full screen background image

34 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த ‘ஒரு தலை ராகம்’ திரைப்பட குழுவினர்..!

34 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த ‘ஒரு தலை ராகம்’ திரைப்பட குழுவினர்..!

1980-ல் வெளிவந்து ஒரு வருடம் ஓடி மகத்தான சாதனை படைத்த ‘ஒரு தலை ராகம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர்  சங்கர். இதற்குப் பின்னர் தமிழ், மலையாளம் என்று 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ‘ஒரு தலை ராகம்’ சங்கர் என்றே இப்போதுவரையிலும் அழைக்கப்படும் இவர் முதல்முறையாக தமிழில் இயக்கியுள்ள படம் ‘மணல் நகரம்.’

இந்தப் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நேற்று ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடந்தது. தான் இயக்கியிருந்ததால் ‘ஒரு தலை ராகம்’ படத்தில் நடித்தவர்களை சந்திக்க ஏற்பாடு செய்து, விழாவுக்கு வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டு இருந்தார் இயக்குநர் சங்கர்.

அதன்படி ஒரு தலை ராகம் படத்திற்கு பாடல்கள் எழுதி, இசையமைத்து, எடிட்டிங் செய்திருந்த இயக்குநர் டி.ராஜேந்தர், நாயகி ரூபா, நடிகர்கள் தியாகு, தும்பு கைலாஷ்,  ஒளிப்பதிவாளர் ராஜசேகரன், படத்தின் பி.ஆர்.ஓ.வாக இருந்த டைமண்ட் பாபு என ‘ஒரு தலை ராகம்’ படக் குழுவினர் மேடையை அலங்கரித்தனர். ரவீந்தர், உஷா, இயக்குநர் ராபர்ட், வாகை சந்திரசேகர் ஆகியோர்தான் வரவில்லை..

‘மணல் நகரம்’ ஆடியோவை டி.ராஜேந்தர் வெளியிட்ட நடிகை ரூபா பெற்றுக் கொண்டார்.  விழாவில் பேசிய பலரும் ‘ஒரு தலை ராகம்’ படம் பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

RAM_2794

நடிகரும், இயக்குநருமான சங்கர் பேசும்போது “நான் ‘ஒரு தலை ராகம்’ படத்தில் அறிமுகமாகி 34 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னமும் நான் ‘ஒரு தலை ராகம்’ சங்கர்தான். அந்தப் படத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அது என்னைச் சினிமாவுக்கு நாயகனாக அறிமுகம் செய்த படம். அந்தப் பெயரை வைத்துக் கொண்டுதான் இத்தனை காலம் திரையுலகில் இருக்கிறேன். நான் அன்று  படத்தில் ரூபாவிடம் பேசியிருந்தால், அந்தப் படமே இல்லை. இன்று ஹைதராபாத்திலிருந்து இதற்காகவே ரூபா வந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி..” என்றார்.

IMG_1234

ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் நடிகருமான ராஜசேகர் பேசும்போது.. “உன்னை ராஜேந்திரன் என்று அழைக்கலாமா?” என்று டி.ராஜேந்தரிடம் கேட்டார். டி.ஆர். சிரித்தபடியே அதை ஆமோதித்தார். “இன்று எங்களை இணைத்து வைத்த சங்கருக்கு நன்றி.  ‘ஒரு தலை ராகம்’ படம் ஒரு சரித்திரம். அதற்கு முன்னும்  வரவில்லை. இதற்குப் பின்னும் இனியும் வர முடியாது. அதன் வித்து ராஜேந்தர்தான். நான் சந்தித்த ஜீனியஸ்களில் ராஜேந்தர் ஒருவர். ‘ஒரு தலை ராகம்’ படத்திற்காக 70 பாடல்கள் போட்டுக் காட்டினார். ஆனால் படத்தில் 7 பாடல்கள்தான் வரும்.  படத்தில் கடைசிவரையிலும் ஹீரோ ரூபா பேசவில்லை. கண்ணாலேயே நடித்திருப்பார். தியாகு என் தம்பி போன்றவர். தும்பு கைலாஷ் கேரக்டரின் பாதிப்பு  அவரது ஜோல்னா பை, கண்ணாடி பாதிப்பு அப்போது பலருக்கும் இருந்தது!” என்றார்.

