கேரளாவின் பரபரப்பான நடிகை கடத்தப்பட்ட வழக்கினை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞரே நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
2017-ம் ஆண்டு பிரபல மலையாள நடிகையொருவர் நள்ளிரவில் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது சிலரால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இந்த வழக்கில் அந்த நடிகையின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்தச் சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்ததாக கேரளாவின் முன்னணி நடிகரான திலீப்பும் கைது செய்யப்பட்டு 85 நாட்கள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.
இந்த வழக்கு தற்போது எர்ணாகுளத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணை நீதிமன்றத்துக்கு ஒரு மொட்டை கடிதம் வந்துள்ளது. அதில் அரசு தரப்பு வக்கீலான சுரேஷ் என்பவருக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. அந்தக் கடிதத்தை நீதிபதி ஹனிரோஸ் நீதிமன்றத்தில் வாசித்துள்ளார். ஆனால், அப்போது வக்கீல் சுரேஷ் நீதிமன்றத்தில் இல்லை.
இந்நிலையில், வக்கீல் சுரேஷ் விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘மொட்டை கடிதத்தில் இருந்த தகவல்கள் குறித்து நான் இல்லாதபோது நீதிபதி நீதிமன்றத்தில் வாசித்தது தவறாகும். இந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற அனுமதி அளிக்க வேண்டும். ஏற்கனவே, இந்த வழக்கில் ஒரு சாட்சியை மிரட்டிய வழக்கில் நடிகர் திலீபின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு இதுவரையிலும் இந்த நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படாமலேயே இருக்கிறது…’ என கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









