“சினிமா தியேட்டர்களைத் திறக்கலாம்” – தமிழக அரசு அனுமதி அளித்தது

“சினிமா தியேட்டர்களைத் திறக்கலாம்” – தமிழக அரசு அனுமதி அளித்தது

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் சினிமா தொழிலே நசிந்து போனது.

கடந்த ஒரு மாத காலமாகத்தான் தமிழக அரசு அளித்த அனுமதியின்பேரில் படப்பிடிப்புகள் மட்டும் மும்முரமாக நடந்து வருகிறது. படங்களின் பின்னணி வேலைகளுக்கும் அரசு அனுமதியளித்துவிட்டது.

ஆனாலும், சினிமா தியேட்டர்கள் திறந்தால் மட்டும்தான் திரைப்படத் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலை இருந்தது. தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர்கூட சமீபத்தில் செய்தித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து தியேட்டர்களை திறக்க அனுமதியளிக்கும்படி கோரிக்கை வைத்தனர்.

தற்போதுதான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது. தினத்திற்கு 1700-ஆகவும், சாவு எண்ணிக்கை 30-ல் இருந்து 35-க்குள்ளும் இருந்து வருகிறது.

இதனால் தியேட்டர்களை திறக்க அனுமதி கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அதற்கேற்ப இன்றைக்கு 4 மாதங்கள் கழித்து தமிழக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவில் தமிழகம் முழுவதும் இருக்கும் மூடப்பட்ட திரையரங்குகள் வரும் ஆகஸ்ட் 23, திங்கள்கிழமை முதல் 50 சதவிகித பார்வையாளர்களுடன் செயல்படலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள நோய்த் தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை அனைத்துத் திரையரங்குகளும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லியுள்ளது. தியேட்டர்களில் பணியாற்றும் அனைத்து பணியாட்களும் கண்டிப்பாக 2 தடுப்பு ஊசிகளையும் போட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்போது வெறும் 2 நாட்கள் மட்டுமே உள்ள இடைவெளியில் தியேட்டர்களைத் திறக்க கால அவகாசம் கொடுத்திருக்கிறது என்றாலும் அதன் பின்பு மெதுவாகத் திறந்து கொள்வது அந்தந்த தியேட்டர் உரிமையாளர்களின் உரிமை என்பதால் அனைத்துத் தியேட்டர்களும் வரும் செவ்வாய்கிழமையன்று திறக்கப்படாது என்றே தெரிகிறது.

முதலில் தியேட்டர்களைத் திறந்த சுத்தம் செய்ய வேண்டும். கிருமி நாசினி தெளிக்க வேண்டும். நோய்த் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பணியாளர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டிருக்கிறார்களா என்று செக் செய்ய வேண்டும். இவ்வளவு வேலைகளையும் 2 நாட்களில் முடிப்பது கடினம்.

எல்லாவற்றுக்கும் கடைசியாக எந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனது படத்தைத் தயாராக இரண்டே நாளில் திரையிடும் அளவுக்கு வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஆக, தியேட்டர்கள் முழு மூச்சாக இயங்கத் துவங்க இன்னும் ஒரு வார காலம் ஆகும் என்றே எதிர்பார்க்கலாம்.

Our Score