‘தவமாய் தவமிருந்து’ என்ற சேரனின் படத்தில் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகை பத்மபிரியா.
இதன் பின்பு ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, ‘பொக்கிஷம்’, ‘இரும்புக் குதிரை முரட்டுச் சிங்கம்’, ‘தங்கமீன்கள்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ‘பிரம்மன்’ படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார்.
நேற்றைக்கு சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இயக்குநர் சேரனின் C2H நிறுவன அறிமுக நிகழ்ச்சியில், நடிகர் மிர்ச்சி செந்திலுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விருந்தினர்களை மேடைக்கு அழைக்கும்போது இயக்குநர் இமயம் பாரதிராஜாவை பார்த்து “பாக்யராஜ் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்..” என்று சொல்ல அரங்கமே ஒரு நிமிடம் திகைத்துப் போனது. இதைக் கேட்டு முன் வரிசை பிரமுகர்கள் வாய்விட்டுச் சிரிக்க.. பாரதிராஜாவும் சிரித்துவிட்டார்.
இதற்குப் பின்பும் மீண்டும் இரண்டு முறை பாரதிராஜாவை பார்த்து “திரு.பாக்யராஜை மேடைக்கு அழைக்கிறோம்..” என்று சொல்ல இன்னொரு மூலையில் அமர்ந்திருந்த இயக்குநர் கே.பாக்யராஜ் எழுந்து “அம்மா அவர் பாரதிராஜாம்மா.. நான் இங்க உக்காந்திருக்கேன்..” என்று சொல்லியும் பத்மபிரியா திரும்பாமல் பாரதிராஜாவையே பார்த்துக் கொண்டிருக்க.. “என்ன கொடுமை சரவணா இது..” என்ற சிரிப்போடு மேடையேறினார் பாக்யராஜ்..
கிட்டத்தட்ட 10 வருடங்களாக தமிழ், மலையாளம் பீல்டில் இருக்கும் நடிகை பத்மபிரியாவுக்கு பாக்யராஜ், பாரதிராஜா இருவரின் அடையாளமே தெரியாத நிலையென்றால் என்னத்த சொல்றது..?
இதாவது பரவாயில்லை.. நம்ம தமிழ் நடிகர் மிர்ச்சி செந்தில் தன் பங்குக்கு “இயக்குநர் சிகரம் பாரதிராஜாவை மேடைக்கு அழைக்கிறோம்..” என்றார். சரி.. ஒரு முறைதானே.. திருத்திக் கொள்வார் என்று எதிர்பார்த்தால், பேச அழைத்தபோதும் மீண்டும் “இயக்குநர் சிகரம் பாரதிராஜாவை பேச அழைக்கிறோம்..” என்றார்..
நீங்களெல்லாம் நல்லா வருவீங்கப்பா..!