full screen background image

“தமிழ்ச் சினிமாவில் எனக்கான இடம் கிடைத்தே தீரும்…” நடிகை ஷாதிகாவின் நம்பிக்கை..!

“தமிழ்ச் சினிமாவில் எனக்கான இடம் கிடைத்தே தீரும்…” நடிகை ஷாதிகாவின் நம்பிக்கை..!

சினிமாவுக்கு வந்து வெற்றி பெறுபவர்களில் இரு வகையினர் உண்டு. திடுதிப்பென ஒரே படம் மூலம் உயரே செல்பவர்கள் ஒரு ரகம். படிப்படியாக மேலேறி உயரம் செல்பவர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்தான் நடிகை ஷாதிகா.

அண்மையில் வெளியாகியுள்ள சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் நாயகன் சந்தீப்பின் தங்கையாகவும், விக்ராந்தின் காதலியுமான அனு பாத்திரத்தில்  நடித்திருப்பவர்தான்  இந்த ஷாதிகா.

படத்தின் நாயகி ஷாதிகா இல்லையென்றாலும்,  கதையில் கவனம் குவியும் கதாபாத்திரத்தில் வந்திருப்பவர்.

Actress Shathika-2

இதற்கு முன் ஷாதிகாவின் கதை என்னவென்று கேட்டால் வழக்கமாக பலருக்கும் உள்ளதைப் போல அது  சிறுகதையாக இருக்காது. பெரிய தொடர்கதையே எழுதும் அளவுக்கு ஒரு வரலாறையே உருவாக்கி வைத்துள்ளார் இந்த ஷாதிகா .

சென்னைப் பெண்ணான  இவர், லயோலாவில் பி.டெக் படித்து  முடித்தவர். இவர் குழந்தையாக இருந்தபோது… ஏன் பேச்சு வராதபோதே கேமரா பார்த்து நடித்த அனுபவம் கொண்டவர்.

அரிராஜனின் ‘மங்கை’ தொலைக்காட்சித்  தொடரில் நடித்தபோது இவருக்கு இரண்டு வயது. சீமானின் ‘வீர நடை’ படம்தான் இவரது முதல் சினிமா அனுபவம். அப்போது இவரது வயது இரண்டரைதான்.

அதன் பிறகு ஆளும் வளர வளர.. வாய்ப்புகளும் பெருகியிருக்கின்றன. ‘ரோஜா வன’த்தில் குட்டி லைலா,’ குபேரனி’ல் கெளசல்யாவின் மகள், ‘சமஸ்தான’த்தில் சரத்தின் மகள், ‘ராமச்சந்திரா’வில் சத்யராஜின் மகள், ‘ஆனந்தம்’ முரளியின் மகள், என்று வளர்ந்து  ‘குருவி’யில் விஜய்யின் தங்கையாகி ‘மாசிலாமணி’யில் சுனைனாவின் தங்கை என்று கலந்து கட்டி 30 படங்கள் நடித்து விட்டார்.

Actress Shathika-1

அது மட்டுமல்ல தொலைக்காட்சியில் ‘சித்தி’ தொடரில் வில்லி யுவராணியின் மகள். ‘கோலங்கள்’ தொடரில் தொல்காப்பியனின் சிறுவயது தங்கை என்று நடித்தும் உள்ளவர்.

சுட்டி டிவியில் சுட்டி தொகுப்பாளராக மூன்று ஆண்டுகள் அனுபவம். அது மட்டுமல்ல குழந்தை நட்சத்திரங்களுக்கெல்லாம்  பின்னணிக் குரலும் கொடுத்திருக்கிறார். சில குறும் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’ என்ற குறும் படம், பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவுக்குப்  போன ஒரே தமிழ்க்  குறும்படம் என்கிற பெருமையைப் பெற்றதாகும். நடிகை ரேவதி இயக்கிய குறும் படமான ‘கயல் விழி’யில் ஷாதிகாதான் கயல்விழி. இப்படி இவரது அனுபவம் நீள்கிறது.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ இவர் நடித்த நான்காவது படம்.

