இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு இயக்குநர் வசந்தபாலன் எழுதியுள்ள இரங்கல் செய்தி இது :
“இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் மரணம் எனக்கு பாடம் கற்றுத் தந்த ஆசிரியனை இழந்தது போல் மனம் தவிக்கிறது.
கே.பாலசந்தர் மாற்று சினிமாவின் பிதாமகன். உலக சினிமா வரிசை இயக்குநர்களில் ஒருவராக வைத்து போற்றப்பட வேண்டியவர்.
கே.பாலசந்தரின் திரைப்படங்கள் உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள தகுதியான திரைப்படங்கள். கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசை வெல்ல கூடிய திரைப்படங்கள்.
கதாநாயக பிம்பத்திற்குள் வழிபாட்டின் தளமாக இருந்த சினிமா துறைக்குள், ஸ்டுடியோவில் வேலை செய்பவர் உண்டு.. கொத்தடிமைகளாய் கதை இலாகா உண்டு.. இயக்குநர்கள் அடிமையாக ஸ்டுடியோவில் இருந்த காலம் அது…. கதாநாயகர்களுக்கு மரியாதை உண்டு.. தயாரிப்பு நிறுவனங்கள் கோலோச்சிய காலம் அது… அன்று இயக்குநர்கள் என்றொரு ஜாதி உண்டு, அதற்கென்று தனியொரு முகம் உண்டு.. குணம் உண்டு என்று உருவாக்கிக் காட்டியவர் இயக்குநர் சிகரம் கே.பி…
சாதிக்கு எதிராகவும், மதங்களுக்கு எதிராகவும், போலியான அரசியலுக்கு எதிராகவும் தன் சாட்டையை பலமாக சுழட்டியவர் கே பாலசந்தர் அவர்கள்.
விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை 1970-களிலே நம் கண் முன் கருப்பு வெள்ளையில் ஓட விட்ட துணிச்சல்தான் கே.பி.
தமிழ்ச் சினிமாவில் பல செண்டிமெண்டுகள் உண்டு. முதல் காட்சியில் ‘வெற்றி வெற்றி’ என கதாநாயகன் கத்தி கொண்டே ஓடி வர வேண்டும். அல்லது கதாநாயகி ‘ஆத்தா நான் பாஸாயிட்டேன்..’ என்று சொல்ல வேண்டும். டைட்டில் நம்பிக்கை கொண்டதாக இருக்கவேண்டும். அறச் சொல் இடம் பெறாத பாடல் வரிகள் வேண்டும் என்று இருந்த தமிழ்ச் சினிமாவிற்குள் தன் முதல் பட டைட்டிலையே ‘நீர்க்குமிழி’ என்று வைத்து வெற்றி கண்டவர் கே.பி.
விபசாரிகளின் வாழ்வில் உள்ள அழகியலை, நம் முன் துணிச்சலாக வைத்தவர் கே.பாலசந்தர். ‘தப்பு தாளங்கள்’..
‘நூற்றுக்கு நூறு’ திரைப்படத்தை ஒரு திரில்லராக எடுத்து வெற்றி கண்டவர் கேபி..
இன்றைக்குக்கூட எடுக்க துணிய முடியாத கதையை அன்றைக்கே அழகுணர்ச்சியுடன் இசையாக பதிவு செய்தவர் கே பாலசந்தர் அவர்கள் – ‘அபூர்வ ராகங்கள்’..
‘தண்ணீர் தண்ணீர்’ போன்ற அரசியல் படத்தை எடுத்து வெற்றி கண்டவர் கே.பாலசந்தர். அந்த தைரியம்தான் கே.பி.
ஒரு திரைப்படத்தின் முதல் பாதியில் ஒரு கதை.. இரண்டாம் பாதியில் ஒரு கதை என்ற புதுமையை புகுத்தியவர் கே.பி. ‘ஒரு வீடு இரு வாசல்’.
கதாநாயகிகளுக்கு இன்று சினிமாவில் காட்சிகள் இல்லை… கதாபாத்திரத்திற்கு வலிமை இல்லை. கே.பி.யின் கதாநாயகிகள் மிக வலிமையான பெண்கள். வல்லமை பொருந்தியவர்கள்.
கதாபாத்திரத்தின் தன்மை ஒரு திரைக்கதை எழுத மிக முக்கியம். ‘கதாநாயகனின் கேரக்டர்சேஷன் என்ன?’ என்று அனைவரும் கேள்வி கேட்பார்கள்… இன்று அனைவரும பேசுகிற கேரக்டர்சேஷனை படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உருவாக்கிய மேதை கே.பி. இருமல் தாத்தாவில் தொடங்கி ஆயிரம் உதாரணம் சொல்லலாம்.
இன்று அனைவரும் பேசுகிறார்கள். ‘பாடலுக்குள் ஒரு கான்செப்ட் வைக்க வேண்டும்’ என்று..! அதை அன்றே செய்து காட்டியவர் கேபி.
சிப்பி இருக்குது முத்து இருக்குது…
சங்கீத ஸ்வரங்கள்…
ஹலோ மை டியர் ராங் நம்பர்…
கடவுள் அமைத்து வைத்த மேடை…
கே.பி.யின் படத் தலைப்புகளில் ஒரு கவிதை-கதை ஒளிந்திருக்கும்…
இருகோடுகள்
பாமாவிஜயம்
சிந்து பைரவி
அவள் ஒரு தொடர்கதை
ஜாதிமல்லி
நிழல் நிஜமாகிறது
கையளவு மனசு
கதாநாயகர்களைவிட, கதாநாயக பிம்பத்திற்குள் ஒளிந்து கொண்டவர் அல்ல கே.பி.
ஆண்மை பொருந்திய இயக்குனர் கே.பி.
என்றும் அழிக்க முடியாத பலம் கே.பி.