‘தலைவன்’, ‘என்னமோ ஏதோ’, ‘கரை ஓரம்’, ’நாரதன்’, ‘7 நாட்கள்’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் நடிகை நிகிஷா பட்டேலுக்கு, இந்த வருடம் யோகமான வருடமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.
நிகிஷா பட்டேல் நடிப்பில் உருவாகியிருக்கும் 6 திரைப்படங்கள், இந்த 2019-ம் வருடத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவருடைய மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது.
இது பற்றிப் பேசிய நடிகை நிகிஷா பட்டேல், “நான் ‘பிக்பாஸ்’ புகழ் ஆரவ்வுடன் இணைந்து நடித்த ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரியளவில் இருக்கிறது. இப்படத்தை இயக்குநர் சரண் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் பாடல்கள் மிக அற்புதமாய் வந்திருக்கிறது. இப்படத்தின் பாடல்களின் first look தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தைத் தவிர இயக்குநர் எழில் சார் இயக்கியுள்ள ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்திலும், இயக்குநர் கஸ்தூரி ராஜா சார் இயக்கத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்ற ‘பாண்டி முனி’ படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.
மேலும் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ஒரு பெயரிடப்படாத படத்திலும், நடிகர் நந்தாவுக்கு ஜோடியாக, மற்றொரு படத்திலும் நடித்து வருகிறேன்.
ஆக மொத்தம், இந்த வருடம் நான் நடித்திருக்கும் ஆறு படங்கள் வெளியாகும் சூழல் உள்ளது. இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிறப்பான கதாபாத்திரத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதே தனது லட்சியம்…” என்கிறார் நிகிஷா பட்டேல்.