தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை சுஜிபாலா, ஒரு இயக்குநர் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
‘சந்திரமுகி’, ‘கோரிப்பாளையம்’, ‘அய்யாவழி’, ‘முத்துக்கு முத்தாக’, ‘கலவரம்’ போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை சுஜிபாலா. இவர் இப்போது ‘உண்மை” ‘விலாசம்’ போன்ற சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘உண்மை’ படத்தில் இவருக்கு ஜோடியாக கதாநாயகனாக நடித்து இயக்கிவரும் பி.ரவிக்குமார் சுஜிபாலாவைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும் பங்களா, கார், தோட்டம் வாங்கிக் கொடுத்திருப்பதாகவும் சமீப காலமாகச் செய்திகள் வெளியாகின.
ஆனால் நடிகை சுஜிபாலா இவை எல்லாவற்றையும் மறுத்து இன்றைக்கு உண்மை நிலையை விளக்கியுள்ளார்.
“எனக்குச் சொந்த ஊர் நாகர்கோவில். நான் வளர்ந்து வரும் நடிகை. ‘உண்மை’ என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அந்தப் படத்தில் நாயகனாக நடித்து இயக்குபவர் ரவிக்குமார். என்னைப் பொறுத்தவரை அந்தப் படம் மற்ற பட வாய்ப்புகளைப் போல ஒரு படம். அவ்வளவுதான்.
ஆனால் அந்தப் பட டைரக்டர் ரவிக்குமார் என்னைக் காதலிப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது நான் நமக்கு காதல்-கல்யாணம் எதுவும் சரிப்பட்டு வராது. நிறைய படங்களில் நடிக்க வேண்டும், வளர வேண்டும், உயர வேண்டும் என்பதே என் நோக்கம் என்று இருந்தேன்.
ஆரம்பத்தில் அவர் சொல்வதை விளையாட்டாக நினைத்தேன். பிறகு ஆர்வக் கோளாறாக நினைத்தேன். ஆனால் அவர் பைத்தியம் போல சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தார். எனக்கு இதில் உடன்பாடோ துளியும் விருப்பமோ இல்லை. ஆனால் அவரோ எங்கள் குடும்பத்தினரிடம் பேசி அடுக்கடுக்காக பொய்களைக் கூறி ஏமாற்றி அவர்களது மனதை மாற்றி விட்டார்.
‘நான் ஒரு அனாதை எனக்கு இவ்வளவு சொத்து இருக்கிறது. உங்கள் மகள் மீது உயிரையே வைத்து இருக்கிறேன். என் காதல் பாசம் அவளுக்குப் புரியவில்லை. நீங்கள் எடுத்துச் சொல்லி சம்மதிக்க வையுங்கள். அவளை உள்ளங்கையில் வைத்து தாங்குவேன்’ என்றெல்லாம் கூறினார்.
ஒரு கட்டத்தில் என் அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினர் அவரது பேச்சு முழுவதும் நம்பிவிட்டார்கள். ‘நீ இவரைக் கல்யாணம் செய்து கொண்டால் உன் எதிர்காலம் நன்றாக இருக்கும்’ என்று பேசும் அளவுக்கு அவர்களை மாற்றி விட்டார். பெற்றோரிடம் என் மீது பாசம் வைத்து இருப்பதைப் போல நடிப்பது.. எனக்கோ அடிக்கடி போன் செய்து தொல்லை தருவது என்று தொடர்ந்து கொண்டே இருந்தார்.
எனக்கு விருப்பமில்லாதபோதும் பெற்றோர்கள் தொடர்ந்து நிர்ப்பந்திக்கவே வேறு வழியில்லாமல் திருமணத்துக்கு சம்மதித்தேன். நிர்ப்பந்தங்கள் சந்தர்ப்பச் சூழ்நிலைகள் எத்தனை பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது என்று இப்போதுதான் எனக்கு புரிகிறது.
