ரஜினியுடன் சேர்ந்து நடித்தது ஒன்றரை நாள்தான்-தீபிகா படுகோனே பேட்டி..!

ரஜினியுடன் சேர்ந்து நடித்தது ஒன்றரை நாள்தான்-தீபிகா படுகோனே பேட்டி..!

‘கோச்சடையான்’ ஹிந்தி பதிப்பின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனே கலந்து கொள்ளாதது கொஞ்சம் வியப்பைத் தந்தது. அதற்கான காரணத்தையும், படத்தில் நடிக்கும்போது ரஜினியுடன் தனக்கேற்பட்ட அனுபவத்தையும் நேற்று மும்பையில் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார் நடிகை தீபிகா படுகோனே..!

“மும்பையில் ‘கோச்சடையான்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி. அப்போது நான் ‘ஹேப்பி நியூ இயர்’ படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ள இயலவில்லை.

‘கோச்சடையான்’ படப்பிடிப்பில் சக நடிகர்கள் இல்லாமல் நாங்கள் படப்பிடிப்பை நடத்தினோம். இதன் காரணமாக என்னால் ரஜினிகாந்துடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. இருப்பினும், எனக்கு அவருடன் பேச ஒன்றரை நாள்தான் கிடைத்தது. அவருடன் இருந்த அந்த நேரத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். ரஜினிகாந்தின் எளிமையையும், பெருந்தன்மையையும் என்னுடன் எடுத்து சென்றேன். அதை தொடர்ந்து பின்பற்றியும் வருகிறேன்.

படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் உற்சாகமாக இருப்பார். முழுசக்தியையும் ஒருங்கிணைத்து பணியாற்றுவார். எல்லாரையும் இன்முகத்தோடு வரவேற்பார். சவுந்தர்யாவை தனது மகள் என்று கருதாமல், இயக்குனராகவே பாவித்து அவர் சொன்னதை எல்லாம் கேட்டார். தொழிலில் அவருக்கு இருந்த ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்தது.

நிறைய ஆண்டுகள் சினிமாவில் நடித்தபோதும்கூட சினிமா மீதான ரஜினிகாந்தின் ஈடுபாடும், ஆர்வமும் இன்னமும் கொஞ்சம்கூட குறையவில்லை. அவரது எளிமையும், ஆர்வமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் அவரை ரசிக்கிறேன். ரஜினிகாந்தும், அமிதாப்பச்சனும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை மிகவும் ஈடுபாட்டுடன் முடிப்பார்கள். அவர்களது கண்களில் ஆர்வத்தை காணலாம்.

அதிநவீன தொழில்நுட்பம் மிக்க இந்த படத்தில் பணியாற்றுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. படப்பிடிப்பின்போது, எனது முகத்தின் வலது பக்கத்தில் கேமரா இருக்கும். நான் மாடிப்படிகளில் ஏற வேண்டும் எனில், மாடிப்படிகள் அங்கு இல்லை என்பதை முதலில் நான் உணர வேண்டும். மேலும், ஏதேனும் ஒன்றை தொட வேண்டும் என்றால், அது எந்த மாதிரியானது என்பதை உணர வேண்டும். இது எனக்கு மிகவும் சவாலாக விளங்கியது. படத்தில் இளவரசியாக நடித்து உள்ளேன். இந்த படம் எனது கற்பனைத் திறனை முழுவதுமாக பயன்படுத்த தூண்டியது…” என்றார் தீபிகா. 

Our Score