இதற்கு முன்பாக பல திரைப்படங்களில் காதநாயகிக்கு துணையாக வரும் வேடங்களில் நடித்திருந்தாலும் தனக்குரிய வேடத்தில் சிறப்பாக நடித்து, ரசிகர்களிடையே ஓர் இடத்தை பிடித்திருப்பவர் நடிகை மிஷா கோஷல்.
இவர் தற்போது ‘உன்னோடு கா’ படத்தில் கதாநாயகி அந்தஸ்துக்கு உயர்ந்து இருக்கிறார். ‘நான் மகான் அல்ல’, ‘7-ம் அறிவு’, ‘முகமூடி’ மற்றும் ‘ராஜா ராணி’ போன்ற படங்களில் துணை நடிகையாக தோன்றி, தனது கடின உழைப்பாலும், தத்ரூபமான நடிப்பாலும் மிஷா கதாநாயகியாக உருவெடுத்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்தப் படத்தில் ‘நெடுஞ்சாலை’ புகழ் ஆரி, பால சரவணன், மாயா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தில் பிரபு மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குநர் R.K. இயக்கி, C சத்யா இசையமைக்கும் இந்த படத்தை தமிழ் சினிமா உலகின் மூத்த தயாரிப்பாளரான அபிராமி ராமநாதன் தனது அபிராமி மெகாமால் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளனர்.
இந்தப் பட அனுபவம் பற்றிப் பேசிய நடிகை மிஷா கோஷல், “தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரான அபிராமி ராமநாதனின் தயாரிப்பில் நடிப்பது நான் செய்த பாக்கியம். இயக்குநர் ஆர்.கே. புதியவராக இருந்தாலும் ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனர் போலவே பணியாற்றுகிறார். குறுகியக் காலத்தில் திட்டமிட்டப்படி படப்பிடிப்பை முடித்திருப்பதே இதற்கு சான்று. இசையமைப்பாளர் சத்யா அருமையாக இசை அமைத்து இருக்கிறார்.
வரும் 21-ம் தேதி நடைபெற இருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா என் வாழ்வில் மிக முக்கியமான நாளாக அமையும். படத்தில் நான் நடிக்க மட்டும் செய்யாமல் கூடவே உதவி இயக்குநராகவும் பணியாற்றியது எனக்கு மன திருப்தியை தருகிறது.
என்னோடு இணைந்து நடித்த ஆரி, மாயா மற்றும் பால சரவணன் ஆகியோர் எனக்கு சிறந்த நண்பர்களாக திகழ்ந்ததோடு மட்டுமில்லாமல் என்னை மேன்மேலும் வளர்த்து கொள்ள உதவினர். பால சரவணின் காமெடிசென்ஸிற்கு ஈடு, இணை எதுவும் இருக்க முடியாது, அவருடைய டைமிங் காமெடியால் நான் சில காட்சிகளில் வாய் விட்டு சிரித்தது எனக்குத்தான் தெரியும்..” என்கிறார் அந்த சிரிப்பு மாறாமல்..!
‘உன்னோடு கா’ திரைப்படம் நிச்சயமாக மிஷாவின் பாதையில் ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.









