“பாலா அடிக்கவே இல்லை..” – நடிகை வரலட்சுமி ஓப்பன் டாக்..!

“பாலா அடிக்கவே இல்லை..” – நடிகை வரலட்சுமி ஓப்பன் டாக்..!

நேற்று நடைபெற்ற ‘தாரை தப்பட்டை’ படத்தின் பிரஸ்மீட்டில் நடிகை வரலட்சுமி பேசும்போது தன்னுடைய நடிப்பு கேரியரில் இந்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படம் மிக முக்கியமானது என்றார்.

அவர் மேலும் பேசும்போது, “தமிழைப் பொறுத்தவரை ‘போடா போடி’க்கு அடுத்து நான் நடித்து வரும் தமிழ்ப் படம் இதுதான். போடா போடி’ படத்துக்குப் பிறகு நான் நடித்த ‘மதகஜராஜா’ இன்னமும் வெளிவரவில்லை. அடுத்து ஒரு கன்னடப் படத்தில் சுதீப்புடன் நடித்தேன்.

அதற்கடுத்தது இந்தப் படம். ‘தாரை தப்பட்டை’ படத்துல நடிக்கிறதுக்காக எனக்கு யாரும் சிபாரிசெல்லாம் பண்ணலை. ‘பரதேசி’ படத்தோட ரீ-ரிக்கார்டிங் நடக்கும்போது, ‘பிதாமகன்’ சங்கீதாதான் என்னை பாலா சார்கிட்ட கூட்டிட்டு போயி அறிமுகப்படுத்தி வச்சாங்க.

இதில் எனக்கு கிராமத்துப் பெண் கேரக்டர் என்றவுடன் நான் சட்டென்று ஒத்துக் கொண்டேன்.. ஏனெனில், ‘கிராமத்துப் பெண் கேரக்டருக்கு நான் செட் ஆக மாட்டேன்’ என்று சொல்லியே பல இயக்குநர்கள் என்னை தவிர்த்திருந்தார்கள். இதனால்தான் வலிய வரும் ஸ்ரீதேவியை மறுக்க வேண்டாம் என்பதால் ஆன் தி ஸ்பாட்டிலேயே தலையாட்டிவிட்டேன்.

அப்படியும் பாலா சார் எனக்கும் ஸ்கிரீன் டெஸ்ட் வைச்சுத்தான் செலக்ட் செஞ்சாரு. அவர் ஏன் தேர்வு செய்தாரென்றால் எனக்கிருக்கும் நடனத் திறமையை மனதில் வைத்துதான் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில் கரகாட்டம்தான் மெயின் என்றாலும் பல்வேறு நடன வகைகளையும் இதில் ஆடியிருக்கிறேன். படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்பாக 2 மாதங்கள் ஹோம் வொர்க்கெல்லாம் செய்தோம்.

இந்தப் படத்துல சசிகுமார் நடத்தும் கலைக் குழுவில்  ‘சூறாவளி’ என்ற ஆட்டக்காரி கேரக்டரில் நடித்திருக்கிறேன். ‘போடா போடி’ படத்துக்கு அப்புறம் இந்த ‘தாரை தப்பட்டை’ படத்துல நடிச்சது, எனக்கு இத்தனை நாளா காத்திருந்ததற்கான பலனைத் தரும்னு நினைக்கிறேன்.

இந்தப் படத்துல எது கஷ்டமா இருந்துச்சுன்னா அது டான்ஸ்தான். படத்துல டான்ஸெல்லாம் சூப்பரா வந்திருக்கு.. பிருந்தா மாஸ்டர், ‘பாபா’ பாஸ்கர், சுசித்ரா, ராதிகா, தினேஷ் மாஸ்டர் இப்படி எல்லாருக்குமே நன்றி சொல்லணும். பாட்டுல இருக்கிற ஒவ்வொரு வேகமான பீட்டுக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு ஆடியிருக்கேன்.

இப்போ இந்த ‘சூறாவளி’ கதாபாத்திரத்துல நடிச்ச பிறகு, இதுக்கு மேலயும் ஒரு கிராமத்து கேரக்டர்ல என்னால நடிக்க முடியாதுன்னு நினைக்கிறேன். பாலா எங்ககிட்ட என்ன எதிர்பார்த்தாரோ, அதை நாங்க கொடுத்திருக்கோமான்னு தெரியலை.. ஆனால், எங்களால முடிஞ்ச அளவுக்கான நடிப்பைக் காட்டியிருக்கோம்.

கடுமையா உழைத்துதான் இந்தப் படத்தை பாலா உருவாக்கியிருக்கிறார். தன் படத்தில் நடிப்பவர்களை பாலா அடிப்பார் என்றெல்லாம் சொல்வார்கள். அப்படி எந்த ஒரு சம்பவமும் இந்தப் படத்தில் நடக்கவில்லை. படப்பிடிப்பு உண்மையிலேயே ரொம்ப ஜாலியாத்தான் இருந்தது..”  என்றார் வரலட்சுமி.

Our Score