full screen background image

பிரபல நடிகை ‘நல்லெண்ணெய்’ சித்ரா திடீர் மரணம்

பிரபல நடிகை ‘நல்லெண்ணெய்’ சித்ரா திடீர் மரணம்

பிரபல தமிழ் திரைப்பட நடிகையான சித்ரா இன்று அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.

1975-ம் ஆண்டு ’அபூர்வ ராகங்கள்’ படத்தில்  கே.பாலசந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. தொடர்ந்து தமிழ்ப் படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்தவர், மலையாள மொழிப் படங்களில்தான் அதிகமாக நாயகியாக நடித்துள்ளார்.

தமிழில் என் தங்கச்சி படிச்சவ’, ‘நினைவுச் சின்னம்’, ‘ஊர்க்காவலன்’, ‘சேரன் பாண்டியன்’, ‘பொண்டாட்டி ராஜ்யம்’, ‘சின்னவர்’, ‘கோபாலா கோபாலா’, ‘கபடி கபடி’ ஆகிய குறிப்பிடத்தக்க படங்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் சித்ரா.

மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி, முகேஷ், சுரேஷ்கோபி உள்ளிட்ட பல பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

மேலும் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். சில டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழில் அவர் நடித்த படங்களில் ‘சேரன் பாண்டியன்’ படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த கதாபாத்திரம் அப்போது பேசப்பட்டது. ‘பொண்டாட்டி ராஜ்யம்’ படத்தில் தனது தங்கையான ரஞ்சிதாவிடம் “பாரதி ஒரு நிமிஷம் உள்ள வாயேன்” என்று இவர் பேசும் வசனம் அந்தப் படம் வந்த புதிதில் மிகப் பெரிய அளவுக்கு டிரெண்ட்டிங்கானது. இதேபோல் ‘சின்னவர்’ படத்தில் வாகை சந்திரசேகருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த கதாபாத்திரமும் பேசப்பட்டது.

இதையெல்லாம் தாண்டி ஒரு நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்தபோது அந்த விளம்பரம் திடீரென்று மிகப் பெரிய அளவுக்கு சக்ஸஸ் ஆனது. “வாங்கிட்டு வாங்கன்னா வாங்கிட்டு வாங்க..” என்று அந்த விளம்பரத்தில் சொல்லும் சித்ராவின் வசனம் இன்றுவரையிலும் தமிழகத்தின் வீடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதனால் அவர் இப்போதுவரையிலும் நல்லெண்ணெய் சித்ரா’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தார்.

திருமணத்துக்கு பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் குடும்பத்துடன் சென்னையில் செட்டிலாகிவிட்டார். சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சென்னை சாலிகிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

நடிகை சித்ராவுக்கு விஜயராகவன் என்ற கணவரும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர். சித்ரா இடையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார். 

தற்போது மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன் என்று சொல்லி நடிக்க வந்தவர்,  கடைசியாக “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா” என்ற படத்தில் ஃப்ளாஷ் பேக் காட்சியில் பள்ளி மாணவியாக நடித்தார். அந்தப் படம் கடந்த கடந்த ஆண்டு வெளியானது.

சித்ராவுக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.

இன்று மாலை 5 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிறப்பால் மலையாளியான சித்ரா, மலையாளிகளின் மிகப் பெரிய பண்டிகையான ஓணம் பண்டிகையன்று இறந்ததை நினைத்து அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் பெரிதும் வருந்துகின்றனர்.

சித்ராவின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Our Score