தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழி திரைத்துறை உறுப்பினர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கம் 1938-ம் ஆண்டு துவக்கப்பட்டது.
துவக்கக் காலத்தில் அரசுகளிடம் சினிமா துறை பற்றி பேசுவதற்காகவும், பிலிம் ரோல்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கும், தட்டுப்பாடில்லாமல் வாங்குவதற்கும், திரைப்பட விழாக்களுக்கு படங்களை வாங்கி அனுப்புவதற்கும், வெளிநாடுகளில் நமது படங்களை விற்பனை செய்வதற்கும், திரைப்பட விருதுகளுக்கு நடுவர் குழு உறுப்பினர்களை பரிந்துரை செய்யவும் இந்தச் சங்கம்தான் பிரதானமாக செயல்பட்டு வந்தது.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் உறுப்பினராக சேர்ந்தால், அவர் தமிழ் திரைப்படவுலகில் தயாரிப்பாளராகவும் ஆகலாம் என்பது ஒரு கூடுதல் விஷயம்.
காலப்போக்கில் தெலுங்கு, மலையாளம், கன்னட திரைத்துறையினர் அவரவர் மாநிலத்திற்கு சென்று குடியேறி, தங்களுக்கென்று தனித்தனி சங்கங்களை நிறுவத் தொடங்கினார்கள். இப்படி அந்தந்த மாநில நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் என்று ஆரம்பித்தார்கள். இதையொட்டி பிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் எனப்படும் திரைப்பட வர்த்தக சபையையும் தங்களது மாநிலத்தின் பெயரை ஒட்டியே புதிதாக ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்த வரிசையில் ஆந்திராவில் ‘தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை’, கேரளாவில் ‘மலையாள திரைப்பட வர்த்தக சபை’, கர்நாடகாவில் ‘கன்னட திரைப்பட வர்த்தக சபை’ என்று அமைப்புகள் துவக்கப்பட்டு இப்போதுவரையிலும் அவைகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இந்த புதிய வர்த்தக சபையின் மூலமாகவே அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடத்தில் பேசி தங்களுக்குத் தேவையான சலுகையினை பெற்று வருகிறார்கள்.
ஆனால் இவற்றின் தாய் சங்கமான ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை’யை கலைக்காமல் அப்படியே தொடரும்படியாய் விட்டுவிட்டார்கள். தமிழ்நாட்டில் தனியாய் தமிழுக்கென்று தனி சங்கம் அமைக்க வேண்டி கே.பாலசந்தர், பாரதிராஜா போன்றோர் முன் காலத்தில் முயன்றபோதும் பல வெளி மாநில திரைத்துறையினர் இதற்கு பெரிதும் முட்டுக்கட்டையிட்டனர்.
இதற்குக் காரணம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு சென்னையில் இருக்கும் மிகப் பெரிய சொத்துக்கள்தான்.
சென்னையின் மையப் பகுதியான அண்ணா சாலையில் இப்போது இருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கட்டிடம் அந்தச் சங்கத்திற்கே உரிமையானது. இந்தச் சங்கத்தின் இடத்தில்தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் வாடகைக்கு இயங்கி வருகிறது.
தற்போது புதிதாக திரையரங்கள், பிரிவியூ தியேட்டர்களுடன் கூடிய ஷாப்பிங் சென்டரையும் கட்டி வருகிறது பிலிம் சேம்பர்.
சுமாராக 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தச் சொத்துக்களை நான்கு தென்னக மாநில திரைப்படத் துறையினரும் எப்படி தங்களுக்குள் பிரித்துக் கொள்வது என்கிற பிரச்சினையில் ஒரு சுமூகமான தீர்வு இதுவரையில் காணப்படாததால், இங்கேயிருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையை கலைக்கும் முயற்சி நடக்கவே இல்லை.
ஆனால் கே.பாலசந்தர், பாரதிராஜா, தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி., தியேட்டர் அதிபர் ராமானுஜம் முதலிய முக்கிய பிரமுகர்களின் ஆதரவோடு ஒரு முறை தமிழ் திரைப்பட வர்த்தக சபை துவக்கப்பட்டது. ஆனால் ஆரம்பித்த பின்பு அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் அது தொடர்ந்து நடைபெறவில்லை.
இத்தனையாண்டுகள் கழித்து இப்போதுதான் இந்த தமிழ்த் திரைப்பட வர்த்தக சபைக்கு மீண்டும் புத்துயிர்ப்பு கொடுத்துள்ளனர். காரணம், சென்ற மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு நடந்த தேர்தல்தான்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சங்கத்தின் தேர்தலில் நான்கு மாநிலங்களுக்கும் சுழற்சி முறையில் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவி கிடைக்கும். அந்த வகையில் இந்தாண்டு தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் தலைவர் பதவி கிடைக்க வேண்டும்.
4 மொழிகளை சேர்ந்த தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர் சங்கம், ஸ்டுடியோ அதிபர் சங்கம் சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார்கள்.
இந்தத் தேர்தலில் நான்கு அணிகள் போட்டியிட்டன. தேர்தல் நாள் நெருங்கியபோது போட்டியிட்ட நான்கு அணிகளில் மூன்று அணிகள் தேர்தலில் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டி வெளியேறின.
தலைவர் பதவிக்கு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் தலைவரான ரோகிணி பன்னீர்செல்வமும், விநியோகஸ்தர், தயாரிப்பாளருமான எல்.சுரேஷும் போட்டியிட்டார்கள்.
இத்தேர்தலில் எல்.சுரேஷ் 1259 வாக்குகள் பெற்று தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வம் 141 வாக்குகள் மட்டுமே பெற்றார். பொருளாளராக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கே.கிருஷ்ணா ரெட்டி தேர்வானார். செயலாளர் பதவிக்கு மலையாள திரையுலகத்தின் சார்பில் ரவி கொட்டாரக்கராவும் தமிழ்த் திரையுலகத்தின் சார்பில் என்.ராமசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இத்தேர்தலின்போது பதிலி ஓட்டு முறையை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரியான நீதிபதி ஹரி பரந்தாமன் தமிழ்த் திரைப்படத் துறையினரின் கோரிக்கைகளை ஏற்காமல் பதிலி முறை செல்லும் என்று சொன்னதால் போட்டியிட்ட இந்த தேர்தலில் மூன்று அணிகள் தேர்தலை புறக்கணித்தன. இதனால்தான் எல்.சுரேஷ் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
இந்தத் தோல்வி தமிழ்த் திரைப்பட துறையினரை உசுப்பிவிடவே தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த் திரைப்பட வர்த்தக சபையை மீண்டும் தட்டியெழுப்பிவிட்டனர்.
இந்த தமிழ்த் திரைப்பட வர்த்தக சபைக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமாகிய அபிராமி ராமநாதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மற்ற நிர்வாகிகள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படுமாம்.
தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, அன்பு செழியன், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம், விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜ், செயலாளர் ராஜமன்னார், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா மற்றும் முன்னணி தயாரிப்பாளர்கள் அனைவரும் இந்த சங்கத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.
“இந்த அமைப்பு திரையுலகின் நலனை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படும். இதன் நிலைப்பாடு யாருக்கும் எதிரானது அல்ல. அரசுகளிடம் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தமிழ் சினிமா நலனுக்காக பாடுபடும்..” என்று புதிய அமைப்பின் புதிய தலைவரான அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஆக.. திரையுலகத்தில் அடுத்த குஸ்தி போராட்டம் துவங்கிவிட்டது. 500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கப் போவது யார் என்கிற பிரச்சினை கூடிய விரைவில் துவங்கிவிடும்..!