எங்களுக்கு நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. ரகசியமாக நடக்கவில்லை. என் உறவினர் பலரையும் அழைத்திருந்தோம். வந்திருந்தார்கள். அவருடைய சொந்தக்காரர்கள் நிறைய பேர் வருவதாகச் சொன்னார். ஆனால் பெரிதாக யாரும் வரவில்லை. வந்த சிலர்கூட சினிமாவில் நடிக்கும் துணை நடிகர்கள். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்.. இது எங்கள் குடும்பத்தினருக்குப் புரிந்தது. அடடா மோசம் போய் விட்டோமே என்று வருந்தினார்கள். சொந்தக்காரர்கள் மத்தியில் அசிங்கமாகி விடுமே என்று பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டனர். கசப்புடன்தான் அந்த நிச்சயதார்த்தம் நடந்தது. இது 2012 ஜூலையில் நடந்தது. ஆனால் அவரோ எங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்றும் எனக்கு 87 லட்சத்தில் பங்களா, சொகுசு கார், 12 ஏக்கர் தோட்டம் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன் என்றும் பத்திரிகைகளில் செய்தி வர வைத்தார். பலரிடமும் இப்போதும் இதையே கூறி வருகிறார்.
நான் சொந்த வருமானத்தில் வாங்கிய 16 லட்சம் மதிப்புள்ள வீடு மட்டுமே எனக்கு சொந்தமானது. அதை அவர் வாங்கிக் கொடுத்ததாகக் கூறுகிறார். நான் 2009-ல் போர்டு ஐகான் கார் வாங்கினேன். என் பெரியப்பா வீட்டு அக்காவின் ஒரு ஏக்கர் அளவுள்ள தோட்டம் ஒன்றை வாங்கியிருக்கிறேன். இன்னமும் பத்திரப் பதிவுகூட நடக்கவில்லை. ஆனால் இதை எல்லாமே அவர் வாங்கிக் கொடுத்தாக பொய் சொல்லிக் கொண்டு திரிகிறார்.
‘உண்மை’ என்கிற பெயரில் படமெடுத்துக் கொண்டு சொல்வதெல்லாம் பொய்யாக இருக்கிறது. இவர் சொல்கிற அளவுக்கு பணம் உள்ளவர் என்றால் ‘உண்மை’ படத்தை எடுத்து முடிக்க வேண்டியதுதானே? எத்தனை நாள் படப்பிடிப்பு என்று அழைத்து ஏமாற்றி இருக்கிறார் தெரியுமா..?
ஒரு கட்டத்தில் அவரது சுயரூபம் வெளியே தெரிந்ததும் இனி சரிப்பட்டு வராது என்று சொல்லி இதை முடிவுக்குக் கொண்டு வர எனது குடும்பத்தினர் நினைத்தார்கள். அவருடன் இனி எந்த சம்பந்தமும் வேண்டாம் என்று சமாதானம் பேசி எழுதி, இரு தரப்பிடமும் சாட்சிகளோடு கையெழுத்து போட்டு நாங்கள் பிரிந்து விட்டோம். நிச்சயதார்த்தம் ஆனாலும் இருவரிடம் உண்டான கசப்புணர்வால் இனியும் சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்வதும் சரி வராது என்று இருவரும் சம்மதித்து பிரிந்தாகி விட்டது. இது 2012-ல் அக்டோபரில் எழுதி முடிவானது.
ஆனால் அவர் அத்துடன் விலகிச் செல்லாமல், ‘எங்களுக்குத் திருமணமாகிவிட்டது. சேர்ந்து வாழ்ந்தோம். சுஜிபாலாவின் பெற்றோர்தான் எங்களைப் பிரிக்க முயற்சி செய்கிறார்கள்..’ என்றெல்லாம் பேட்டி கொடுத்தார். இது தொடர்வதை பார்த்து எனக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழியான ரவிக்குமாருக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகளும் இருக்கிறார்களாம்.
