இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்திற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. 1976-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்திருந்தனர்.
இதற்கு பிறகு 1980-ம் ஆண்டில் பாலசந்தர் இயக்கிய ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார். இதற்குப் பின் இயக்குநர் சிகரத்தின் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடிக்கவில்லையென்றாலும் இந்த இரண்டு படங்களுமே ஸ்ரீதேவியின் நடிப்பு கேரியரில் இப்போதும் முக்கியமான படங்களாகும்.
ஸ்ரீதேவி தற்போது துபாயில் ஒரு ஹிந்தி படத்தின் ஷூட்டிங்கில் இருப்பதால் பாலசந்தருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு வரவில்லை.
இதனால் டிவிட்டர் வலைத்தளத்தில் இயக்குநர் சிகரத்திற்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் “பாலசந்தர் சார் மறைந்துவிட்டார். ஆனால் லட்சக்கணக்கான திரை ரசிகர்கள் மனதில் அந்த மாமேதை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
என்னைப் போன்ற நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு அளித்தும், வழிகாட்டியாகவும் இருந்தவர் அவர். அவருடைய படங்களும், அவருடைய முடிவுகளும் வெளிப்படையானவை.
அவர் ஒரு நாள், ஒரு குழந்தை நட்சத்திரத்தை நாயகியாக்க முடிவு செய்தார். அது நான்தான். ‘மூன்று முடிச்சு’ என் வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரு படம். தமிழ் சினிமாவும், என்னைப் போன்ற பலரும் அவருடைய நிழலில் வளர்ந்தவர்கள்தான். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் எப்போதும் நம் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்..” என்று தெரிவித்துள்ளார்.