Actress Shathika-4

இப்பட அனுபவம் பற்றி ஷாதிகா கூறும்போது, “சிறு வயது குழந்தையாக பல படங்களில் நடித்திருக்கிறேன். சற்று வளர்ந்த பெண்ணாக’ நான் மகான் அல்ல ‘ படத்தில் நடித்தேன். அந்த வாய்ப்பு எனக்கு பெரிய பிரேக் .பெரிய அடையாளம். அப்படிப்பட்ட வாய்ப்பை வழங்கியவர் சுசீந்திரன் சார். என்னை எங்கே பார்த்தாலும்  அடையாளம் காண்கிறார்கள் என்றால் ‘நான் மகான் அல்ல’ படமே காரணம்.

சுசீந்திரன் சாரைப் பொறுத்தவரை அவர் என்னைப் போல சிலரைக் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் மாதிரி வைத்திருப்பார். அவர் எப்போது கூப்பிட்டாலும் படப்பிடிப்புக்குக் கிளம்பி விடுவோம். கதை எல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம்.  படப்பிடிப்பில்தான்  தெரியுமே என்று நம்பி புறப்பட்டு விடுவோம்.  அதற்காகத்  தன் பாத்திரத்துக்கு ஏற்றபடி பயன்படுத்திவிட்டு காரியம் முடிந்தது என்று அவர்களை கறிவேப்பிலையைப் போலத் தூக்கி எறிந்து விட மாட்டார்.

கதாபாத்திரமாக மட்டுமல்லாமல் சிறிது நேரமே வந்தாலும் அந்த நடிகர் அல்லது நடிகைக்கு நடிப்பிலும் பெயர் பெற்றுத் தரும்படி  அந்த வாய்ப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.

அப்படித்தான்  ‘நான் மகான் அல்ல’ படத்தில் கொலை செய்யப்படும் பெண்ணாக நடிக்க வைத்தார். ‘பாயும் புலி ‘படத்தில் விஷாலின் தங்கை,’ மாவீரன் கிட்டு’வில் ஸ்ரீதிவ்யாவின் தோழி என நடிக்க வைத்தார்.  அப்படியே அந்தப் படங்களிலும் வந்தேன். இப்போது ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ வாய்ப்பு கொடுத்திருக்கிறார். குறிப்பாக  இது தமிழ், தெலுங்கில் உருவான படம்.

Actress Shathika-5 

நான் நாயகி, குணச்சித்திரம் என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பதில்லை.  பத்து நிமிடம் வந்தாலும் மனதில் பதிகிற மாதிரி நடிக்கவே விரும்புவேன். நல்ல பாத்திரம் முக்கியம். அதில்தான் எனக்கு மகிழ்ச்சி. திருப்தி.

ஆனாலும் கதாநாயகியாகவும் நடிப்பேன். ஒரு பக்கம் அதற்குரிய முயற்சியில்தான் இருக்கிறேன்.  நான் குழந்தையாக நடித்தது முதல் இன்றுவரை எனக்கு என்னைத் தேடி வந்து  அமைந்த வாய்ப்புகள்தான் என்னை வளர்த்துள்ளன.. செதுக்கியுள்ளன. அதனால்  என் தேடலின்போதே  எனக்கேற்றபடி கதாநாயகி வாய்ப்பும்  வரும் என்று  நம்புகிறேன்.

நான் படிப்பிலும் படு சுட்டி. பள்ளி நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட நாள்களில்  படப்பிடிபபில் இருந்தாலும் அது படிப்பைப் பாதிக்காதபடி நன்றாகப் படிப்பேன். ப்ளஸ் டூ-வில் 90% மார்க் எடுத்தேன். பி.டெக் முடித்தேன். இப்போது எம்.பி.ஏ. கரஸில் சேர  இருக்கிறேன்…” என்கிறார்.

இப்போது ஷாதிகா சுசீந்திரனின் ‘ஏஞ்சலினா ‘ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முத்தாய்ப்பாக அவர் சொன்னது இதுதான்..!

“தமிழ் தெரிந்த, நடிக்கவும் தெரிந்த, டப்பிங் பேசவும் தெரிந்த, நல்ல நடிப்புக்கான வாய்ப்பை மட்டும் விரும்புகிற ஒரு நடிகை இருக்கிறார். தேடிக் கொண்டிருக்கும் தனக்கான வாய்ப்பு கனியும் என்கிற  தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் என்று மட்டும் எழுதுங்கள்…” என்றார்.

இதோ எழுதியாச்சு..!

Our Score