பெப்ஸியின் பெயர் 6 மாதங்களில் மாறுகிறதாம்..!

பெப்ஸியின் பெயர் 6 மாதங்களில் மாறுகிறதாம்..!

தமிழ்த் திரையுலகின் உச்ச அமைப்பான ‘பெப்ஸி’ எனப்படும் ‘தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின்’ பெயர் இன்னும் ஆறு மாதங்களில் மாற்றப்பட இருப்பதாக ‘பெப்ஸி’யின் தற்போதைய தலைவரும், இயக்குநர், நடிகருமான அமீர் தெரிவித்துள்ளார்.

‘பெப்ஸி(FEFSI) எனப்படும் தென்னிந்தியை திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்((Film Employees Federation of South India)’ தமிழ் சினிமா துறையில் இருக்கும் 27 சங்கங்களை உள்ளடக்கியது.. இந்த அனைத்து சங்கங்களிடையே அவ்வப்போதும் எழும் பிரச்சினைகளை விசாரித்து தீர்வு சொல்வது.. வேறு மாநில சங்க உறுப்பினர்களுக்கும் தமிழ் மாநில சங்கங்களுக்கும் இடையேயான பிரச்சினைகளைத் தீர்ப்பது.. அனைத்து சங்க உறுப்பினர்களின் ஊதியத்தை தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசி நிர்ணயிப்பது.. ஊதியத்தை வாங்கிக் கொடுப்பது என்று தமிழ்த் திரையுலகின் அடிப்படையே இந்த பெப்ஸி அமைப்புதான்.

இந்த பெப்ஸி அமைப்பு 1961-ம் ஆண்டு தோழர்கள் நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாசன் ஆகியோரால் துவக்கப்பட்டது. எம்.பி.சீனிவாசன்தான் பெப்ஸியின் முதல் தலைவராகவும் இருந்தவர்.. இந்த பெப்ஸி அமைப்பு அகில இந்திய பெப்ஸி அமைப்புடன் இணைக்கப்பட்டது.

இதன் மூலம் தமிழ்க் கலைஞர்கள் இந்தியாவில் எந்த மொழி திரைப்படத்திலும் நடிக்கலாம்.. வேலை செய்யலாம் என்ற நிலைமை ஏற்பட்டு இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள சினிமா தொழிலாளர்கள் அனைவரும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டனர்..

முதலில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்ஸியில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழக அமைப்புகள் இடம் பெற்றிருந்தன. காலப்போக்கில் தமிழகம் தவிர மற்ற மாநில சினிமா அமைப்புகள் தங்களது மாநிலத்திலேயே தங்களது மாநிலத்தின் பெயரிலேயே ஒரு தொழிலாளர் சம்மேளனத்தை நிறுவிக் கொண்டன.

கர்நாடக திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், கேரள திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், ஆந்திர திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்று அவைகள் அழைக்கப்பட்டு அவைகளும் அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்டு பணியாற்றி வருகின்றன.

கேரளா, ஆந்திரா, கர்நாடக அமைப்பினர் பிரிந்து சென்ற பின்பும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட பெப்ஸியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டவில்லை. இதனால், மற்ற தென்னிந்திய மாநிலங்களை போல தமிழகத்திலும் மாநில மொழி சம்மேளனத்தை அமைக்க வேண்டும் என்று தமிழ்த் திரைப்படத் துறையில் இருப்பவர்கள் நீண்ட காலமாக போராடி வந்தார்கள்.

2000-வது ஆண்டில் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் பெப்ஸியின் தலைவராக இருந்தபோது பெப்ஸியின் பெயரை ‘தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனமாக’  மாற்ற வேண்டும் என்று கோரி இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் பல இயக்குநர்கள் போராடினார்கள்.  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். பெப்ஸியின் அலுவலகத்திற்குள்ளேயே கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்தப் போராட்ட விஷயத்தில் பாலசந்தருக்கும், பாரதிராஜாவுக்கும் இடையில் கருத்து மோதல் எழுந்து இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் பேசாமல் இருந்தது திரையுலகத்தில் அனைவருக்கும் தெரிந்ததுதான்.. கே.பாலசந்தர் பெப்ஸியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்புதான் பாரதிராஜா அவருடன் மீண்டும் நட்பு பாராட்டினார்.

அதற்கு பின்பும்கூட பாரதிராஜா தலைமையில் பல முறை போராடியும் கிடைக்காத பலன், இப்போது இயக்குநர் அமீர் தலைமையிலான பெப்ஸி நிர்வாகிகள் காலத்தில் கிடைத்திருக்கிறது.

director-ameer-at-fefsi-meet

இந்த நிலையில் பெப்ஸி இன்னும் ஆறு மாத காலத்தில் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று பெப்ஸியின் தலைவர் அமீர் தெரிவித்தார். இனி வரும் காலத்தில் ‘பெப்ஸி’, ‘பெப்டா’ என்று பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாம். அதாவது ‘Film Employees Federation of Tamilnadu-FEFTA’-வாக மாறவுள்ளது.

நேற்று இரவு காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இயக்குநர் சேரனின் C2H நிறுவனத்தின் அறிமுக விழாவில் பேசும்போது இயக்குநர் அமீர் இதனைத் தெரிவித்தார். அதோடு பெப்ஸியின் புதிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார் அமீர்.

ஆனாலும் நாம் விசாரித்தவரையில் பெப்ஸியின் நேற்றைய பொதுக்குழுவில் இது பற்றி எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லையாம்.. அப்படியிருந்தும் அமீர் எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறார் என்று தெரியவில்லை என்கிறது சினிமா வட்டாரம்.

இனிமேல் புதிதாக வரவிருக்கும் பெப்ஸியின் நிர்வாகிகள் இது பற்றி தீர்மானம் நிறைவேற்றி அகில இந்திய தொழிலாளர் சம்மேளனத்துக்கு அதனை அனுப்பி அங்கேயிருந்து அது ஓகேவாகி வரவே 6 மாதங்களாகிவிடும் என்கிறார்கள். வரவிருக்கும் புதிய நிர்வாகிகளில் எத்தனை பேருக்கு இந்தப் பெயர் மாற்றலில் சம்மதம் இருக்கும் என்று தெரியவில்லை.

ஆனால் அமீர் தரப்பில் விசாரித்தபோது தற்போதைய இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, பெப்ஸியின் அடுத்தத் தலைவராக வருவதற்கு கடும் முனைப்பில் இருக்கிறாராம். அமீர் தலைமையில் இயக்குநர் சங்கமே இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறதாம்..

ஒருவேளை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பெப்ஸியின் தலைவராக பொறுப்பேற்றால் முதல் பொதுக்குழு கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் இயக்குநர் சங்க நிர்வாகிகள். ஏனெனில் 2000-ம் ஆண்டில் பெப்ஸியின் தலைவராக இருந்த கே.பாலசந்தருக்கு எதிராக இயக்குநர் பாரதிராஜா அன்றைக்கு நடத்திய பெப்ஸியின் பெயர் மாற்ற போராட்டத்தில் தளபதியாக இருந்தவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணிதான்..!

சினிமாவிலும் பக்கா அரசியல்..!

Our Score