நடிகர் தியாகு பேச்சின் துவக்கத்திலேயே ”எனக்கு அழுகையாக வருகிறது” என்றவர் தொடர முடியாமல் திணறி நிறுத்தினார். ”நண்பா ராஜா” என்று  ராஜேந்தரை அழைத்துப் பார்த்தார். டி,ஆர். திரும்பாமல் இருக்க.. ”இங்கே பாரு உன்னைத்தான்..” என்றார் உரிமையுடன். தொடர்ந்து பேசியவர் ”இவன் ராஜா, எங்கள் பக்கத்து வீட்டுக்காரன்.  நாங்கள் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தோம்.  பள்ளியில் நாலாம் வகுப்பு படித்தபோதே போர்வையை கட்டி நாடகம் போட்டோம். ‘ஒரு தலை ராகம்’படத்தை மறக்க முடியாது. அதை வைத்துதான் 34 ஆண்டுகளாக  என் சினிமா வண்டி ஓடுகிறது.  அப்போது சினிமாவுக்கு போகக் கூடாது என்று வீட்டில் மிரட்டினார்கள். துணிந்து சினிமாவுக்கு வந்தேன். ஆனால் சினிமா என்னைக் கை விடவில்லை.” என்றார்..

தும்பு கைலாஷ் பேசும்போது. ”ஒரு தலை ராகம்’ படத்திற்கு பின்பு 90 படங்கள் நடித்துவிட்டேன். இன்று எங்களை ஒன்றாக  இணைத்து வைத்த சங்கருக்கு நன்றி. இப்போது என்னால் பேசமுடியவில்லை.  கொஞ்ச காலம் முன் எனக்கு முதல் ஹார்ட் அட்டாக் வந்தது. பிழைத்து விட்டேன். இன்றைக்கு 2-வது ஹார்ட் அட்டாக்  வந்தது போல இருக்கிறது. உறைந்து போய் நிற்கிறேன். பேச முடியவில்லை. என் வாழ்நாளில் இத்தனை வீடியோ கேமிராக்கள்.. இத்தனை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நிற்பது இதுவே முதல் முறை.. ” என்று ஆச்சரியப்பட்டார்.

DCIM (44)

ரூபா பேசும் போது “‘இப்போது என்ன பேசுவது என்றே புரியவில்லை. நெகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று நடந்தது போல இருக்கிறது. ‘ஒரு தலை ராகம்’ படத்தில் நடித்தது. காலேஜ் பிக்னிக் போல போய் வந்தோம். படத்துல கடைசிவரைக்கும் சங்கர்கிட்ட என்னை பேசவே விடலை.. இப்படியும் ஒரு சினிமாவான்னு நான் ரொம்ப ஆச்சரியத்தோட பார்த்துக்கிட்டிருந்தேன். ஒவ்வொரு ஷாட் எடுக்கும் போதும் ராஜேந்தர் மியூசிக் போட்டுக் கொண்டே நடக்க வைப்பார். நடிக்க வைப்பார். படத்தில்  அருமையான பாடல்கள். ஆனால்  ஒரு குறை.. எனக்கு பாட ஒரு பாட்டுகூட இல்லை. எல்லாமே சங்கர் பாடினதுதான்..! ‘மணல் நகரம்’ மீண்டும் நம்மை இணைத்துள்ளது. இதன் வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம். அதற்காகவாவது இந்தப்படம் ஓட வேண்டும்.”என்றார்.

DCIM (38)

டி.ராஜேந்தர் பேச ஆரம்பித்ததுமே அரங்கு கரவொலியால் அதிர்ந்தது. தன் ‘ஒரு தலை ராகம்’ படக் குழுவினரை மகிழ்ச்சியுடன் வரவேற்றவர் பேச ஆரம்பித்தார். ”நான் கடந்த 2 நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளில் பரபரப்பாக பேசினேன். புயல் வீசியது என்றார்கள். இங்கு. புயலாக வரவில்லை தென்றலாக வீசப் போகிறேன். நான் என்றும் பழையதை மறக்க மாட்டேன்.

நான் ‘ஒரு தலை ராகம்’ எடுத்த மாயவரம் ஏ.வி.சி. கல்லூரியை பார்த்தாலே  இன்றும் தரையைத் தொட்டு கும்பிடுவேன். 34 ஆண்டுகளாக இதுவரை அங்குபோனது இல்லை. அங்கு இந்த ஆண்டு போகவுள்ளேன்.  வரும் 28-ம் தேதி ஒரு கலை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். நிச்சயம் செல்வேன்..

