மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸின் பெண் தொழிலதிபர்கள் அமைப்பு மகளிர் தினத்தையொட்டி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நடிகை குட்டி பத்மினி சிறப்பு அழைப்பாளராக்க் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது தன் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான விஷயத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.
“நான் சினிமா நடிகையாக ஜனாதிபதி விருதெல்லாம் வாங்கியிருந்தாலும்கூட டிவிக்குள் நுழைந்து நிகழ்ச்சிகள் தயாரிக்க நிறையவே கஷ்டப்பட்டிருக்கேன். அதற்குப் பின் அந்தத் துறையில் நான் சக்ஸ்ஸ்புல்லான தயாரிப்பாளராகவும் ஆனேன். அப்படி நான் சக்ஸ்ஸ்புல்லாக இருந்த நேரத்தில் ஒரு பிரபல நடிகை என்னிடம் உதவி கேட்டு வந்தார். ‘எனக்கு இப்போது பட வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது. நானும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிக்க விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.
நான் கஷ்டப்பட்டு இந்தத் துறையில் முன்னேறி வந்தவள் என்பதால் சினிமாத் துறையில் இருந்து இன்னொரு பிரபல நடிகை வந்து கேட்டபோது அவர் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்து, இந்த டிவி நிகழ்ச்சி தயாரிப்புத் துறையில் நான் என்னென்ன கற்றுக் கொண்டேனோ.. அதையெல்லாம் அந்த நடிகைக்குச் சொல்லிக் கொடுத்தேன். யார், யாரைப் பார்க்க வேண்டும் என்றும் சொன்னேன். அவரும் அதைக் கேட்டு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். சீரியல்களும் தயாரித்தார்.
இடையில் அவ்வப்போது போன் செய்து ஏதாவது கேட்பார். நானும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். ஒரு முறை போன் செய்து, ‘என் சீரியல் ஒன்றில் எனக்கு ஜோடியாக பிரகாஷ்ராஜ் நடிப்பதாக இருந்த்து. ஆனால் அவர் இப்போது சினிமாவில் பிஸியாகிவிட்டதால் சீரியலுக்கு இழுக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக உங்கள் கணவரை அந்த ரோலில் நடிக்கச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.
என் கணவர் பிரபு நேபாலுக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. அது எனக்கே தெரியும். இருந்தாலும், இது போன்ற சிக்கலான நேரங்களில் ஒரு தயாரிப்பாளருக்கு என்னென்ன கஷ்டங்கள் வரும் என்பதும் எனக்குத் தெரியும் என்பதால் நான் எப்படியாவது அந்தத் திரையுலகத் தோழிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் என் கணவரிடம், ‘நீங்கள் நடித்துத் தர முடியுமா?’ என்று கேட்டேன். ‘ஐயோ.. அதெல்லாம் எனக்கு வராது பத்மினி.. என்னை விட்ரு..’ என்று சொன்னார். ஆனாலும் நான் விடாமல் வற்புறுத்தி அந்தத் தோழியின் நிலைமையை எடுத்துச் சொல்லி ‘நாம் கொஞ்சம் உதவலாமே..?’ என்று கேட்டுக் கொண்டேன். அதற்குப் பின் என் கணவரும் சம்மதித்து அந்தத் தொடரில் அந்த நடிகைக்கு ஜோடியாக நடித்துக் கொடுத்தார். அந்த சீரியலும் நன்றாக போனது.
இடையில் என்ன நடந்ததோ… ஒரு கட்டத்தில் என் கணவர் என்னைத் தேடி வந்தார். “பத்மினி.. நானும் அந்த நடிகையும் ஒருவரையொருவர் விரும்புகிறோம். திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறோம்..” என்று சொன்னார் அவர். அவரின் மனைவி நான்.. நாங்கள் இருவரும் நீண்ட வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து குடும்பம், குழந்தைகள் என்று ஆகி எங்கள் திருமண வாழ்க்கை போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென்று அந்த நடிகையும் நானும் திருமணம் செய்யப் போகிறோம் என்று கணவர் வந்து சொன்னால் எப்படியிருக்கும்..? அப்படியே இடிந்து போய் உட்கார்ந்துவிட்டேன் நான். ஆனால் நான் செய்த ஒரு நல்ல விஷயம்.. இது சம்பந்தமாக என் கணவரிடம் ஒரு வார்த்தைகூட பதில் பேசவில்லை.
என் மெளனம் அவருக்கு என்ன புரிய வைத்ததோ எனக்குத் தெரியாது.. இன்றுவரை அவர் என்னுடன், என் கணவராகவேதான் இருக்கிறார். அதன்பின் அந்த நடிகை பற்றி அவர் என்னிடம் எதுவும் பேசியதே இல்லை..” என்று குட்டி பத்மினி பேசி முடிக்க அரங்கம் அப்படியே நிசப்தமாகிவிட்டது.
நன்றி : குமுதம் சிநேகிதி
ஒன்றும் சொல்வதற்கில்லை..!