‘தேவர் மகன்’ படத்தில் நாசரின் மகளாக குழந்தை நட்சத்திரமாக தமிழ்த் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை நீலிமா.
அதை தொடர்ந்து ‘நான் மகான் அல்ல’, ‘முரண்’, ‘திமிரு’, ‘சந்தோஷ் சுப்ரமண்யம்’, ‘மொழி’ ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சத்ரு’, ‘மன்னர் வகையறா’ உட்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகை நீலிமா.
அத்துடன் ‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையனை பூக்கள்’ உட்பட 80-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள அனுபவம் கொண்டவர் நடிகை நீலிமா.
தனது 20 வருட கலைப் பயணத்தின் தொடர்ச்சியாகவும், தனது அடுத்த கட்ட முயற்சியாகவும் தற்போது ‘இசை பிக்சர்ஸ்’ என்ற தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் நீலிமா.
இந்த நிறுவனம் முதன்முதலாக ZEE தமிழ் தொலைக்காட்சிக்காக தயாரிக்கும் புதிய நெடுந்தொடர் ‘நிறம் மாறாத பூக்கள்.’
இத்தொடரில் முரளி, நிஷ்மா, அஸ்மிதா மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கெளதமி, ரவி, டேவிட் ராஜ், தாரிஷ், நேகா, ஸ்ரீநிஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை – விசு, படத் தொகுப்பு – மகேஷ், ஒளிப்பதிவு – அர்ஜுனன் கார்த்திக், இயக்கம் – இனியன் தினேஷ், தயாரிப்பு – இசைவாணன், நீலிமா இசை.
வரும் திங்கள் முதல் வெள்ளிவரை பிற்பகல் 2 மணிக்கு ZEE தமிழ் தொலைக்காட்சியில் இத்தொடர் ஒளிபரப்பாகிறது.
மும்முனை காதல் கதையாக நிறம் மாறாத பூக்கள் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு நாகர்கோவில், முட்டம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது.
சீரியல் தயாரிப்பாளனது பற்றி நடிகை நீலிமா பேசுகையில், “எனது 20 வருட கனவு இது. நானும் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவு இன்று நிஜமாகி இருக்கிறது. சின்னத்திரையில் முதன்முறையாக தயாரிப்பாளராக கால் பதித்திருக்கிற நானும் என் கணவரும், பெரிய திரையிலும் தயாரிப்பாளராக கால் பதிக்க இருக்கிறோம்..” என்றார்.









