full screen background image

கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பை நிறுத்திய இந்து அமைப்புகள்

கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பை நிறுத்திய இந்து அமைப்புகள்

ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சுல்தான்’.

இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாகவும், ராஷ்மிகா நாயகியாகவும் நடிக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ படத்தை இயக்கிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது திண்டுக்கல்லில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கடந்த செப்டம்பர் 24-ம் தேதியன்று திண்டுக்கலில் இருக்கும் புராதன நினைவுச் சின்னமான மலைக்கோட்டையில் இந்த ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இதனை அறிந்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் ‘சுல்தான்’ என்ற முஸ்லிம் மன்னர் பெயரில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பை மலைக்கோட்டையில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கோட்டையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, படக் குழுவினர் அங்கிருந்து சென்றனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

sulthan-shooting-cancelled-producer-statement

அந்த அறிக்கையில், “எங்களது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்க பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘சுல்தான்’ படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை, திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.

இதனிடையே இப்படம் ‘திப்பு சுல்தான்’ வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகவும், அதனை திண்டுக்கல், மலைக்கோட்டையில் எடுக்கக் கூடாதெனவும் கூறி ஒரு அமைப்பினர், செப்டம்பர் 24-ம் தேதி படப்பிடிப்பு தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துகளால் இருவேறு அமைப்புகளிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

இது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமீப காலங்களாக சுய விளம்பர நோக்கில் திரைப்படங்களைத் தனி நபர்களும், சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஒரு திரைப்படம் எதைக் காண்பிக்கக் கூடாதென்பதை உறுதி செய்யத் தணிக்கைக் குழு உள்ளது. இது தவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அப்படத்தின் படைப்பாளிக்கே உள்ளது. இது நம் நாட்டின் சட்டம். நமக்கு அளிக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும்.

ஆகவே எந்தவொரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும், வரலாற்றுத் தலைவர்களுக்கும், தேசியத் தலைவர்களுக்கும் சாதி, மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும் நமது வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறோம்…” என்று தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மலைக்கோட்டையை மையமாகக் கொண்டு திப்பு சுல்தான், ஹைதர் அலி, பிரிட்டிஷ் அரசு, நாயக்கர்கள், மராட்டியர்கள் என்று பல்வேறு அரச பரம்பரையினரும் பல்வேறு காலக்கட்டங்களில் ஆட்சி நடத்தியுள்ளனர்.

அதே மலைக்கோட்டையில் கோவில் ஒன்றும் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அந்தக் கோவிலுக்கு யாரும் செல்வதில்லை என்பதால் அது ஆட்சியாளர்களின் கோட்டையாகவே கருதப்பட்டது.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் அங்கேயிருந்த அம்மன் சிலை கீழே கொண்டு வரப்பட்டு திண்டுக்கல் நகருக்குள் ஒரு கோவில் அமைத்து அங்கே பிரதிஷ்டை அமைக்கப்பட்டது.

ஆனால் இப்போது இந்து அமைப்புகள் “மலைக்கோட்டையில் கோவிலை திரும்பவும் புனரைமைப்பு செய்ய வேண்டும். அம்மன் சிலையை அங்கே வைக்க வேண்டும். பொதுமக்கள் மலைக்கோட்டை கோவிலை வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும். கிரி வலம் வரும்போது கோட்டையில் இருக்கும் கோவிலுக்குள் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்…” என்று கோரி வருகின்றனர்.

ஆனால் திண்டுக்கல் மலைக்கோட்டையை தற்போது பராமரிப்பு வரும் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர். இந்தக் கோபத்தில்தான் இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து ‘சுல்தான்’ என்கிற ஒரு பெயரை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி படப்பிடிப்பை நடத்தவிடாமல் செய்துள்ளனர்.

இவர்களின் இந்த ஈனச் செயல் ‘சுல்தான்’ என்னும் இஸ்லாமிய பெயரை அடிப்படையாக வைத்து ‘இஸ்லாம் மத’த்தின் மீது இந்து அமைப்புகள் கொண்டிருக்கும் வெறுப்புணர்வையே காட்டுகிறது..!

வட இந்தியாவில் இருந்த மத வெறி, மெல்ல மெல்ல அமைதிப் பூங்காவான தமிழகத்தையும் நசுக்க ஆரம்பித்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகும்.

Our Score