லென்ஸ் – சினிமா விமர்சனம்

லென்ஸ் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஆனந்த்சாமி, ஜெயப்பிரகாஷ், அஸ்வதி லால், மிஷா கோஷல், ராஜா கிருஷ்ணன், ஆர்.கே.ராதாகிருஷ்ணன், உதயகுமார், அம்பேத், பரமேஷ்வரன், சஞ்சீவி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ‘சுப்பிரமணியபுரம்’ புகழ் எஸ்.ஆர்.கதிர், வண்ணக் கலவை – ஜி.பாலாஜி, படத் தொகுப்பு – ஜெய்னுல் அப்தீன், காஜின், ஜி.பி.வெங்கடேஷ், கலை இயக்கம் – வி.ஆர்.கே.ரமேஷ், ஆடை வடிவமைப்பு – ஸ்ருதி, ஒலி வடிவமைப்பு – பிரதாப், ச்ச்சின் சுதாகரன், ஹரிஹரன், ஒலிக்கலவை – ஆனந்த், பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பு – மினி ஸ்டூடியோ, தயாரிப்பு மேற்பார்வை – சிந்து ஜெயப்பிரகாஷ், விநியோகம் – கிராஸ் ரூட் பிலிம்ஸ், எழுத்து – இயக்கம் – ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

ஆன்லைன் குற்றங்கள் பற்றிய அழுத்தமான த்ரில்லராக உருவாகியிருக்கிறது இந்த ‘லென்ஸ்’ திரைப்படம்.

இந்தப் படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே ஸ்பெயின், மும்பை, சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளைக் குவித்துள்ளது. 

சென்ற ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ‘பயாஸ்கோப் க்ளோபல்’ திரைப்பட விழாவில் இந்தப் படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான விருதினைப் பெற்றார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். 

சென்ற ஆண்டு மும்பையில் நடந்த 7-வது ஜாக்ரன் திரைப்பட விழாவில் இந்த ‘லென்ஸ்’ திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.  

சென்ற ஆண்டு சென்னையில் நடந்த 13-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் இந்தப் படம் திரையிடப்பட்டது.

எங்கு சென்றாலும் கையில் வைத்திருக்கும் தொலைபேசியாக வளரத் தொடங்கிய செல்போனின் அதி நவீன தொழில் நுட்பம், இப்போது ஒரு சினிமாவையே செல்போனில் படமாக்கலாம் என்கிற அளவுக்கு வந்து நிற்கிறது.

இப்போதெல்லாம் தினம்தோறும் கத்திக் குத்து, படுகொலைகளுக்கு ஈடான வளர்ச்சியை இணையம் தொடர்பான குற்றச்சாட்டுகளும் பெற்று வருகின்றன.

செல்போனில் படம் பிடித்து மிரட்டல்.. பெண்கள், மற்றும் தம்பதியினரின் குளியல் காட்சி வெளியானது.. படுக்கையறை காட்சி பட்டவர்த்தமானது என்றெல்லாம் செய்திகள் சுடச் சுட பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன.

இதனால் பாதிப்புக்குள்ளான பெண்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பலர் வீட்டைவிட்டு வெளியில் வர முடியாத அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். அப்படியொரு நிலைமைக்கு ஆளான பெண்ணின் கதையைத்தான் இந்த ‘லென்ஸ்’ படம் சொல்கிறது.

அரவிந்த் என்னும் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். மனைவி, மகள் இருக்கிறார்கள். இருந்தும், இணையம் வழியாக சாட்டிங் செய்வதுதான் இவரது அன்றாடப் பொழுதுபோக்கு. அதிலும் முகம் காட்டாமல் அடுத்தவரின் அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்ளும் ஒருவித செக்ஸுவல் சாட்டிங்கில் அலாதி விருப்பம் கொண்டவர் அரவிந்த்.

இப்படித்தான் அவர் ‘ஏஞ்சல்’ என்றொரு இன்னொரு இணையப் பயனாளியுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். ஒரு நாள் வேறொரு புதிய நட்பாளர் கிடைக்கப் போக அவரும் பெண்தானோ என்று நினைத்து சாட்டிங்கிற்குள் செல்கிறார் அரவிந்த். ஆனால் அவரோ ஒரு ஆண்.

