full screen background image

“நான் உயிருடன்தான் இருக்கிறேன்..” – நடிகை ரேகாவின் கோபப் பேச்சு..!

“நான் உயிருடன்தான் இருக்கிறேன்..” – நடிகை ரேகாவின் கோபப் பேச்சு..!

இயக்குநர் சந்திரமெளலியின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே, ஜெயசித்ரா, ரேகா உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘100% காதல்’.

தெலுங்கில் வெளியான ‘100% லவ்’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இத்திரைப்படம். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, அடுத்த வாரம் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தில் பங்கு கொண்ட நடிகர், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரேகா பேசும்போது அவரைப் பற்றி தவறான செய்தியை வெளியிட்ட யு டியூப் தயாரிப்பாளர்களை கடுமையாகக் கண்டித்தார்.

நடிகை ரேகா இது குறித்து பேசும்போது, “இந்தப்  பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ரஜினி சார், விஜய் சார், அஜித் சார் எனப் பலரும் பன்ச் வசனங்கள் பேசுவார்கள். நான் பன்ச் வசனங்கள் பேசும் அளவுக்குப் பெரிய சூப்பர் ஸ்டார் அல்ல. ‘உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் போயிட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்’ என்று விஜய் சார் சொன்னது போல் இருக்கிறேன்.

ஆனால், போன  ஆகஸ்ட் 17-ம் தேதியிலிருந்து நான் இறந்துவிட்டதாக ஒரு செய்தி யு டியூபில் பரவியது. என்னைப் புதைத்து அருகில் ரஜினி சார், விஜய் சார் இருவரும் எட்டிப் பார்ப்பதுபோல் போட்டோஷாப்பில் ஒரு டிசைன் செய்து அந்த யு டியூபில் காட்டியிருக்கிறார்கள்.

எனக்கு ஒன்றுமேயில்லை. நான் நல்லாத்தான், உயிரோடுதான் இருக்கிறேன். என் கணவர், பொண்ணுடன் சந்தோஷமாக இருக்கிறேன். என் பொண்ணு இப்போ லண்டன்ல படிச்சுக்கிட்டிருக்காங்க. அப்புறம் ஏன் இப்படியெல்லாம் செய்தி போட வேண்டும்..?

இப்போதெல்லாம்  பல்வேறு ஊர்களில் இருப்பவர்கள் யூ-டியூப் சேனலை தொடங்கி, அதில் தேவையில்லாத விஷயங்களைப் போட்டு அதன் மூலம் வருமானம் பெறுகிறார்கள். இது எந்த நிலைக்குப் போகும் எனத் தெரியலை..?

பிரபலங்கள் இறந்து விட்டார்கள் என்று செய்தி பரப்பப்படும்போது பிரபலங்களைவிட அவர்களைச் சேர்ந்தவர்களை அது ரொம்பவே வருத்தப்பட வைக்கும்.

என்னிடமே சில நடிகர்கள் தொலைபேசியில் ‘நீ இறந்துட்டியாமே..?’ என்று கேட்டார்கள். ‘ஆமா.. இப்போ ரேகாவோட பேய்தான் பேசுகிறேன்’ என்று சொன்னேன். இப்படி ‘இறந்துட்டீங்களா’ என்று என் தொலைபேசியிலேயே அழைத்து பலரும் கேட்கும்போது எனக்கு ரொம்பவே வருத்தமாவும், அதிர்ச்சியாவும் இருந்துச்சு.

என் மரணச் செய்தி தொடர்பான அந்த வீடியோவை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்காங்க. இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால், பிரபலங்கள் இறந்துட்டா, அதை எட்டிப் பார்ப்பதற்கு இப்படியும் லட்சக்கணக்கில் ஆள் இருக்கிறார்கள்.

இப்படி நம்ம இறந்துட்டோம்ன்னு   நாமளே விளம்பரப்படுத்துவோமா? நான் செத்துப் போய் விட்டேன் என்று நானே எப்படிச் சொல்ல முடியும்..? இதை எல்லாம் கேட்காமல் இருப்பதால்தான், இதை வைத்து பணம் பண்றாங்க.

100 படங்களைத் தாண்டிவிட்டாலும் எனக்கு இன்னும் மாநில அரசு, மத்திய அரசு விருதுகள் வாங்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அதை நோக்கி போய்க்கிட்டிருக்கேன்.

இப்படி தப்பும், தவறுமான செய்திகளை போடுபவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்..” என்று கோபமாகப் பேசி முடித்தார் நடிகை ரேகா.

Our Score