இந்தப் படத்தில் ரூபா மேடத்தை கடைசிவரைக்கும் பேசவே விடலன்னு சொன்னாங்க. அவங்க பேசியிருந்தா படம் அவுட்டாகியிருக்கும். ‘ஒரு தலை ராகம்’ படத்துக்கு முதல்ல வைச்சிருந்த பேரு என்ன தெரியுமா..? ‘தவித்து நிற்கும் மேகங்கள்’.  காத்துக்கு ஏன் காத்துன்னு பேரு வந்திச்சு தெரியுமா..? அது மேகத்தை காதலிக்குமாம். ஆனால் அந்த மேகத்தை தொடாமலே தள்ளி நிக்குமாம். அப்படி காத்து, காத்து நிக்கறதாலதான் அதுக்கு காத்துன்னு பேரு. தொடாமலேயே, பேசாமலேயே காதலை சொல்லாமலேயே காத்திருக்கு காத்து.. மேகம் கண்டுக்கலை.. அது பாட்டுக்கு தனியாத்தான் இருக்கு.. மேகக் கூட்டங்கள் திரளுது.. நம்மை கவனிக்கும்னு காத்து நினைக்குது. ஆனா மேகம் திரும்பலை.. மேகக் கூட்டங்கள் கலையுது.. அப்பவும் காத்து பக்கமே திரும்பலை.. இனியும் பொறுக்காமல் காத்தே மேகத்து மேல போய் மோதுது. அப்பத்தான் அது மழையா விழுகுது.. அப்படிதான் படத்துல ரூபாங்கிற மேகத்துக்காக ராஜாங்கிற காத்து காத்து கிடந்துச்சு.

பி.ஏ. படிச்சேன்.. எம்.ஏ. படிச்சேன்.. கோல்டு மெடலிஸ்ட்.. பி.ஹெச்டி முடிச்சேன்.. எம்.பில். முடிச்சேன்.. நான் படிச்ச இந்தப் படிப்பெல்லாம் எனக்கு சோறு போடலை. ஆனா நான் போட்ட தாளம்தான் எனக்கு சோறு போட்டுச்சு.. வாங்கின கோல்டு மெடலை வித்துத்தான் என் தங்கச்சி கல்யாணத்தை நடத்தி வைச்சேன்.. அதுக்குத்தான் அந்த மெடல் பயன்பட்டுச்சு..” என்றார்.

இந்த நேரத்தில் அரங்கத்தில் கை தட்டல் தூள் பறக்க.. “பாருங்க… கஷ்டத்துக்காக நான் வாங்கிய தங்க மெடலை வித்தேன்னு சொல்றேன். இவ்ளோ பேரும் சந்தோஷமா கை தட்டுறீங்க. ரசனை அப்படி மாறிப் போச்சு. அக்கா, தங்கச்சி, அம்மா சென்ட்டிமென்ட்டுன்னு படம் எடுத்தா ஒரே ஷோவோட ஊத்தி மூடிருவாங்க போலிருக்கு. இனிமே ஜாலியா எதையாவது எடுத்தால்தான் ஓடும் போலிருக்கு.

ரூபா சொன்னாங்க.. நடக்கச் சொன்னால்கூட மியூஸிக்கோடதான் சொல்வாரு.. ஆமா.. அப்படிச் சொன்னால்தான் நடிப்பு வரும்.. ச்சும்மா அப்படி வாம்மா.. இப்படி வாம்மா சொல்றதுக்கு டைரக்டர் எதுக்கு..? எப்படி நடிப்பு வரும்.. மியூஸிக்கை போடு.. ஆர்ட்டிஸ்ட்கிட்ட நடிப்பு தானா வரும்..!

இங்க தியாகு சொன்னான்.. என் பக்கத்து வீடுன்னு.. ஸ்கூல்ல படிக்கும்போதே நாடகமெல்லாம் போட்டோம்ன்னு.. இப்பவும் என் ஊர்க்காரங்களுக்கு நான் ராஜாதான்.. சின்ன வயசுல எந்த டீக்கடைல டீ குடிச்சேனோ அதே கடைலதான் இப்பவும் ஊருக்கு போனா டீ குடிப்பேன்.. எல்லாருக்கும் என்னைத் தெரியும்..

அன்று ‘ராகம் தேடும் பல்லவி’யில் சங்கரை நான் ஒரு இயக்குநராக காண்பித்தேன். இன்று அது பலித்து விட்டது. கடைசிவரையிலும் சங்கர் ரூபாவை தொடாமலேயே நடித்திருப்பார். கிளைமாக்ஸில்தான் ரூபா சங்கரின் மடியில் விழுந்து இறந்து போவார்.. இது கேரக்டர் ஸ்கெட்ச்.. படத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கேரக்டர் ஸ்கெட்ச்.. நான்தான் எழுதினேன்..

ரவீந்தர் கேரக்டர்ல முதல்ல என்னைத்தான் நடிக்கச் சொன்னார் தயாரிப்பாளர் இப்ராஹிம். நான் மாட்டேன்னுட்டேன்.. சிகரெட் பிடிக்க மாட்டேன். அது எனக்குப் பிடிக்காது.. நிஜத்துலேயும் என்ன..? சினிமாவுலேயும் என்ன.. நான் செய்ய மாட்டேன்னு சொன்னேன்.. ‘அந்த கேரக்டருக்காக செய்யுங்க’ன்னாரு தயாரிப்பாளரு.. ‘அப்போ அந்த கேரக்டரே வேணாம்’னு சொல்லிட்டேன்.. என் கொள்கைக்காக முதல் முதல்லா நடிக்க வந்த வாய்ப்பையே தூக்கியெறிஞ்சவன் இந்த டி.ராஜேந்தர்..