‘யோகன்’ என்னும் அந்த நபர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், அதனை அரவிந்த் நேரடியாக இணையம் வாயிலாக பார்க்க வேண்டும் என்றும் கேட்கிறார். முதலில் மறுக்கும் அரவிந்த் அவருடன் பேசப் பேச.. யோகன், அரவிந்தை மிரட்டுகிறார்.

அரவிந்த், ஏஞ்சல் என்ற பெண்ணுடன் பேசிய பேச்சின் வீடியோ பதிவை யோகன் தன் கை வசம் வைத்திருக்கிறார். இப்போது அரவிந்த் தன் பேச்சைக் கேட்காமல் போனால் இதனை யுடியூபில் உடனடியாக வெளியிட்டுவிடுவதாக மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் அரவிந்தும் இதற்கு உடன்பட கதைக் களன் மாறுகிறது.

அரவிந்தின் மனைவியை கடத்தி வந்திருக்கும் யோகன் தன் வீட்டு படுக்கையறையில் அவரை மயக்கத்தில் ஆழ்த்தி படுக்க வைத்திருக்கிறார். அதிர்ச்சியாகும் அரவிந்த் ஏன்.. எதற்கு.. என்றெல்லாம் கேள்விகள் கேட்க.. யோகன் ஒரு புதுக் கதையைச் சொல்கிறார்.

யோகனும், அவருடைய காதல் மனைவியும், மூணாறில் காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தபோது அவரும், அவருடைய மனைவியும் இருந்த செக்ஸூவல் வீடியோக்களை யாரோ லீக் செய்ததால் தன்னுடைய வாழ்க்கையே அழிந்துபோய்விட்டதாகவும், இதற்கு அரவிந்துதான் காரணம் என்றும் குற்றம் சொல்கிறார் யோகன்.

இதற்கிடையில் அரவிந்த் தனது நண்பனான ராஜிடம் யோகனிடம் தானும், தனது மனைவியும் சிக்கியிருக்கும் இந்தச் சூழலைப் பற்றிச் சொல்லி போலீஸுக்கு தகவல் கொடுத்து காப்பாற்றும்படி கேட்கிறார். இப்போது போலீஸ் ஒரு பக்கம் யோகனின் இருப்பிடம் தேடி அலைகிறது.

இன்னொரு பக்கம் இணையம் முன்பாக அமர்ந்திருந்து யோகனின் அத்தனை டார்ச்சர்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறார் அரவிந்த். முடிவில் என்ன ஆனது என்பதுதான் படமே..!

மூன்று இடங்கள்தான் படத்தின் கதைக் களன்கள்.. மூன்று இடங்களையுமே மாறி, மாறி காட்டிக் கொண்டிருந்தாலும் கொஞ்சம்கூட சலிப்போ, அயர்ச்சியோ வராத அளவுக்கு மிகச் சிறப்பான விதத்தில் படத்தின் திரைக்கதையை அமைத்து இயக்கியிருக்கிறார் அரவிந்தாக நடித்திருக்கும் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

அவரது கேரக்டரில் நடிக்க கோடம்பாக்கத்தின் இப்போதைய எந்த நடிகரும் முன் வந்திருக்க மாட்டார்கள் என்பது உறுதிதான். அதனால் தானே நடித்துவிட்டார் போலும். ஆர்வம், திகைப்பு, கோபம், அதிர்ச்சி, அயர்ச்சி, ஆத்திரம் என்று பலவித குணாதிசயங்களில் படம் முழுவதிலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தொய்வு ஏற்படாத அளவுக்கு நடித்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

இடைவேளைக்கு பின்பு பாவம்யா மனுஷன்.. போனால் போகுது விட்ருங்கப்பா என்று பார்வையாளர்களே வேண்டிக் கொள்ளும் அளவுக்கு தன் மீதான ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஆனால் இதே மாதிரியான அனுதாபத்தை படத்தின் இறுதியில் தன் மீது வாங்கிக் கொண்டு இறந்திருக்கிறார் யோகனாக நடித்திருக்கும் ஆனந்த்சாமி. சினிமா முகமே இல்லாமல் வேற்று ஆள் போலவே இருப்பதால் எளிதில் கவர்ந்திழுத்திருக்கிறார்.

