full screen background image

சர்ச்சை நாயகி மீரா மிதுன் திருவனந்தபுரத்தில் கைது..!

சர்ச்சை நாயகி மீரா மிதுன் திருவனந்தபுரத்தில் கைது..!

தொடர்ந்து சர்ச்சைக்கிடமாகவே பேசி வந்த நடிகை மீரா மிதுன் இன்று திருவனந்தபுரத்தில் கைதானார். அவரை தமிழக குற்றப் பிரிவு காவல்துறையினர் கேரள போலீஸாரின் துணையுடன் கைது செய்தனர்.

சில படங்களில் மட்டுமே தலையைக் காட்டியிருக்கும் மீரா மிதுன் அடிப்படையில் ஒரு விளம்பர மாடலாக வலம் வந்தவர். யுடியூபில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் அங்கேயிருக்கும் அனைவரையும் வம்பிழுப்பதை போல பேசி அனைவரையும் பகைத்துக் கொண்டார். சேரன் தம்மிடம் தவறாக நடந்து கொண்டதாகச் சொல்லி அவரையே அழ வைத்தவர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யாவைப் பற்றியும், அவர்களது மனைவிகளான சங்கீதா, ஜோதிகா பற்றியும் மிகவும் தரக் குறைவாக பேசியிருந்தார்.

அதே போல் முன்னணி நடிகைகளான, த்ரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், போன்ற பிரபலங்கள் தன்னுடைய முகத்தை காப்பியடித்து பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் தன்னுடைய உடை வடிவமைப்பை காப்பி செய்து உடைகளை அணிவதாகவும் புகார் செய்திருந்தார்.

சில நேரங்களில் சினிமாவையும் தாண்டி அரசியல் கட்சிகள் குறித்தும் கருத்துக்களை அள்ளி வீசினார். தமிழகத்தில், ஆட்சி சரியில்லை என்று அதிமுக ஆட்சியைக் குறை கூறினார். பிரதமர் மோடியிடம்கூட பல கோரிக்கைகளை முன் வைத்தார்.

கூடவே தன்னிடம் ஆட்சியை கொடுத்தால் இந்தியாவே பாராட்டும்படி ஆட்சி நடத்துவேன் என்று காமெடிகள்கூட செய்திருந்தார்.

அதே போல் தன்னை பற்றி அனைவரும் எப்போது பரபரப்பாக பேச வேண்டும் என்கிற எண்ணத்தில் வாயிக்கு வந்ததையெல்லாம் பேசி சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை மிகவும் அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருந்தார்.

சினிமாவில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள், மற்றும் தொழிலாளர்களை திரைப்படத் துறையில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என்று கோபமாக பேசியிருந்தார் மீரா. அதுவே அவருக்கு வினையாகிவிட்டது.

மீரா மிதுனின் அந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் மீரா மிதுனை வன்மையாக கண்டித்ததோடு அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டுமென புரட்சி பாரதம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு உள்ளிட்டோர் சென்னை காவல் துறையில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் சென்னை சைபர் க்ரைம் போலீசார் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 32/2021 U/s 153,153A(1) (a),505 (1) (b),505 (2) IPC and section 3(1) (r),3(1)(s), (3)(1) (u) of sc &ST Prevention Act 1989-ன் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது குறித்த விசாரணைக்கு ஆஜராகும் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பிய நிலையில், அவர் ஆஜராகவில்லை. போலீஸார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானால் தான் கைது செய்யப்படுவோம் என்பதை யூகித்து அவர் தலைமறைவானார்.

மேலும், “என்னை தாராளமாக என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா..?. ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது”  என்றும் போலீசாருக்கு சவால் விடும்விதமாக மீண்டும் யுடியூபில் பேசினார் மீரா மிதுன்.

இதையடுத்து அவரைக் கைது செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான போலீஸார் அவரை இன்று கேரளாவில், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கைது செய்தனர்.

தான் கைதானபோது மீண்டும் செல்போனில் நேரலையில் பேசிய மீரா மிதுன், தன்னை போலீஸார் டார்ச்சர் செய்வதாகவும், இது தொடர்ந்தால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் அழுது, அரற்றி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

அவர் நாளை சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்று தெரிகிறது.

Our Score