நடிகை நமீதா ஆரம்பிக்கும் புதிய OTT தளம் ‘நமீதா தியேட்டர்ஸ்’..!

நடிகை நமீதா ஆரம்பிக்கும் புதிய OTT தளம் ‘நமீதா தியேட்டர்ஸ்’..!

கடந்த சில வருடங்களாக கணக்கற்ற வகையில் OTT தளங்கள் துவங்கப்பட்டு வருகின்றன. இவை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரந்து விரிந்து ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. எண்ணற்ற OTT தளங்களில் வெகு சில தளங்கள் மட்டுமே புதுமையான  தரமான கதைகளை ஒளிபரப்பும்  தளங்களாக இருந்து வருகின்றன.

தரமான OTT தளங்களின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது நமீதா தியேட்டர்ஸ்’ தளம்.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தின் முதன்மை தூதுவராக (Brand Partner) நடிகை நமீதாவும், நிர்வாக இயக்குநராக  ரவி வர்மாவும் பொறுப்பேற்றுள்ளனர்.

இத்தளம் குறித்து நடிகை நமீதா பேசும்போது, “தமிழ்த் திரையுலகமும், தமிழகத்து மக்களும்  கடந்த வருடங்களில் எனக்கு மிகுந்த பிரபலத்தையும், பெரும் அன்பையும் அளித்து வந்துள்ளார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அதைத் திருப்பி அளிக்க நினைத்தேன்.

பலவிதமான ஐடியாக்களை நினைத்து வந்தபோதுதான் ரவி வர்மா அவர்களை சந்தித்தேன். அவர் திரைப்பட துறையில் தொழில் நுட்ப டிப்ளமோ படிப்பு முடித்து,  பலவித கார்ப்பரேட் வணிகங்களை செய்து வந்துள்ளார்.

அவர்தான் இந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் கதைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு OTT தளத்தை ஆரம்பிக்கும் ஐடியாவை தந்தார். புதிதாக திரைத்துறைக்கு வரும் இளம் திறமைகளுக்கு தேவையான உதவியை அளிக்கும் எண்ணம் எப்போதுமே என்னிடம் இருந்து வந்தது. இதனால் இத்திட்டத்தைக் கேட்டவுடனேயே இதற்கு நான் ஒப்புக் கொண்டேன்.

புதிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இது ஒரு நல் வாய்ப்பாக அமையும். மேலும் சிறு பட தயாரிப்பாளர்களும்  இத்தளம் மூலம் தங்கள் திரைப்படங்களை திரையிடலாம்.

நாங்கள் இத்தளத்தை துவங்க ஆரம்பித்த கணமே, நாங்கள் நினைத்தே பார்த்திராத அளவு, இத்தளத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.

முதல் பகுதி கதைகள் திரைப்படங்களை  நமீதா தியேட்டர்ஸ் தளத்தில் வெளியிட  அடுத்த மாதத்தில்  ஒரு நல்ல நாளை எதிர்பார்த்துள்ளோம்…” என்றார்.

 
Our Score