இவருடைய மூணாறு காதல் வாழ்க்கையை ஒரு கவிதை போல படமாக்கியிருக்கிறார்கள். அத்தனை அழகு. வாய் பேச முடியாத அவருடைய மனைவியாக நடித்திருக்கும் அஷ்வதி லாலுக்கும் ஒரு பாராட்டு..!

எதற்கும் எழுதியே காட்டும் அஷ்வதி, தனது கடைசி வார்த்தைகளையும் கடிதம் மூலமாகவே காட்டியிருப்பது சோகத்திலும் சோகம். நம் வீட்டுப் பெண்ணுக்கு இப்படியொரு சூழல் நடந்திருந்தால் நமக்கென்ன கோபம் வருமோ.. அதையேதான் இவருடைய கடைசிக் காட்சியை பார்த்தபோதும் நமக்கு வருகிறது. வெல்டன் அஷ்வதி.

இவருடைய தந்தையாக நடித்தவரும் மிக வித்தியாசமான முகம். ஒரு சில காட்சிகளே என்றாலும் மனதில் நிற்கிறார். அரவிந்தின் மனைவியாக நடித்திருக்கும் மிஷா கோஷலுக்கு அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும் தன் பங்கை நிறைவாகவே செய்திருக்கிறார்.

படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவுதான். இரண்டு வீடுகள்.. ஒரு வெளிப்புற இடம்.. இது போதாமல் மூணாறு வீடு என்று அனைத்திலுமே கேமிராவின் பங்களிப்பு சூப்பர். கேமிராமேனின் உதவியோடுதான் மூணாறு கதையை அத்தனை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

பின்னணி இசையில் அதிகம் ஆர்ப்பாட்டம் செய்யாமல் சோகத்தை உணரும்விதமாகவும், சோகமான சிச்சுவேஷனில் நாமும் சேர்ந்து பரிதவிக்கும்விதமாகவும் மெல்லிய இசையை கொட்டியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஒளிந்திருந்து காட்சிகளை படமாக்கியது.. அதனை பகிரங்கப்படுத்தியது.. இதனை பார்த்து நம்ம ஊர் மக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை கேவலாக பார்த்தது.. இது தனது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கும்.. நாளை என் குழந்தையை யாரும் அப்படி பார்க்கவே கூடாது என்று அஷ்வதி நினைப்பது.. இதையெல்லாம் திரைக்கதையில் தெள்ளத் தெளிவாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் கிடைத்தாலும் பரவாயில்லை என்று தான் சொல்ல வந்ததை மூடி மறைக்காமல், பூசி மெழுகாமல் அப்படியே பட்டவர்த்தனமாய் உடைத்திருக்கிறார். வீட்டில் மனைவி, மகள் இருந்தாலும் செக்ஸூவல் எண்ட்டெர்டெயின்மெண்ட்டுக்காக வெளியில் அலையும் அரவிந்த் போன்ற கணவர்களையும் இந்தப் படத்தில் குற்றவாளியாக்கியிருக்கிறார் இயக்குநர்.

படம் பார்க்கும் ரசிகர்களில் 75 சதவிதிகம் பேர் நிச்சயமாக இந்த அரவிந்த் போலத்தான் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மாட்டிக் கொள்ளாதவரையிலும் இங்கே அனைவருமே உத்தமர்களே..! மாட்டிக் கொண்டால் என்னாகும் என்பதை இந்தப் படம் பார்த்து புரிந்து கொண்டால் நல்லது.

படத்தின் கடைசி காட்சியில் கதவைத் திறந்தவுடன் தன்னுடைய முகத்தில் விழும் எச்சலையும், தன் மார்பில் விழும் உதையையும் தாங்கிக் கொண்டு எழுந்து நிற்கும் அரவிந்தின் பரிதாபமான நிலைதான், இவர் போன்றவர்களின் கடைசி நிலைமை என்பதை தைரியமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

எந்தவித லாஜிக் எல்லை மீறலும் இருக்கக் கூடாது என்பதற்காக பார்த்து, பார்த்து திரைக்கதையை செதுக்கியிருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்திற்கு சர்வதேச விருதுகள் கிடைத்திருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்குப் பிடித்தமானதுபோலத்தான் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர்.

இந்தப் படம் மேலும் பல விருதுகளைப் பெறவும் வாழ்த்துகிறோம்.

Our Score