‘இவன் வேற மாதிரி’, ‘வேலையில்லா பட்டதாரி’ படங்களின் வெற்றியை தொடர்ந்து ராசியான நடிகை எனப் பெயர் பெற்றவர் நாயகி சுரபி. தற்போது பெரிதும் எதிர்பார்க்கபடும் ‘புகழ்’ படத்தில் ஜெய்க்கு இணையாக நடித்து வருகிறார்.
பிலிம் டிபார்ட்மெண்ட் சுஷாந்த் தயாரிப்பில் இயக்குனர் மணிமாறன் இயக்கும் ‘புகழ்’ படத்தின் அனுபவம் பற்றி சுரபி நம்மிடம் சில நிமிடங்கள் பகிர்ந்து கொண்டார்.
சுரபி பேசும்போது, “இந்தப் படத்தில் எனது கேரக்டரின் பெயர் புவனா. நான் நிஜ வாழ்வில் இருப்பது போன்று, மனதில் உள்ளதை.. உள்ளபடி எதையும் மறைக்காமல் கூறும் straight forward கதாப்பாத்திரமாக இது அமைந்திருக்கிறது. அதனாலோ என்னவோ இந்தக் கதாபாத்திரம் என் மனதுக்கு பிடித்து போன பாத்திரம் ஆனது.
இப்படத்தில் எனக்கு ஜோடியாக ஜெய் நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிப்பது செம்ம த்ரில். எந்தக் காரியத்தில் ஈடுப்பட்டாலும் அதில் வெற்றி பெற முழு முயற்சி எடுக்க வேண்டும் என தீவிரமாக நம்புபவர். கார் ரேசிங்கில் பெரும் ஈடுபாடு கொண்ட ஜெய் ‘தல’ அஜித் போன்று பல போட்டிகளில் வென்று புகழ் பெற வாழ்த்துகிறேன்.
இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் நடித்ததும், ஒளிபதிவாளர் வேல்ராஜ் சாருடன் மீண்டும் இணைந்து நடித்ததும் எனக்கு மறக்க முடியாதது. மணிமாறன் சுவராசியமான காட்சிகளை பதட்டமில்லாமல் படமாக்கக் கூடியவர். இவரது இயக்கத்தில் வேலையை செய்ததுதான் எனக்கு இயக்குனர் ராம்கோபால்வர்மாவின் ‘அட்டாக்’ படத்தில் நடிப்பதற்கு ஒரு பயிற்சியாக இருந்தது.
‘அட்டாக்’ படத்தில் நான் ஒரு பைக் மெக்கானிக் ரோலில் நடித்திருக்கிறேன். நிஜ வாழ்வில் இப்படி ஒருவரை நான் சந்தித்து இல்லை, ஆகவே இந்த role எனக்கு சவாலாகவே இருந்தது.
விவேக் மெர்வின் இசையில் அனைத்து பாடல்களும் முணுமுணுக்க வைக்கிறது. ‘புகழ்’ படத்தின் டிரைலர் வரும் 23-ம் தேதி வெளிவருகிறது. ஒரு சாதாரண ரசிகை போல் டிரைலரை பார்க்க பெரும் ஆவலாக உள்ளேன்…” என்றார் இளம் நாயகி சுரபி.












