400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி

400-வது படத்தில் நடிக்கும் மூத்த நடிகை ‘சௌகார்’ ஜானகி

‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகையான சௌகார் ஜானகிதான்.

தெலுங்கில் ‘சௌகாரு’ என்ற படத்தில் என்.டி.ராமாராவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு ‘ஜானகி’ என்ற தன் பெயருக்கு முன் ‘சௌகாரு’ என்ற பெயரை இணைத்து ‘சௌகார்’ ஜானகி என்று அழைக்கப்பட்டார்.

1952-ம் வருடம் ‘வளையாபதி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், நாகேஷ், ஸ்ரீகாந்த், ஏவி.எம்.ராஜன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஸ்ரீகாந்த் ஆகிய மூவருடன்தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்த ‘புதிய பறவை’ படத்தில் இடம் பெற்ற ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலில் அனைவரின் மனதையும் கவர்ந்தார். அந்த பாடல் இவருக்கு மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.

அதேபோல் ஜெமினி கணேசனுடன் நடித்த ‘இரு கோடுகள்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’ என்ற பாடலில் கணவனை இழந்த இளம்பெண்ணின் உணர்வுகளை தனது நடிப்பால் அவர் வெளிப்படுத்தியவிதம் இன்றும் செளகார் ஜானகியம்மாவை நினைக்க வைக்கிறது.

தனி நாயகியாக பல படங்களில் நடித்திருந்தாலும், கிடைத்த வாய்ப்பை விடாமல் இரு நாயகிகளில் ஒருவர், குணசித்திர வேடங்கள் என்று எந்த கதாபாத்திரத்திற்கும் பொருந்தி விடுவார் செளகார் ஜானகியம்மா.

முன்னணி நாயகர்கள் மட்டுமல்லாமல், அவர் காலத்தில் முன்னணி நாயகிகளாக இருந்த  ஜெயலலிதா, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, விஜயகுமாரி, ஜெயந்தி, வாணிஸ்ரீ, ஆகியோருடனும், மனோரமா, சச்சு, போன்ற நகைச்சுவை நடிகைகளுடனும் நடித்திருக்கிறார் செளகார் ஜானகி.

திரைத்துறைக்கு வந்த ஆரம்பத்தில் வானொலியிலும், 300-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் பங்கேற்றிருக்கிறார். பல நாடகங்களில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடித்திருக்கிறார் செளகார் ஜானகி.

பல படங்களில் பல வேடங்கள் ஏற்றிருந்தாலும், ரஜினிகாந்துடன் ‘தில்லு முல்லு’ படத்தில் இரட்டை பாத்திரத்தில் நடித்து நகைச்சுவையும் தனக்கு பொருந்தும் என்று நிரூபித்தார் செளகார் ஜானகி. அப்படம் இவருக்கு மிகப் பெரிய பாராட்டைக் குவித்தது. அதுமட்டுமல்லாமல், இவரின் நகைச்சுவை படத்திற்கும் பெரும் பலம் சேர்த்தது.

இயல்பான நடிப்பால் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் வசப்படுத்திய ‘சௌகார்’ ஜானகி ‘இரு கோடுகள்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதினை வென்றார். மேலும், ‘ஃபிலிம்பேர்’ மற்றும் ‘சைமா’ இரண்டிலும் வாழ்நாள் சாதனையாளர் விருது, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘நந்தி விருது’ ஆகியவைகளையும் வென்றிருக்கிறார். இவருடைய கலை சேவையை கௌரவித்து தமிழ்நாடு அரசு ‘கலைமாமணி’ விருதையும் வழங்கியிருக்கிறது.

திரைத்துறைக்கு வந்த நாள் முதல் இன்றுவரை இடைவிடாமல் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் செளகார் ஜானகியம்மா. கமலுடன் நடித்த ‘ஹேராம்’ படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய ‘சௌகார்’ ஜானகியம்மா, தற்போது ஆர்.கண்ணன் இயக்கி வரும் புதிய படத்தில் நடிக்கிறார். இது இவருக்கு 400-வது படமாகும்.

தனது இயக்கத்தில் ‘சௌகார்’ ஜானகி நடித்ததையும் அவருடன் ஏற்பட்ட அனுபங்களையும் பற்றி இயக்குநர் கண்ணன் பேசும்போது, “சௌகார்’ ஜானகியம்மா எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவரின் நடிப்பு தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். ரஜினிகாந்த் நடித்த ‘தில்லு முல்லு’ படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் சவாலான நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

அதேபோல் இப்போது நான் இயக்கி வரும் இந்தப் படத்திலும் சந்தானத்துடன் இணைந்து ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதால் அவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

நான் அவரின் கதாபாத்திரத்தைப் பற்றி கூறியதும் ஆர்வமுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படத்தில் இவருடன் ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். 

மிகப் பெரிய நடிகை… 70 ஆண்டுகளாக பல பெரிய நாயகர்களுடன் நடித்திருந்தாலும், இந்த வயதிலும் நடிப்பின் மீதிருந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் சிறிதும் குறையவில்லை. மேலும், அவரிடம் எனக்கு வியப்பையும், மரியாதையையும் ஏற்படுத்திய விஷயம் அவருடைய ஞாபகத் திறன்தான்.

இதுவரை 15 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அவருடைய பகுதி முடிவடைந்து விடும். 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் இப்படம் வெளியாகவுள்ளது..” என்றார்.

Our Score