‘ஒரு தலை ராகம்’ படத்துல தொடாமலேயே காதலை காட்டினேன்..!  இப்போ எல்லாமே மாறி விட்டது. கேட்டால் ட்ரண்ட்டுங்கிறான்.  அன்று காதல் நாகரிகமாக இருந்தது. இன்று எல்லாம் மாறிருச்சு. இன்னைக்கு ‘ஒரு தலை ராகம்’ படத்தை எடுத்தா இப்படி எடுக்க முடியுமா? அவ பேச மாட்டாளான்னு வருஷக்கணக்குல காத்திருந்தான். லவ்வை சொல்லவே முடியாம தவிச்சுகிட்டு இருந்தான். ஆனால் இன்னைக்கு லவ் வந்ததும் அதை எஸ்.எம்.எஸ் ல தட்டி விட்டுர்றான். வாட்ஸ் அப்புலயே சொல்லிடுறான்.. இமெயில்ல சொல்றான்..  நூன் ஷோவில் பிக் அப்.. மேட்னியில் பேக் அப்.. நைட் ஷோவில் டச்சப் என்று மாறிவிட்டது. அன்று கதைக்காகப் படம் எடுத்தார்கள்.. இன்று சதைக்காகப் படம் எடுக்கிறார்கள். அன்று குத்துப் பாட்டு  வைத்தார்கள். இன்று வெத்துப் பாட்டு வைக்கிறார்கள். இன்று புரிகிற மாதிரி பாட்டு இருக்கக் கூடாது. கேட்டால் இதுதான் இப்போதைய ட்ரண்ட் என்கிறான்.

நான் 108 குரலில் பேசுவேன்.. இன்றுவரை ஃபீல்டில் இருக்கிறேன். என்னையே கிண்டல் செய்கிறான்.  பல பேர் உன்னைக் கிண்டல் செய்தால் கவலைப்படாதே. உன்னிடம் திறமை இருக்குன்னு அர்த்தம்.. உன் மேல் பொறாமை இருக்கிறதாலதான் கிண்டல் பண்றான். உன்னை யாரும் சட்டை செய்யவில்லை என்றால் நீ சடை என்று அர்த்தம்.

இன்று தமிழ்ச் சினிமாவில் அம்மா, ஆத்தா, தங்கை செண்டிமெண்ட்டை மதிப்பதில்லை .அப்படி வைத்தால் சீரியல் என்கிறான். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் .இன்றும் அம்மா, ஆத்தா, தங்கை செண்டிமெண்ட்டை மதிக்கிறான்.  எனக்கு மலையாளத்தில் படமெடுக்க ஆசை. அங்குதான் நல்ல கலாச்சாரம் இருக்கிறது. அங்குதான் குடும்பக் கதை ‘திரிஷ்யம்’ ஓடுகிறது. இப்போது பெங்களூர் டேய்ஸ் ஓடுகிறது.. எப்படி ஓடுது.. அங்கே மட்டும் மக்கள் எப்படி தியேட்டருக்கு ஓடி வந்து படம் பார்க்கிறார்கள்.

அங்கே திருட்டு விசிடி பிரச்சனையில்லை. ஆந்திராவில் இல்லை. கர்நாடகாவில் இல்லை.. எங்கே புதிய தெலுங்கு படங்களின் சிடியை எடுத்துக் காட்டுங்கள் பார்ப்போம். ஆனால் தமிழ்நாட்டில் தியேட்டருக்கு வந்து பார்ப்பவர்களைவிடவும் திருட்டு விசிடியில் படம் பார்ப்பவர்கள்தான் அதிகம். அதுக்கு காரணம் தியேட்டர் டிக்கெட் விலை.. அதை மொதல்ல குறைக்கணும்.. குறைங்க.. அப்புறமா திருட்டு விசிடி விக்கிறவனை குத்தம் சொல்லலாம்..!” என்று தனது வழக்கமான மேடைப் பேச்சுக்கு வந்துதான் தனது நீண்ட உரையை நிறைவு செய்தார் டி.ராஜேந்தர்..

டி.ஆர்., படத்தில் இடம் பெற்ற பாடல்களை பற்றியும் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற குறையும் திரண்டு வந்திருந்த ‘ஒரு தலை ராகம்’ படத்தின் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது..!

Our Score