full screen background image

“பாலியல் தொல்லை தந்த நடிகர்களின் பெயர்களை சொல்ல மாட்டேன்…” என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

“பாலியல் தொல்லை தந்த நடிகர்களின் பெயர்களை சொல்ல மாட்டேன்…” என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மலையாள சினிமாவில் பெண்கள் மீதான பாலியல் புகார்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியான பின், மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து தொடர்ச்சியாகப் பல நடிகர்கள், இயக்குநர்கள் மீது புகார் தெரிவித்து வருகின்றனர். அந்தப் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நடிகர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசி வருகின்றனர்.

அந்த வகையில், கேரளாவில் தான் நடித்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கேரவனில் கேமராக்கள் வைக்கப்பட்டிருந்ததாக நடிகை ராதிகா குற்றம்சாட்டினார்.

அந்த ரகசிய கேமராக்கள் மூலமாக நடிகைகள் உடை மாற்றுவதை சிலர் வீடியோவாக எடுத்துப் பார்த்து ரசித்த்தாகவும், தன் சக நடிகை ஒருவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது அதை எட்டிப் பார்த்தவரின் முகத்தில் தான் சுடு தண்ணீரை ஊற்றியதாகவும் நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்திருந்தார்.

தைத் தான் வெளியில் சொன்னவுடனேயே நடிகர் மோகன்லால் தன்னை செல்போனில் அழைத்து நடந்ததை விசாரித்ததாகவும் ராதிகா குறிப்பிட்டிருந்தார். அதேபோல் இந்தக் கேரவன் குற்றச்சாட்டு தொடர்பாக, நடிகை ராதிகாவிடம் கேரள சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தொலைபேசியில் விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், நடிகை ராதிகா தரப்பில் எவ்வித புகாரும் அளிக்கப்படாததால் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே, தன்னுடைய ராடான் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வரும் தாயம்மா என்ற சீரியல் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பை ராதிகா சரத்குமார் இன்று நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது செய்தியாளர்களைச் சந்தித்த ராதிகா, “கேரவன் விவகாரம் தொடர்பாக கேரள சிறப்பு புலனாய்வுக் குழு என்னை தொடர்பு கொண்டது. ஆனால், நான் புகார் எதுவும் தராததால் அவர்கள் மேற்கொண்டு விசாரணை செய்யவில்லை. கேரவன் விவகாரம் தொடர்பாக விளக்கம் மட்டுமே அளித்தேன். புகார் அளிக்கவில்லை.

ஹேமா கமிட்டி குறித்து தமிழ் சினிமாவின் பெரிய நடிகர்கள் பேசாமல், மவுனம் காப்பது தவறு. ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் குரல் கொடுத்தால்தான் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

தமிழ் சினிமாவிலும் பாலியல் சுரண்டல்கள் உள்ளன. ஆனால், அது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.

நான் 1980-களில் இருந்து நடித்து வருகிறேன். என்னுடைய திரையுலக வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகள் வந்தாலும் தனியாகத்தான் எதிர்கொண்டுள்ளேன். பாலியல் தொல்லைகள் பற்றி என்னிடம் நிறைய நடிகைகள் தெரிவித்துள்ளனர். நானும் நிறைய பேரை காப்பாற்றியிருக்கிறேன். அவர்கள் யார், யார் என்று எனக்குத் தெரியும்.

எனினும், பாலியல் தொல்லை தந்த அந்தப் பெரிய நடிகர்களின் பெயர்களை சொல்ல மாட்டேன். சொல்லவும் முடியாது. நிறைய பேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அதனை பற்றி பேசவும் நான் விரும்பவில்லை.

நமது கோலிவுட்டில் ஹேமா கமிட்டி போன்ற குழு அமைக்கப்படும் என விஷால் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் விஷாலுக்கு அறிவுரை வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன்..” என்றார்.

Our Score