“கதைக்கு தேவையானால் நெகட்டிவ் ரோலில்கூட நடிக்கத் தயாராக இருப்பதாக” ‘விநோதய சித்தம்’ படத்தில் நடித்திருக்கும் நடிகை ஷெரின் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘விநோதய சித்தம்’. இந்தப் படத்தில் ‘மகாலட்சுமி’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அறிமுக நடிகை ஷெரினா. குறிப்பாக படத்தில் இவர் பேசும் ஒரு வசனம் தற்போது ரொம்பவே பிரபலமாகி விட்டது.
கேரளாவில் பிறந்து பெங்களூரில் வளர்ந்து, படிப்பை முடித்த பின், விமான பைலட் ஆக நினைத்தவர், எதிர்பாராதவிதமாக மாடலிங்கில் நுழைந்து அப்படியே சினிமா பயணத்தில் இணைந்ததெல்லாம் ஷெரினாவே திட்டமிடாமல் நடந்த நிகழ்வுகள்.
விதவிதமான பேஷன் ஷோக்கள், விதவிதமான டிசைனர் ஷோக்கள், விளம்பரப் படங்கள் என பிசியான நபராக மாறிப் போனார் ஷெரினா. சென்னை சில்க்ஸ், மலபார் கோல்டு, போத்தீஸ் உள்ளிட்ட பல விளம்பரங்களில் நடித்துள்ளார் ஷெரினா.
மாடலிங், விளம்பரத்தைத் தொடர்ந்து திரையுலகத்திற்குள் நுழைந்த ஷெரினா முதன்முதலாக சுப்புராம் என்பவர் இயக்கத்தில் உருவான ‘அஞ்சாமை’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார்.
அந்த சமயத்தில்தான் ஒரு விளம்பரப் படத்தில் இயக்குநர் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தார் ஷெரினா. அப்போது அவரது நடிப்பை பார்த்து வியந்த இயக்குநர் சமுத்திரக்கனி, அவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பதை அறிந்ததும், தான் இயக்கும் ‘வினோதய சித்தம்’ என்கிற படத்தில் நடிக்கிறாயா என கேட்டுள்ளார், இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு அமையுமா என இரட்டிப்பு சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டார் ஷெரினா.
இதோ படம் வெளியாகி ‘மகாலட்சுமி’ என்கிற கதாபாத்திரமாக ரசிகர்களின் கவனத்துக்கு ஆளாகி பாரட்டுக்களையும் பெற்று வருகிறார்.
“இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன் நீ உன் கதாபாத்திரத்திற்காக எந்தவிதமாகவும் தயார் செய்ய வேண்டாம். அப்படியே ப்ரெஷ்ஷாக படப்பிடிப்புக்கு வந்து உனக்கு எப்படி தோன்றுகிறதோ அந்த மாதிரி நடித்தால் போதும் என கூறி என்னுடைய பதட்டத்தை ஆரம்பத்திலேயே போக்கி விட்டார் சமுத்திரக்கனி சார்.
அதனால் நடிப்பது எளிதாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, முனீஸ்காந்த் ஆகியோருடன் பழகிய நாட்களில் அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
மகாலட்சுமிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் தான் அஞ்சாமை படத்தில் நடித்துள்ளேன்,, இதில் சீக்ரெட் ஜர்னலிஸ்ட்டாக நடித்துள்ளேன். இதில் எனக்கு பலவித கெட்டப்புகளும் உண்டு. இந்தப் படம்தான், நான் நடித்த முதல் படம் என்றாலும் ‘விநோதய சித்தம்’ முதலில் வெளியாகி விட்டது. இந்தப் படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
கதாநாயகியாக நடிப்பதுடன், கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடிக்க ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன். கதைக்கு முக்கியமான, அதேசமயம் எனக்கு பேர் கிடைக்கும் கதாபாத்திரம் என்றால் நெகடிவ் சாயல் கொண்ட கதாபாத்திரங்களில்கூட நிச்சயமாக நடிப்பேன்..” என்கிறார்.