடமே தனது புதிய படத்தை இயக்கி வெளியிடப் போகிறாராம்.

இந்தப் படத்திற்கு ‘பின்னியம்’ என்று பெயர் வைத்துள்ளார். இந்தப் படத்தில் மலையாள படவுலகின் ஹாட்டஸ்ட் ஜோடியான திலீப், காவ்யா மாதவன் நடிக்கவிருக்கிறார்கள் என்பதுதான் மலையாளப் படவுலகத்தை ஒரே நாளில் திரும்பிப் பார்க்க வைத்த விஷயம்.

“நான் எப்போதும் வித்தியாசமான முறையில், வித்தியாசமான கதைகளையே படமாக்கும் எண்ணம் கொண்டவன் என்பதால்தான் இத்தனை கால இடைவெளி எடுத்துக் கொண்டேன். இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அடூரின் வித்தியாசமான காதலைச் சொல்லும் படமாக இருக்கும்..” என்கிறார் அடூர் கோபாலகிருஷ்ணன்.

“அடூர்ஜியின் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு நான் எதிர்பார்க்காதது. நான் பல ஆண்டுகள் அடூரின் படத்தில் நடிக்க காத்திருந்தேன். இப்போதுதான் கிடைத்திருக்கிறது…” என்கிறார் நடிகர் திலீப்.

“அடூர்ஜியின் படத்தில் நடிக்கும்போது செட்டில் எதுவுமே செய்யாமல் இருப்பது போலத்தான் தோன்றும்.. படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவுவரையிலும் காட்சி வரிசையாக முழுமையாக என்னிடத்தில் சொன்னார் அடூர். அடூர்ஜியின் படத்தில் நடிக்க இருப்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது..” என்கிறார் காவ்யா மாதவன்.

திலீப், காவ்யா மாதவனுடன் நெடுமுடி வேணு, இந்திரன்ஸ், விஜயராகவன், கே.பி.ஏ.சி.லலிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். எம்.ஜே.ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் மே 11-ம் தேதி திருவனந்தபுரத்தில் துவங்குகிறதாம். ஒரே மாத்த்தில் படப்பிடிப்பை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

புத்தம் புதிய இயக்குநர்களெல்லாம் மலையாள சினிமாவை மென்மேலும் உயர்த்திக் கொண்டே போக.. அவர்களின் பிள்ளையார் சுழியான அடூர்ஜியின் படம் நிச்சயம் அவர்களை ஆச்சரியப்பட வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்..!

Our Score