நான் ஒரு நடனப் பள்ளியில் நடனப் பயிற்சியில் இருந்தபோது அங்கு வந்து என்னைத் திட்டி, அடித்தார். நான் பலமுறை கெஞ்சினேன். ஏன்… காலில்கூட விழுந்து என்னை விட்டுவிடுமாறு மன்றாடினேன். ‘உண்மை’ படத்துக்கான காட்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ‘எங்களுக்குத் திருமணமாகிவிட்டது சுஜிபாலா என் மனைவி’ என்று எல்லோரிடமும் கூறி வருகிறார். இப்போதும் எனக்கு அடிக்கடி போன் செய்து அசிங்கமாகப் பேசுகிறார்.
‘உன்னை எங்கும் போக விடமாட்டேன். உன்னைக் கூலிப்படையை வைத்து கொன்றுவிட்டு யாரையாவது ஜெயிலுக்கு அனுப்புவேன். உன் மானத்தை வாங்குவேன்..’ என்று மிரட்டுகிறார். என் குடும்பத்தினர் பற்றியும் தரக்குறைவாகப் பேசி மிரட்டுகிறார். எனக்குத் தெரிந்தவர்கள், நண்பர்களிடம்கூட என்னைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார். என் போன் கால்களை ட்ராக் செய்கிறார். இது சட்டப்படி அடுத்தவர் உரிமையில் தலையிடுவது ஆகும். நான் ஒரே சிம்கார்டு வைத்து பேசுகிறேன். அவரோ 10 சிம்கார்டு வைத்து வேறு நம்பர்களிலிருந்து பேசி டாச்சர் செய்கிறார். அவர் வீட்டு முகவரிகூட எனக்குத் தெரியாது சொந்த ஊர் காஞ்சிபுரம் என்று கூறியதாக நினைக்கிறேன் நான் போனதில்லை.
இப்போது இவ்வளவு ஆன பிறகும் ஏன் போலீசுக்குப் போகவில்லை என்று இப்போது நீங்கள் நினைக்கலாம். போனால் நமக்கும்தானே அசிங்கம் என்று நினைத்தேன். நான் பலமுறை புகார் கொடுக்க நினைத்தபோது ‘உண்மை’ பட கேமராமேன் அன்பு ஸ்ரீராம் போன்ற நண்பர்கள் தடுத்து சமாதானம் செய்து விடுவார்கள். இது பற்றி நடிகர் சங்கத்திலும் திரு ராதாரவி அவர்களிடம் புகார் கொடுத்துள்ளேன். ஆனால் ரவிகுமாரோ விசாரணைக்கு வரவே இல்லை.
ரவிகுமாரின் தொல்லை தாங்காமல் நான் தற்கொலைக்கு முயன்று தூக்க மாத்திரை சாப்பிட்டேன். ஆனால் அவரோ எல்லோரையும் முந்திக் கொண்டு செய்திகளை பரப்பி விட்டார். சுஜிபாலாவுக்கு ஒன்றுமில்லை… வெறும் காய்ச்சல் என்று செய்தி வந்தது. ‘இந்தப் பிரச்சினை பற்றி இருவரும் மீடியாவை ஒன்றாகச் சந்திப்போம்…’ என்றேன். ஆனால் அவர் வரவே இல்லை.
‘உன்னைப் பழி வாங்காமல் விடமாட்டேன். தொடர்ந்து அசிங்கப்படுத்துவேன்’ என்று மிரட்டி வருகிறார். வெளியே சொன்னால் அசிங்கம் என்று நான் அமைதியாக இருந்ததை, என் பலவீனமாக நினைத்தார். பொறுமை எல்லை மீறிப் போகவே இப்போதுதான் போலீசில் புகார் கொடுத்துள்ளேன்…”
இவ்வாறு சுஜிபாலா கூறினார். பேட்டியின்போது இந்த வழக்கு தொடர்பான விளக்கங்களை வக்கீல் டேவிட்ராஜ் உடன் இருந்து தெரிவித்தார்.
குறிப்பு : ரவிக்குமார் தன்னை போனில் மிரட்டியதாகக் குறிப்பிட்ட செல்போன் பேச்சின் பதிவை மீடியாக்களிடம் சுஜிபாலா போட்டுக் காட்டியிருக்கிறார். அப்பேச்சு காதைக் கூச வைக்கும்படி இருந்த்தாம்.